வெள்ளி, 12 டிசம்பர், 2014

ரஜினியை விமர்சித்ததால் முகநூல் Facebook கணக்கு முடக்கமா? BBC யில் அருண் பேட்டி!

நடிகர் ரஜிகாந்த்தை விமர்சித்து பேஸ் புக் எனப்படும் முகநூலில் பதிவுகள் எழுதியதால் தனது முகநூல் பக்கத்தின் கணக்கு திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டதாக, தமிழ் ஸ்டுடியோ என்கிற மாற்று சினிமாவுக்கான இயக்கத்தின் நிறுவனர் எம் அருண் புகார் செய்திருக்கிறார். ரஜினிகாந்த்தை விமர்சித்து தான் இரண்டு முகநூல் பதிவுகளை எழுதியதாகவும், அந்த இரு பதிவுகளுக்கும் எதிராக ஆயிரக்கணக்கான புகார்கள் சில மணி நேரங்களில் தமக்கு வந்ததாக பேஸ் புக் நிறுவனம் தெரிவித்ததாகவும், இப்படி ஆயிரக்கணக்கான புகார்கள் ஒரே சமயத்தில் வரும் அளவுக்கு ஒரு தனி நபரின் முகநூல் கணக்கு இயங்க முடியாது என்றும் அதை ஒரு பிரபலஸ்தர் அல்லது ஒரு நிறுவனத்துக்கான முகநூல் பக்கமாக மட்டுமே இனி அருண் தொடர்ந்து நடத்தமுடியும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பிபிசி தமிழோசைக்கு அருண் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

பேஸ் புக் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் தனது முகநூல் பக்கத்தில் தனக்கிருந்த ஏராளமான நண்பர்களை தான் திடீரென இழந்ததுடன், தன்னுடைய ஏராளமான பதிவுகளையும் இழந்திருப்பதாகவும் அருண் கூறினார். இதுநாள் வரை தான் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் பல்வேறு நபர்களை விமர்சித்து முகநூலில் எழுதியிருப்பதாக தெரிவித்த அருண், நடிகர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், முன்னாள் முதல்வர்கள் மு கருணாநிதி, ஜெ ஜெயலலிதா என பலரையும் விமர்சித்த போது தனக்கு பெரிய அச்சுறுத்தல்கள் எவையும் வரவில்லை என்று கூறினார்.
ஆனால் முன்பொருமுறை தனது முகநூல் பதிவொன்றில் எம்.ஜி.ஆர் பற்றி ஒரே ஒருமுறை ஒரே ஒரு வரியில் ஒரு வார்த்தை விமர்சித்து எழுதியதற்காக, அரசின் பெரிய பதவியில் இருப்பவர்கள் முதல் பல்வேறு அதிகாரிகள் வரை தம்மைக் கடுமையாக கடிந்துக் கொண்டதாக அருண் தெரிவித்தார்.
அதற்கு அடுத்ததாக, ரஜினிகாந்த் குறித்த தனது இரண்டு விமர்சன பதிவுகளுக்காக நேற்றும் (புதன்கிழமையும்) அதற்கு முந்தைய நாளும் (செவ்வாய்க்கிழமையும்) தனக்கு அதிகபட்ச விமர்சனங்களும், கண்டனங்களும், அச்சுறுத்தல்களும், ஆபாச வசவுகளும் முகநூலில் வந்ததாகவும், அதன் இறுதியில் தன்னுடைய முகநூல் கணக்கே முடக்கப்பட்டதாகவும் அருண் தெரிவித்தார்.
அருணின் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பேஸ் புக் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகளிடம் பதில் பெற பிபிசி தமிழோசையின் சார்பில் முயன்றோம். இதுவரை அவர்களின் பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளை, முகநூல் கணக்கு முடக்கத்திற்கான விதிகள் மேற்குலக நாடுகளின் சமூக சூழலுக்கேற்ப வகுக்கப்பட்டிருப்பதால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் சமூக யதார்த்தத்திற்கேற்ப அவற்றில் மாற்றம் தேவை என்கிறார் லண்டன் பல்கலைக்கழக ஊடகத்துறை ஆய்வாளர் முரளி சண்முகவேலன்.
முகநூலின் பல்வேறு விதிகள் மேற்குலக நாடுகளின் சமூக சூழலுக்கேற்ப வகுக்கப்பட்டிருப்பதால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் சமூக யதார்த்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப முகநூல் விதிகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார் முரளி சண்முகவேலன்.bbc.com

கருத்துகள் இல்லை: