திங்கள், 22 டிசம்பர், 2014

அமித் ஷா :முதல்வர் வேட்பாளரை (நிர்மலா சீதாராமன்?)அறிவித்து விட்டு சட்டபேரவை தேர்தலை சந்திப்போம்

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டு 2016 சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள அவர், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசியது:
நாடு முழுவதும் தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் 10 கோடி உறுப்பினர்களையும், தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களையும் புதிதாகச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இந்த இலக்கு எட்டப்பட்டால், தமிழகத்தில் பிரதான கட்சியாக பாஜக மாறும்.
திமுக, அதிமுக ஆட்சியால் பின்னடைவு: திமுகவும், அதிமுகவும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இதனால் தமிழகம் பலவிதங்களில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

11-ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருந்தது. ஆனால், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 8.5 சதவீதத்தோடு நின்றுவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பாஜக ஆளும் மாநிலங்களில் 1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கூட்டணி வலுவாக உள்ளது: தமிழகத்தில் பாஜக தலைமையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும். கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலைச் சந்திப்போம். பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் வேட்பாளராக முயற்சிப்போம். ஆனால், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாகவே உள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி பாஜக உறுப்பினர். கொள்கை முடிவுகளைப் பொருத்தவரை கட்சியின் தலைவரும், செய்தித் தொடர்பாளரும் சொல்வதுதான் பாஜகவின் நிலைப்பாடு.
நதிநீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளை பேசி தீர்வு கண்ட அனுபவம் பாஜகவுக்கு உள்ளது. எனவே, இப்போதும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
மீனவர் பிரச்னையில் முன்னேற்றம்: கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்போது அதுபோல நடப்பதில்லை. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் மோடி அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீனவர் பிரச்னையில் இப்போதும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற பிரச்னைகளை ஒரு குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயித்து அதற்குள் தீர்வு காண முடியாது என்றார் அமித் ஷா.
பேட்டியின்போது பாஜக தேசியப் பொதுச்செயலாளர் பி. முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, மூத்த தலைவர் இல. கணேசன், மாநில துணைத் தலைவர் எம். சக்கரவர்த்தி, மாநில அலுவலகச் செயலாளர் சர்வோத்தமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.tamil.hindu.com

கருத்துகள் இல்லை: