செவ்வாய், 23 டிசம்பர், 2014

தனுஷ்கோடி புயல் தாக்கி 50 ஆண்டுகள் நிறைவு: உயிர்தப்பிய ரெயில் டிரைவர் உருக்கமான பேட்டி

இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடி நகரத்தை கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கடுமையான புயல் தாக்கியது. புயல் கரையை கடந்தபோது, எழுந்த ராட்சத அலை அந்த நகரத்தை மூழ்கடித்தது. இதில், ஏராளமானோர் பலியாகினர். சென்னையில் இருந்து சென்ற போட் மெயில் என்ற ரெயிலும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் வாணிப நகரமாக இருந்த தனுஷ்கோடி இந்த புயலில் முற்றிலுமாக அழிந்து விட்டது. புயலில் இருந்து தப்பித்த மானாமதுரை ரெயில்வே காலனியில் இருக்கும் ஓய்வு பெற்ற ரெயில் என்ஜின் டிரைவரான ராமமூர்த்தி (வயது 85) சோகத்துடன் கூறியதாவது:–
தனுஷ்கோடி ரெயில் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தபோது நான் உதவி டிரைவராக இருந்தேன். தினமும் சென்னையில் இருந்து இரவில் வரும் ரெயிலில் பணிபுரிந்து வந்தேன். அந்த ரெயிலை ‘போட் மெயில்’ என்று அழைப்பார்கள்.

புயலுக்கு முன்பு பலமுறை தனுஷ்கோடி செல்லும் ரெயிலில் உதவி டிரைவராக சென்றுள்ளேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் விபத்தில் சிக்கிய ரெயிலில் நான் பணிபுரிய இருந்தேன்.
அப்போது மற்றொரு உதவி டிரைவரான எனது நண்பர் திருப்பதி, நான் தனுஷ்கோடி செல்கிறேன் என்று விடாப்பிடியாக சென்று விட்டார். நான் ராமேசுவரம் செல்லும் ரெயிலில் உதவி டிரைவாக சென்று விட்டேன்.
புயலில் நான் சென்று சிக்கவேண்டிய சூழ்நிலையில், எனது நண்பர் திருப்பதி சென்று புயலுக்கு பலியாகி விட்டார். இந்த சம்பவம் முடிந்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: