சென்னை: சேரன் மகள் தாமினி கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் இயக்குநர்
சேரன் மற்றும் காதலன் சந்துரு இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.
இந்த வழக்குகளின் கீழ் இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பதை போலீசார்
இன்று முடிவு செய்வார்கள்.
இயக்குநர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம், திரை உலகில் மட்டும்
அல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது
படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழும் சேரனுக்கு ஆதரவான நிலையை
மக்கள் மத்தியில் காண முடிகிறது.
சேரன் மகள் தாமினி கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் தனது காதலன் சந்துரு மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த
புகாரில், சந்துரு தன்னை மிரட்டி தொல்லை படுத்துகிறார் என்றும், தனது
பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.
அதே தாமினி, தனது தந்தை சேரன் மீது, கடந்த 1-ந் தேதி அன்று ஒரு புகாரை அதே
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை
சேரன், தனது காதலன் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக
தெரிவித்துள்ளார்.
20 நாட்களில் முரண்பட்ட 2 புகார்களை தாமினி போலீசில் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் இயக்குநர் சேரன், சந்துரு மீது தனியாக ஒரு புகார் மனுவை
போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து கொடுத்தார். அந்த மனுவில், சந்துரு தவறான
பழக்கம் உள்ளவர் என்றும், ஏற்கனவே இரண்டு, மூன்று பெண்களை காதலித்து
ஏமாற்றியவர் என்றும், எனவே அவரால் தனது மகளுக்கு ஆபத்து இருப்பதாகவும்,
மகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த 3 புகார் மனுக்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்
விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ்
நிலையத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் சேரன், தாமினி, சந்துரு ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர்.
தாமினியிடம் விசாரித்தபோது, அவர் திரும்ப, திரும்ப ஒரே கருத்தைதான்
சொன்னார். காதலன் சந்துருவுடன் என்னை அனுப்பி வைக்க வேண்டும், அவர்
எப்படிப்பட்டவராக இருந்தாலும், நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்,
எனது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே முதலில் சந்துரு மீது புகார்
கொடுத்து விட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
காதலன் சந்துரு, சேரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்றும்,
தாமினி மீது வைத்துள்ள காதல் உண்மையானது என்றும், எனவே தாமினியை தனக்கு
திருமணம் செய்து வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
கூறினார்.
இயக்குனர் சேரன், மகளின் காதலை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மகளின்
காதலன் தவறான பழக்கம் உள்ளவர் என்பதால் எதிர்ப்பதாகவும் சொன்னார். ஒரு
பெண்ணிடம் பழகி ஏமாற்றியதாக சந்துரு மீது சென்னை கே.கே.நகர் போலீசில்
ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது என்றும், எனது மூத்த மகளை கூட தனது காதல்
வலையில் சிக்கவைக்க சந்துரு முயற்சித்தார் என்றும், அவர் நல்லவர் என்றால்
ஒரு வருடம் காத்திருந்து, அவருக்கென்று ஒரு நல்ல தொழிலை அமைத்துக்கொண்டு
வரட்டும், அதற்கு பிறகு வேண்டுமானால், எனது மகளை அவருக்கு திருமணம் செய்து
கொடுப்பது பற்றி யோசிப்பேன் என்றும், இப்போது எனது மகள் படிப்பை தொடர,
என்னுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதனால் தாமினியை யாருடன் அனுப்பி வைப்பது என்பதில் போலீசார் ஒரு முடிவுக்கு
வரமுடியவில்லை. எனவே யாருக்கும் இல்லாமல், தாமினியை அரசு காப்பகத்தில்
தங்க வைத்தனர். ஒரு நாள் காலஅவகாசம் கொடுத்து, நன்றாக தீவிரமாக சிந்தித்து
ஒரு முடிவுக்கு வரும்படி, தாமினிக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.
2 வழக்குகள் பதிவு
இதற்கிடையில் இந்த பிரச்சினையில் அதிரடி திருப்பமாக, தாமினி கொடுத்த 2
புகார்கள் அடிப்படையில் சேரன் மீது கொலை மிரட்டல் வழக்கும், சந்துரு மீது
கொலை மிரட்டல் உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும் சென்னை மத்திய
குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் சந்துரு வீட்டுக்கு
போலீஸ் காவலும் போடப்பட்டது.
இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி இன்று தெரியும்.
தாமினியின் ஆதரவு தனக்கு இருப்பதால், சந்துரு தரப்பில் நீதிமன்றத்தை நாட
முடிவு செய்துள்ளனர்.
சேரனை பொறுத்தமட்டில் இப்போதைக்கு மகள் ஆதரவு அவருக்கு இல்லாவிட்டாலும்,
ஒரு தகப்பன் என்ற முறையில் அவர் பக்கம் அனுதாபமும், ஆதரவும் கூடுதலாக
உள்ளது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக