உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலம் இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், உலகின் 3ம் தரநிலை வீராங்கனை ரட்சனோக் இன்டானனை (தாய்லாந்து) சிந்து எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ரட்சனோக் முன்னிலையில் இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து சிந்து போராடினார். ஆனால் அடுத்தடுத்து 5 புள்ளிகளை எடுத்து அசத்திய ரட்சனோக், முதல் செட்டை எளிதாக வென்றார். அதே வேகத்தில் 2-வது செட்டையும் கைப்பற்றினார். 35 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இப்போட்டியில், 10-21, 13-21 என்ற செட்கணக்கில் சிந்து தோல்வியடைந்தார். இதனால் அவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
" சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், முன்னணி விரர் பருபள்ளி காஷ்யப் ஆகியோர் காலிறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில் வளர்ந்து வரும் வீராங்கனை பி.வி.சிந்து மட்டும் பதக்கம் வெல்லும் போட்டியில் இருந்தார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், உலகத் தரநிலையில் 8-ம் இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை ஷிஜியான் வாங்கை வென்ற சிந்து, பதக்கத்தை உறுதி செய்தார். அத்துடன் தனி நபர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் அவர் எட்டினார்.
இதற்கு முன்னர் கடந்த 1983-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பிரகாஷ் படுகோனே வெண்கலம் வென்றார். 2011ல் இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலம் வென்றது. இன்றைய அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ரட்சனோக், நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் உலகின் நம்பர்-1 வீராங்கனை லீ சுவேருயியை (சீனா) எதிர்கொள்கிறார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக