சென்னை: நில விற்பனை விவகாரத்தில் தன் மீது பொய் வழக்கு
போடப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து தலைமை செயலாளரிடம் புகார் செய்யப்
போவதாகவும் இசையமைப்பார் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்.
சுப்பிரமணியபுரம், ஈசன் உள்பட சில திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர் ஜேம்ஸ்
வசந்தன். இவர் மீது ராதா வேணு பிரசாத் (வயது 65) என்பவர் நீலாங்கரை
போலீசில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில், கொலை மிரட்டல், பெண்
வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜேம்ஸ் வசந்தன் கடந்த 4-ந் தேதி கைது
செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ஜேம்ஸ்வசந்தன், தன் மனைவி ஹேமா
மற்றும் சின்னத்திரை கலைஞர்களுடன் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு
பேட்டியளித்தார். அப்போது ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது:
எங்களுக்கு பாலவாக்கத்தில் சொந்தமாக ஒரு கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த
நிலத்தை ராதா வேணுபிரசாத் விலைக்கு கேட்டார். நாங்கள் அவருக்கு விற்பனை
செய்ய மறுத்து விட்டோம்.
அந்த நிலத்தில் 2011-ம் ஆண்டு வீடு கட்டத் தொடங்கினோம். இதனால், எங்கள்
மீது ராதா வேணுபிரசாத்துக்கு பகை உணர்வு ஏற்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு
நாளும் அவர் எங்களுக்கு மன ரீதியாக பல தொந்தரவுகளை கொடுக்கத்
தொடங்கினார்.வீடுகட்ட திட்ட அனுமதி பெற விடாமல் தடுத்தார்.
எனினும் நாங்கள் கடுமையாக போராடி திட்ட அனுமதி பெற்று வீட்டை கட்டி
முடித்தோம். தற்போது, அங்கு வசித்து வருகிறோம்.இந்த நிலையில், மனதில்
பகையுடன் இருக்கும் ராதா வேணுபிரசாத், தன் செல்வாக்கை பயன்படுத்தி, ஒரு
அசிங்கமான புகாரை கொடுத்து, என்னை கைது செய்ய வைத்துள்ளார். என் மீது கெட்ட
நோக்கத்துடன், பொய்யான கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமை செயலாளரிடம் மனு
எதற்காக கைது செய்யப்பட்டுள்ளேன் என்பதை கூட தெரிவிக்காமல், போலீசார் என்னை
கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
இந்த சம்பவம் அனைத்தையும் சுதந்திரமான அமைப்பை கொண்டு விசாரணை நடத்தி,
உண்மை நிலவரத்தை கண்டறிந்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுத்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று தலைமை செயலாளரை நேரில்
சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்," என்றார்
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக