சனி, 10 ஆகஸ்ட், 2013

கிரானைட் முறைகேடு :பி.ஆர்.பி நிறுவனம் மீது ரூ1,061 கோடி இழப்பு வழக்கு!

மதுரை: பி.ஆர்.பி. நிறுவனம் முறைகேடாக கிரனைட் கற்களைவெட்டி எடுத்ததில், அரசுக்கு ஆயிரத்து 61 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் மீது மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள கிரானைட் முறைகேடு வழக்குகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கீழையூர், கீழவளவு மற்றும் பூரண்குளம் பகுதிகளில், பி.ஆர்.பி. நிறுவனம், முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த காரணத்தால், அரசுக்கு சுமார் ஆயிரத்து 61 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த குற்றச்சாட்டின் பேரில், பி.ஆர்.பி. நிறுவனம் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, மதுரை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை சர்வதேச அளவில் ஏலம் விடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக, அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது: கிரானைட் குவாரிகளுக்கு வெடி மருந்து சப்ளை செய்த சிவகங்கை, சேலம் மாவட்ட நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி., ஒலிம்பஸ், சிந்து, மதுரா உள்ளிட்ட நிறுவனங்கள் மீது 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: