புதன், 30 ஜனவரி, 2013

கொலைப் பழி சுமந்து அப்பாவிச் சிறுமியாக சிறைப்பட்டவளை காக்க முடியாத கையாலாகாத உலக மானிடம்

ஶ்ரீதரன் -ஞானசக்தி வீட்டுப் பணிப் பெண்ணாக தனது பதின்ம வயதில் சவுதிக்கு அனுப்பப்பட்ட மூதூர் வறிய குடும்பத்து பெண் பிள்ளையின் தலை சீவப்பட்டது. சீவியது யாருமல்ல. சவுதியின் நீதித்துறை. வீட்டுப் பணிப்பெண்ணாக பிள்ளை பராமரிப்பாளராக வேலைசெய்த போது பால் பருக்குகையில் குழந்தை இறந்து விட்டது.
இதற்காக இந்த சிறுமி மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது.
பகுத்தறிவிற்கு ஒவ்வாத ,மனித நியாயத்திற்கு ஒவ்வாத வகையில் இந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.எத்தனையோ கெஞ்சல்கள் மன்றாட்டங்கள் விடுத்த போதும் சவுதி அரசோ நீதித் துறையோ கருணை காட்டவில்லை.
உலகப் பொது நியாயம் ஒன்றிருக்கிறது. இந்த பெண்ணின் மரணத்தை இதுபோன்றவற்றை சகஜமாக ஏற்றுக் கொண்டு நாம் மனிதரெனக் கொண்டிங்கு வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது அராஜகமாக பெண்களுக் கெதிரான  வன்கொடுமை செய்பவர்களின் அறிவு மட்டத்திற்கும் மதம் ,சட்டம்-நீதியின் பெயரில் ஈவிரக்கமில்லாத மனித தன்மையற்ற தண்டனை வழங்கும் அதிகார வர்க்கத்தின் அற உணர்வு மட்டத்திற்கும் என்ன வித்தியாசம்.
இதை தடுத்து நிறுத்த முடியாத உலகம் வெட்கித்தலை குனிய வேண்டும். சிறார்களை பெண்களை இத்தகைய ஆபத்தான சூழலை நோக்கி வேலைக்கனுப்புவதை நிறுத்த வேண்டும். இந்த சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதுவும் அல்லாமல் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத, எந்த சட்ட ரீதியான உத்தரவாதமும் இல்லாத நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வதை நிறுத்த வேண்டும் . அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான சட்டதிட்டங்களை நீக்குவதற்கு உலகளாவிய அழுத்தங்கள் அவசியம். 100 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பார்கள். ஆனால் சிறுமியாக சிறைப்பட்ட பெண்ணுக்கு சிரச்சேதம் உலகமே பார்த்துக் கொண்டிருக்க. நாம் இன்றும் பாமரராய் விலங்குகளாய் வாழ்கிறோம்.
உலகின் மனச்சாட்சி  உலுப்பப் படவேண்டும். துரியோதனன் சபையில் பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டபோது ஊரும் சபையும் கையாலாகாததாக  நெட்டை மரமாக நின்றிருந்தது. ஆனால் ரிசானாவுக்கு என்னநேரப்போகிறது எனறு இந்த உலகத்திற்கே தெரியும். எங்கே தொலைந்தது மானிடம்.இந்த காட்டுமிராண்டித்தனம் அடியோடு அகல வேண்டும்.
நாகரிக உலகம் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யவேண்டும். பாரதூரமான குற்றவாளிகளாக இருந்தால் கூட. தூக்குத் தண்டனை கூடாது என்ற கருத்து வலுவடைந்து வரும் காலத்தில் தலிபான் பாணி தண்டனையை விட கொடூரமான தண்டனையை (தலிபான்கள் இஸ்லாத்தின் பெயரால் கடந்த 2 தசாப்தங்களுக்குமேலாக சிறுமியர்-பெண்களுக்கெதிராக இளைத்துவரும் கொடூரங்கள் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருப்பவை)சிறுமி மீது திணித்து 7 வருடங்களின் பின் சிரச்சேதம் செய்வதென்றால் இது என்ன நீதி.எந்த மதமும் மனித குலத்தின மீது சாரம்சமாக அன்பு கருணையைத் தான் போதிக்கின்றன. இஸ்லாம் அதற்கு விதிவிலக்கல்ல.
அதிகார வர்க்கங்கள் தமக்கு வசதியானவற்றை ம் அகங்காரத்துடன் ஈவிரக்கமின்றி கையாளுகின்றன. தமிழ் பாசிசமும் சிறுவர் சிறுமியரை கொலை களத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தது  வரலாறு. யாழ் நூலகம் பேரினவாதிகளால் எரிக்கபட்டபோது பேராசிரியர் நூமான் எழுதிய கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. 'நேற்று என் கனவில் புத்தபகவான் சுடப்பட்டிறந்தார் தம்மபதமும் சாம்பரானதே' என்று தனது கவிதை வரிகளில் பதிவு செய்தார். காந்தியடிகள் கோட்சேயால் படுகொலை செய்யபட்டதும்,  பாபர் மசூதி சங்கபரிவாரங்களால் எரிக்கப்பட்டதும் இலங்கையில் நாளாந்தம் நடக்கும் மதமேலாண்மை காழ்ப்புணர்வு செயற்பாடுகளும் மதங்களின் உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நடைபெறுபவை அல்ல. அதிகாரத்தின் கருவியாக, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சாதனமாக மதம் கீழ்மைப்படுத்தப்படுகிறது. மதத்தின் பேராலான சட்டதிட்டங்கள் நீதி என்பனவும் அவ்வாறுதான்.
அயர்லாந்தின் கருச்சிதைவு தடைச்சட்டம் ஒரு இந்தியப் பெண்ணின் உயிரை  பலிகொண்டது. இது அயர்லாந்துக்குள்ளேயும் வெளியேயும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.  அயர்லாந்தில் அந்த சட்டம் நீக்கப்பட்டு விட்டது.
ஆனால் ரிசானாவிற்கு  நிகழ்ந்தது இனி மேல்யாருக்கும் நிகழக் கூடாது. இந்த காட்டுமிராண்டி நியாயங்களையும் தண்டனைகளையும்  உலகின் எப்பகுதியலும் சகிக்கமுடியாது. இவ்வளவு கண்டனங்கள் விமர்சனங்களின் பின்னராவது  இந்த சட்டங்களின் மனித குல விரோத பகுத்தறிவிற்கு ஒவ்வாத இருண்ட பக்கங்களை நீக்கவேண்டும்.
‘ புனலில் ஏடெதிர்செல்லெனச் செல்லுமே  புத்தனார் தலை தத்தெனத்தத்துமே' எமது சைவசமய பாட புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன.
புத்தபகவானின் கொள்கைகள் இலங்கையில் பின்பற்றப்பட்டிருந்தால் இங்கு இவ்வளவு இரத்தம் சிந்தியிருக்குமா?
காட்டுமிராண்டித்தனங்களை எமது சமய அறச்சூழலிலிருந்து அகலவேண்டும் .பல்லுக்குப் பல் இரத்திற்கு இரத்தம் சிலுவை யுத்த கால காட்டுமிராண்டித்தனம் இந்தக் காலத்திலுமா  வேண்டும். ஆனால் சிரச்சேதம்செய்யப்பட்ட சிறுமி அப்பாவியிலும் அப்பாவி. வறுமை அவளை தொலைதூரக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றது.
எல்லாம் மாற வேண்டும் .அநீதியான சமூகமும் மாறவேண்டும் எமது சிறுவர் சிறுமியரின் பாதுகாப்பான நல்வாழ்வுக்காக.
உலகத்தில் மனச்சாட்சி என்று ஒன்று இருக்கும் வரை அச்சிறுமியை எமது இதயத்தில் வைத்திருப்போம். அவளின் இறுதிக் குரலை கேட்க அவள் அருகில் மனிதாபிமானம் கொண்ட எவரும் இருக்கவில்லை தட்டத்தனியாக அவளது மரண ஓலம்  பாலைவன வெளியில் உலக மனச்சாட்சியை எள்ளி நகையாடியது.
மூதூரில் அவளுக்கு ஒரு சின்னக்காய்ச்சல் வந்திருந்தால் எத்தனை சொந்தங்கள் சுற்றி நின்றிருக்கும் .அன்பு அரவணைப்பு சிறுபராயம் எல்லாமே கொய்து எறியபட்டு காலில் மிதிபட்ட பூவாக.
பிற்போக்கான சகல மதக்கோட்பாடுகளின் முதல் தாக்குதல் இலக்கு பெண்கள் தான் . அதனால் தான் பெரியார் ஈ. வெ. ரா சாதிய பெண் விடுலைக்கான தனது போராட்டத்தில் மதங்கள் மீதான கடுமையான விமர்சனத்தை முன்நிறுத்தினார்.
மதம் -கலாச்சாரத்தின் பெயரில் நாளாந்தம் எத்தனைபடுகொலைகள் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் செய்தியாக வருவதில்லை
இந்த நிலை மாற நாம் எத்தனை ஜென்மம் காத்திருக்க வேண்டும்??
ஶ்ரீதரன் -ஞானசக்தி

கருத்துகள் இல்லை: