பீட்சா திரைப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் உள்ள திறமைசாலிகளுக்கு
குளுகோஸ் கொடுத்திருக்கிறது. புதுமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
இயக்கத்தில் வெளியான பீட்சா ரசிகர்களிடையே பெற்றுள்ள பெரும் வரவேற்பு
ஆரோக்கியமானது. சமீபகாலத்தில் இதுபோன்ற துல்லியமான திரைக்கதையுடன் எந்தவொரு
தமிழ் படமும் வந்ததாக ஞாபகமில்லை.
படத்தில் உள்ள அட்டகாசமான
ட்விஸ்ட்டுகள், காட்சிகளுக்கு தேவையான பயமுறுத்தும் இசை, துல்லியமான கேமரா
கோணங்கள், என அனைத்து டாப்பிங்குகளும் போட்ட டபுள் சீஸ் பீட்சாவை டெலிவரி
செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படம் வெளியான போது 100
திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டார்கள். வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து
இது 180 திரையரங்குகளாக அதிகரித்தது.இப்போது அதைவிட மகிழ்ச்சியாக பீட்சா கேங் சொல்லும் விஷயம், இந்தப் படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பதுதான்.
தமிழ் சினிமாவின் ‘ட்ரென்ட் செட்டர்கள்’ என்று கூறப்படும் மெகா டைரக்டர்களின் எந்தப் படத்தையும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய முடியாது. காரணம், அவை ஏற்கனவே மற்றொரு வெளிநாட்டு படத்தில் இருந்து சுட்டதுதானே!
கதையை காப்பி அடிப்பதை விடுங்கள், முருகதாஸ் – விஜய் கூட்டணியின் தீபாவளி ரிலீஸ் துப்பாக்கி படத்தின் போஸ்டரே, Richard Gere நடித்து 1982ம் ஆண்டு வெளியான An Officer and a Gentleman போஸ்டர்தான்! அதில் Richard Gere ஹீரோயினின் தொடையில் எந்த இடத்தில் பிடித்து தூக்குகிறார் என்பதை சரியாக ஸ்கேல் வைத்து அளந்ததுபோல விஜய்யும், நம்ம அம்மணியின் தொடையில் கை வைத்து தூக்கி போஸ்டர் அடிக்கும் அளவுக்கு அதி துல்லிய, சென்டிமீட்டர் தவறாத காப்பி.
முருகதாஸின் ஒரு அசிஸ்டென்ட் கையில் An Officer and a Gentleman போஸ்டருடனும், மற்றொரு அசிஸ்டென்ட் கையில ஸ்கேலுடனும் படப்பிடிப்பில் நின்றிருப்பார்கள் போலும்! இருந்தாலும் முருகதாஸ் ஒரிஜினல்தான்! ஆங்கிலப் படத்தில் ஹீரோயின் வெள்ளை தொப்பி போட்டிருந்ததை, இதில் வேறு கலரில் போட்டு தனித் தன்மையை நிரூபித்துள்ளார்
தமிழ் சினிமாவில், ஒரு படத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய முடியும் என்பது ஆச்சரிய விஷயம் அல்லவா? தமிழ் சினிமா என்றாலே காப்பி என்ற பெயரை மாற்றும் விஷயம் அல்லவா? அதுதான், பீட்சாவின் சிறப்பு.
பீட்சா படத்தின் தயாரிப்பாளர் “கடவுளின் அருளால் பீட்சா படத்தின் ஹாலிவுட் ரீமேக்கை தொடங்க பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்துள்ளது. பீட்சா படக்குழுவே ஹாலிவுட் தயாரிப்பிலும் பணியாற்றுவார்கள் என்று நினைக்கிறேன். ஹாலிவுட் நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்து இப்படம் தயாராகும். ஆங்கில நடிகர்கள், நடிகைகள் இப்படத்தில் நடிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அண்ணே மெகா டைரக்டர்களே.. பீட்சா ஆங்கிலப்படம் வெளியானவுடன் அந்த டி.வி.டி.யை பர்மா பஜாரில் வாங்கி விடாதீர்கள்! அது ஏற்கனவே தமிழில் வந்துவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக