ஞாயிறு, 28 அக்டோபர், 2012

ஒப்பந்தத்தை வாசிக்காமலே கையெழுத்து போட்டு விட்டேன் ஐயோ மின்பாதை இல்லைங்கோ

சென்னை:""வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வர பாதையே இல்லை என்பது, ஒப்பந்தங்கள் நிறைவேற்றிய பின்பு தான் தெரிய வந்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறுவது, அரசுக்கு முன்யோசனையே இல்லை என்பதை காட்டுகிறது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எதற்கெடுத்தாலும், தி.மு.க., அரசையும், மத்திய அரசையும் குறை கூறுவதே, முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேலையாக உள்ளது. தமிழகத்துக்கு துரோகம் இழைத்து விட்டனர் என கூறிக் கொண்டே உள்ளார். ஆட்சிக்கு வந்து, 18 மாதங்கள் ஆன நிலையிலும், முந்தைய அரசை குறை கூறிக் கொண்டு இருப்பதை, மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மின் பற்றாக்குறைக்கு பிறர் மீது பழி சுமத்திக் கொண்டே இருப்பதால், மின்சாரம் வந்துவிடாது. தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வர, குஜராத் அரசுடன் தமிழகம் ஒப்பந்தம் செய்து கொண்டதாம்; இதன் பின் தான், குஜராத்திலிருந்து மின்சாரம் கொண்டு வர பாதை இல்லை என்பது தெரிய வந்ததாம்.
முந்தைய தி.மு.க., அரசு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வர பாதை அமைக்கவில்லை. இதனால் தான், மின்சாரத்தை கொண்டு வர முடியவில்லை என, ஜெயலலிதா கூறுகிறார்.
தி.மு.க., ஆட்சியின்போது, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய தேவை எழவில்லை. அதனால், மின் பாதை அமைக்கவில்லை. இதற்கு, தி.மு.க., மீது குற்றம் சுமத்துவது சரியா? மின் பாதை இல்லாத நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் அளிக்க வேண்டும் என, பிரதமருக்கு கடிதம் எழுதுவது நியாயமா?இந்நடவடிக்கைகள் எல்லாம், அரசுக்கு முன்யோசனை இல்லை என்பதையே காட்டுகிறது. மின் பிரச்னைக்கு மற்றவர்கள் மீது பழிபோடாமல், அதைத் தீர்ப்பதற்கு சிந்தித்து செயல்படுவதே அரசுக்கு நல்லது.
இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: