வியாழன், 1 நவம்பர், 2012

திறமையான பெண்கள் முன்வந்து தொழில் தொடங்கலாம்.

வாய்ப்புகள், வாய்ப்புகள், வாய்ப்புகள்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 15
சிறிய முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கு சில முக்கியத் துறைகளை எடுத்துக்கொள்வோம். விலைவாசி உயர்வு காரணமாக இப்போது குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போகும் கட்டாயத்தில் உள்ளனர். குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள நம்பகமான ஆள்கள் கிடைக்காமல் பலர் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் குறைந்த முதலீட்டில் எளிய சுகாதாரத்தோடு கூடிய க்ரீச் எனப்படும் குழந்தை காப்பகங்களை உருவாக்குவது பெண்களுக்கு ஏற்ற ஒரு தொழிலாக இருக்கும்.
பாலர் பள்ளிகளை நிறுவுவதற்கு தாயுள்ளம் இருந்தால் போதுமானது. அதிகம் படித்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. குழந்தைகளின் இயல்புகளை அறிந்து கொண்டு தங்கள் பள்ளிகளை இருந்த இடத்திலேயே நடத்தி வந்தால் அந்தப் பகுதியிலுள்ள வேலைக்குப் போகும் பெண்களுக்கு அது வரப்பிரசாதமாக அமையும்.

கணிதம், அறிவியல் அல்லது கணினி சார்ந்த கல்வியில் தனித்திறமைப் பெற்றவர்களாக இருந்தால் ட்யூஷன் சென்டர் எனப்படும் தனிப்பயிற்சி மையங்களை ஆரம்பிக்கலாம். இதற்கான தேவையும் நமது நாட்டில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
போட்டிகள் நிறைந்த வியாபார உலகில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பது மட்டுமல்லாமல் அதற்கும் மேலே தனிப்பட்ட கவனமும் தேவைப்படுகிறது. பயிற்சி மையங்களில் திறமையுள்ள பெண்கள் தாங்களே வகுப்புகளை எடுக்கலாம். அதைத் தவிர, தங்களுக்கு தெரிந்த நண்பர்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
கணினி சார்ந்த தொழில்களில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. பெரிய நிறுவனமாக ஏற்படுத்தி தொழில் தொடங்க முடியாதவர்கள், நவீனமயமான அறிவுச் சார்ந்த தனிநபர் திறமையை அடிப்படையாகக் கொண்ட கீழ்கண்ட தொழில்களை மேற்கொள்ளலாம்.
E-learning எனப்படும் virtual tuition centre இன்று பெருகிக்கொண்டிருக்கிறது. உலகளவில் கணிதத்தை நல்ல முறையில் போதிப்பதற்கு மிகச் சிலரே உள்ளனர். கணிதத்தில் மேற்படிப்பு படித்த பெண்கள் குறைந்தபட்ச முதலீட்டில் வீட்டிலிருந்து கொண்டே சில கணிணிகளை வைத்துக்கொண்டு உலகளாவிய அளவில் கற்றுக்கொடுக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் கணிதத்தை நல்ல முறையில் கற்றுக் கொடுப்பதற்கு திறமையான ஆசிரியர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் பல பள்ளிகளும் கல்லூரிகளும் மேல்நாடுகளைப் போல் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தலாம். இது போன்ற சமயங்களில் வீட்டிலிருந்தபடியே பல்வேறு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் எடுக்கும் வாய்ப்பும் நல்ல வருமானமும் கிடைக்கும்.
வணிகவியலில் முதுகலைப்பட்டம் பெற்ற பெண்கள் ஒன்று கம்ப்யூட்டரில் அக்கவுண்டிங் மென்பொருள் பேக்கேஜ்கள் நிறுவி கடைகள் மற்றும் சிறிய அலுவலகங்களில் நடக்கும் வியாபாரத்தில் வரவு, செலவு திட்ட அறிக்கைகள் தயாரிக்லாம். வணிகவரி, சுங்கவரி, வருமான வரி, சேவை வரி, என பலதரப்பட்ட வரிச்சேவைகளின் தன்மைகளை உணர்ந்து அவ்வப்பொழுது மாறும் சட்டங்களையும் அறிந்துகொண்டு, இந்த சிறு வணிகர்களின் கணக்கு வழக்குகளை வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளலாம். வரி செலுத்துவதற்கும் உதவி செய்யலாம்.
மக்களின் ரசனைகள் பெருமளவில் மாறிக் கொண்டு வரும் இன்றைய சூழலில் விலைவாசிகள் எவ்வளவு உயர்ந்த போதும், உணவு விடுதிகளில் கூட்டம் குறைவதேயில்லை. இன்றியமையாத தொழில்களில் உணவு சார்ந்த தொழில்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. கையேந்தி பவனிலிருந்து நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டல்கள் வரை, எல்லாவற்றுக்கும் அதற்கென்று உரிய வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. இத்துறையில் சிறு தொழில்களுக்கான சந்தர்ப்பங்கள் என்னவென்பதை சிறிது பார்ப்போம்.
என்னதான் நவீன உபகரணங்கள் சுற்றியிருந்தாலும், சமையல் என்பது பெரும்பாலான பெண்களுக்கு ஒரு சுமையாகவே இருக்கிறது. இன்னும் நம் நாட்டில் சமையலறை என்பது பெண் தொடர்புடைய ஓர் இடமாகவே கருதப்படுகிறது.
சமையல் கலையில் விருப்பமுள்ள திறமையுள்ள பெண்கள், சிறு சிறு உணவு விடுதிகளை சுகாதாரத்துடன் ஏற்படுத்தி, தினசரி காலை மதியம் இரவு உணவு வகைகளைச் சமைத்துக் கொடுத்து, அதை தேவைப்படுவோருக்கு டெலிவரி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். இரு சக்கர வாகனங்களை ஓட்டத்தெரிந்த பெண்கள் தாங்களே டெலிவரியும் செய்யலாம். பிறகு அதற்கென ஆள்களை நியமித்துக் கொள்ளலாம்.
சமீபத்தில் காய்ச்சலால் மூன்று நாள்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. அந்த தருணங்களில் எழுந்து சமையல் செய்வதற்கு உடல்நலம் இடம்கொடுக்கவில்லை. அதே சமையத்தில் மருத்துவர் கொடுத்த மூன்று நான்கு மாத்திரைகளை விழுங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. எப்பொழுதும் பணி நிமித்தமாக வேலையில் ஈடுபடும் என்னைப் போன்ற தொழிலதிபர்களால், வீட்டில் முடங்கி கிடப்பது சிரமமானது. அப்போது தொலைபேசியிலும் அலைபேசியிலும் பேசிய பலரும், குறிப்பாக பெண்களும் நான் சொல்ல வந்த கருத்தை வலியுறுத்தினர்.
பொதுவாக காய்ச்சலின் போது உட்கொள்ளக்கூடிய உணவு வகைகளான கஞ்சி வகைகள் ரசவகைகள் மற்றும், சூப், சட்னி வகைகள் ஆகியவற்றைப் பிரத்தியேகமாக யாராவது செய்து கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! காய்ச்சல் என்பது குறைந்தபட்சம் 3 அல்லது 4 நாள்கள் நீடிக்கக்கூடியது. அவர்களிடம் உங்கள் தொலைபேசி எண் இருந்தால் உங்களால் வேண்டியதைக் கொடுத்து உதவமுடியும் அல்லவா? மூலிகை கஷாயங்களையும்கூட நல்ல முறையில் தயார் செய்து உணவோடு கொடுத்தனுப்பலாம்.
வீட்டிலுள்ள பல முதியோர்கள் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படும் இயற்கை மருத்துவத்தில் அனுபவம் கொண்டிருப்பார்கள். இவர்கள் துணையுடன் பல சுவையான, சத்தான உணவு வகைகளை அறிமுகப்படுத்தலாம்.
இன்று பெரும் நகரங்களில் வேலை மாற்றம் மற்றும் கல்வி நிமித்தம் தங்கள் ஊர்களிலிருந்து வெளியூர்களில் அதிக நபர்கள் வாழ்கின்றனர். இவர்களைப் போன்றவர்களுக்கு உடல் அசௌகரியங்கள் ஏற்படும்போது, மேற்கூறிய பொருள்களின் தேவை மிக உதவியாக இருக்கும். அதேபோல் இன்னும் பழமையான உணவுப்பண்டங்களான கைப்பிடி சேவை, கொழுக்கட்டைகள், போளிகள் போன்ற எத்தனையோ வகை தின்பண்டங்கள் மக்களுக்கு தேவைப்படும். அதே சமயத்தில் தரமான தின்பண்டங்கள் கிடைக்காமலும் இருக்கின்றன. இத்தகைய சூழலில் இதைப்போன்ற பண்டிகை சார்ந்த தின்பண்டங்களைத் தயார் செய்யத் திறமையான பெண்கள் முன்வந்து, அதை வீட்டு விநியோகமும் செய்ய முடிந்தால் இதுவும் ஒரு நல்ல தொழிலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய இளைய தலைமுறையினர் உடல் நலம் பேணிக்காப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு சாலட் வகைகளை அறிமுகப்படுத்தலாம். ஊறுகாய்கள், பொடிகள் போன்றவற்றைத் தயாரிப்பதிலும் ஈடுபடலாம். பெரிய நிறுவனங்கள் பல இன்றளவும் தங்களுடைய பண்டங்களை இப்படிப்பட்ட குறுவணிகர்களிடம் இருந்தே கொள்முதல் செய்கின்றனர்.
பதப்படுத்தும் உணவு வகைகளின் பயன்பாடு இன்னும் நம் நாட்டில் வளர்ந்துவரும் ஒரு துறையாகவே உள்ளது. அயல் நாடுகளைப் போல் பிரஸஸ்ட் ஃபுட் வகைகள் நம் நாட்டில் குறைவு என்றாலும் வளர்ந்து வரும் சமுதாயச் சூழலில் இதற்கான தேவை நிச்சயம் எழும். உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கற்று வேண்டிய உபகரணங்களை வாங்கி தொழில் தொடங்கலாம்.
0

கருத்துகள் இல்லை: