செவ்வாய், 30 அக்டோபர், 2012

கலைஞர் ஜெயலலிதா பாதையில் நரேந்திர மோடி வருகிறாரா?


அண்ணாத்துரை இறந்தபோது யார் தலைவர் என்ற பிரச்னை எழுந்த போது நெடுஞ்செழியன் தான் என காங்கிரஸ் காரர்கள் நினைத்தார்கள். தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்கட்சி என்பதைவிட எதிரான கட்சி காங்கிரஸ். நெடுஞ்செழியன் திமுக தலைவராக வருவதை காங்கிரஸ் கட்சி விரும்பியது. அப்போதைய நெடுஞ்செழிய பிம்பம் - படித்த நாகரீகமான அரசியல்வாதி.அண்ணாத்துரைக்கு இரண்டாமிடத்தில் கட்சியிலும்,மந்திரிசபையிலும் இருந்தவர். நெடுஞ்செழியனே கூட தான் அடுத்த தமிழக முதல்வராவதில்,திமுகவில்முதலிடம்பெறுவதில் எந்த சிரமமுமே இல்லை என்றே நம்பினார். அதனால் தான் ராம அரங்கண்ணல் “ அண்ணியாருக்கு மந்திரி சபையில் நீங்கள் இடம் தரவேண்டும்.” என நெடுஞ்செழியனிடம் கேட்டபோது” யாருக்கு?ராணிக்கா? சேச்சே..அது நல்லாருக்காதுப்பா” என்று அலட்சியமாக பதில் சொன்னார்.  அண்ணாத்துரையின் மனைவியார் ராணி. திடீரென்று அவரை எதிர்த்து மேதை மதியழகன் தான் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு முன்னாலேயே கருணாநிதி அர்ங்கண்ணலிடம் “ நெடுஞ்செழியன் வேண்டாம் என்று கட்சி முடிவு செய்தால். கருணாநிதி தான் அடுத்தமுதல்வர் என முடிவு செய்யப்பட்டால்.” என்ற அஸ்திரத்தை எறிந்த போது அரங்கண்ணல்அதிர்ச்சியில் பதறிப் போய், வேண்டாம் கட்சி சிதறிப் போய் விடவேண்டாம்.கழகத்தில் கலகம் வேண்டாமே என்றே கருணாநிதியிடம் கெஞ்சியிருக்கிறார்.

நெடுஞ்செழியனை எதிர்த்துத்தான் அரசியல் செய்யப்போகிறோம் என்ற நம்பிக்கையில்( நம்பிக்கை என்பதை விட ’எதிரி’க்கட்சியின் விருப்பம் என்றே சொல்லவேண்டும்) காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. நிலவரம் நேர் எதிராக கருணாநிதியை எம்.ஜி.ஆர்,திமுகவின் இரும்பு மனிதர் மதுரை முத்து உள்ளிட்ட பெரும்பாலானோர் ஆதரித்து முன்னிறுத்திய போது அரங்கண்ணல் மூலமாக கேள்விப்பட்ட நெடுஞ்செழியன் வாய் விட்டு அழுதிருக்கிறார். அந்த நிலையிலும் மதியழகன் போட்டியில் இருந்து விலக மறுத்து விட்டார். பேராசிரியர் அன்பழகன் ”அண்ணாவை தலைவராக கொண்டிருந்த நான்என்னைவிட வயதில் குறைந்த கருணாநிதியை எப்படி தலைவனாக ஏற்றுக்கொள்ளமுடியும்”என்று மிரண்டது தான் Irony!கருணாநிதிக்கு அப்போது வயது 45 தான்.கருணாநிதி தான் திமுகவைக்கைப்பற்றுகிறார் என்பதை அறிய நேர்ந்த காங்கிரஸ் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சி. அண்ணாத்துரையின் இடத்தில் கருணாநிதியா?காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல,காங்கிரஸ் தொண்டர்களாலும் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை!படித்த நடுநிலையாளர்களும் நெளியவே செய்தார்கள்.
கருணாநிதிக்கு இருந்த இமேஜ் அப்படி!
அதோடு கண்ணதாசனின் “வனவாசம்” பலரும் படித்திருந்தார்கள்.
ஆனால் கட்சித்தொண்டர்கள் மகிழ்ச்சிப்பெருங்கடலில் மூழ்கினார்கள். கருணாநிதியின் வரவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தார்கள்.

எம்.ஜி.ஆர் இறந்த போது ’எதிரி’கட்சி திமுகவும் சரி, திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் மூப்பனார், சிதம்பரம் போன்றவர்களும் கூட  ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்ற முயல்வதை ரசிக்கவில்லை.( எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும்போதேஇவர்கள் அதிமுகவில் ஜெயலலிதாவின் Entry யை ஏளனமாகவே பார்த்தார்கள்.)ஜானகியோ,வீரப்பனோ தலைவராக வேண்டும் என முழுமனதோடு விரும்பினர், இவ்வளவுஏன் திருநாவுக்கரசு,கேகேஎஸ் எஸ் ஆர் தவிர  அதிமுகவின் பெரும்பாலான தலைவர்கள் பலரே கூட விரும்பவில்லை. படித்த நடுநிலையாளர்களும் ஜெயலலிதாவுக்கு எதிரான மனநிலையில்.முதல்வரான ஜானகியம்மாள் “தமிழாகவே வாழ்கிற கலைஞர்!’ என்றார். களேபரத்தில்ஆட்சி கவிழ்ந்தது.எம்.ஜி.ஆரின் தொழில் எதிரி சிவாஜியுடன் கூட்டணி அமைத்து ஜானகி இடைதேர்தலில் போட்டியிட்டார்.
கருணாநிதி மீண்டும் கொஞ்ச வருடம் முதல்வரான போது ஜெயலலிதாவின் சேவல் கணிசமான இடங்களில் கூவியது.

ஜெயலலிதாவோ கருணாநிதியை கடுமையாக சாடுவதை நிறுத்தவே இல்லை..
அப்புறம் என்ன? அதிமுகவின் தொண்டர்களுக்கும் ரெட்டை இலைக்கு எப்போதும் வாக்களிப்பவர்களுக்கும் அதிமுகவிற்கு தலைவி ஜெயலலிதா தான் என்பது புரிந்து விட்டது. கட்சி ஜெயலலிதாவின் கையில்! 43 வயதில் தமிழக முதல்வர்!

நெடுஞ்செழியனோ,வி.என்.ஜானகியோ இருவருமே கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கால் தூசுக்கு சமமாக மாட்டார்கள் என்றே  இன்று காலம் நிரூபித்து விட்டது.


இப்போது அகில இந்தியக் கட்சி பாரதீய ஜனதாக் கட்சிக்கு அத்வானி முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்பதையே ’எதிரி’காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அடுத்த பிரதமர் வேட்பாளர் ஆக அத்வானி முன்னிறுத்தப்படவேண்டும் என்பது தான் காங்கிரஸின் நெஞ்சார்ந்த விருப்பம். ஆனால் பாருங்கள். பாரதீய ஜனதாக்கட்சியில் தொண்டர்கள் அனைவருமே நரேந்திர மோடியைப் பரவசமாக முன்னிறுத்தத்தொடங்கிவிட்டார்கள்.

சர்ச்சைக்குரியவர்களையே உள்கட்சி வட்டம் தீவிரமாக தலைமைக்கு முன் வைக்கும். அதிலும் ’எதிரி’ கட்சி யாரைப் பார்த்து அசூயைப் படுகிறதோ அவர் தான் எந்தக்கட்சிக்கும் எப்போதுமே தலைமைப்பதவிக்கு முன் வைக்கப்படுவார். முக்கியமாக அப்படி முன் வைக்கப்படுபவர் போர்க்குணம் மிகுந்தவராகவே இருப்பார்.

கருணாநிதி,ஜெயலலிதா,நரேந்திர மோடி மூவருமே போர்க்குணம் மிகுந்தவர்கள். நல்லவர்கள் என்று சொல்லவே முடியாது என்றாலும் வல்லவர்கள். திறமை சாலிகள்.

ஞாநி சொல்வது நினைவுக்கு வருகிறது. "திறமை வேறு.  நேர்மை வேறு.”


எம்.ஜி.ஆர்  திமுக விலிருந்து வெளியேறி ஒரு கட்சி ஆரம்பித்தது பற்றியும்
வைகோ வெளியேறியது பற்றியும் சொல்லவேண்டும்.

எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர். மேலும் நிறைய ரசிகர்கள் அவருக்காக.

வைகோ கணிசமான தொண்டர் செல்வாக்கு கொண்ட தலைவர். கொள்கை ஆர்வம் கொண்ட சிறு அளவிலான் தொண்டர்கள்.
தொண்டர் செல்வாக்கு வேறு. மக்கள் செல்வாக்கு வேறு.

எம்.ஜி.ஆருக்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை பத்திரிக்கைகள் வைகோவுக்கும் கொடுத்த போதும் வைகோவின் மறுமலர்ச்சி திமுக பெரிதாய் சாதிக்கமுடியவில்லை.

கருத்துகள் இல்லை: