புதன், 31 அக்டோபர், 2012

நாங்கள் ஒவ்வொருவருமே மலாலாதான் அவர்களால் எங்களை எப்போதுமே தோற்கடிக்க முடியாது”

Malala Yousafzai நான் மலாலா

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலிருக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கு பூலோக சொர்க்கம். இயற்கை தனது எழில் மொத்தத்தையும் கொட்டி செதுக்கிய அற்புதம். உலகமெங்கும் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் வாழ்நாளில் ஒரு முறையாவது அப்பகுதியை தரிசிக்க தவம் கிடப்பார்கள்.
Malala Yousafzai successfully operated but still unconscious
அதெல்லாம் 2003 வரை. ஆப்கானிஸ்தானை ஒட்டியிருந்த இப்பகுதியிலும் தாலிபன் ஆதிக்கம் கொடிகட்டியது. பெண்கள் கல்விகற்க பிறந்தவர்கள் அல்ல என்பது தாலிபனின் தாரகமந்திரம். அவ்வளவு ஏன், வீட்டு வாசற்படியை அவர்கள் தாண்டுவதே பாவம் என்று நம்பினார்கள். 
ஆனால் மலாலா யூசுப்ஸாய் என்கிற பெண் குழந்தைக்கு இதெல்லாம் அவசியமற்ற மூடநம்பிக்கை என்று தோன்றியது. கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கக்கூடிய அப்பா அமைந்தது அவளது பாக்கியம். அங்கிருந்த சிறுநகரமான மிங்கோரவைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
பெண்கள் கல்வி கற்பதைக் குறித்து தாலிபான்கள் பேச்சளவில் ஆட்சேபித்துக் கொண்டிருந்தபோதே மலாலா ஊடகங்களிடம் இதுகுறித்து தனது ஆட்சேபணையை வெளிப்படுத்தி வந்தார். 2008 செப்டம்பரில் பெஷாவரில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், “என்னுடைய அடிப்படை உரிமையான கல்வியை தடுக்க தாலிபான்களுக்கு என்ன தைரியம்?” என்று சீறினார்.

“தாலிபான்கள் தொடர்ச்சியாக ஸ்வாட் மாவட்டத்தின் பள்ளிகளை குறிவைக்கிறார்கள்” என்று மலாலா தனது டயரிக் குறிப்புகளாக பி.பி.சி. நிறுவனத்தின் இணையத்தளத்தில் எழுதியவை உலகைக் குலுக்கியது. மலாலாவுக்கு அப்போது வயது பதினொன்று. பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க அப்பகுதியில் மட்டுமே நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளை தாலிபான்கள் அச்சூழலில் முடக்கியிருந்தார்கள். 2009 ஜனவரியில் இனி பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்று பகிரங்கமாகவே ஆணையிட்டிருந்தார்கள்.
மலாலாவின் தந்தை சில பள்ளிகளை நடத்திவந்தார். தாலிபான்களின் கட்டளைப்படி அப்பள்ளிகள் இயங்கமுடியாத நிலையில் இருந்தன. அப்போது அவரது தந்தையிடம், யாரோ ஒரு பெண் பி.பி.சி. இணையத்தளத்தில் இங்கு நடக்கும் சூழல்களை குறித்து சிறப்பாக எழுதுகிறாள் என்று சில பிரிண்ட் அவுட்களை தந்திருக்கிறார்கள். அவற்றை வாசித்த மலாலாவின் தந்தை புன்முறுவல் செய்திருக்கிறார். அதையெல்லாம் எழுதுவது தனது மகள் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை. “அப்பாவின் ஆதரவுதான் என்னுடைய கல்விக்காக என்னை போராடத் தூண்டியது” என்று பிறிதொரு நாளில் மலாலா சொன்னார். அப்பாவோடு இரவுகளில் நீண்ட நேரம் அரசியல் குறித்து விவாதிப்பது மலாலாவின் பொழுதுபோக்கு. 
பி.பி.சி.யில் மலாலா வெறுமனே தன்னைப் பற்றியும், தன்னுடைய கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளைப் பற்றியும் மட்டும் எழுதவில்லை. ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடக்கும் தாலிபன்களின் கொடூர அடக்குமுறை ஆட்சி, பெண்கள் கல்வி கற்பதின் அவசியமென்று அவருடைய எழுத்தில் உயர்வான சமூகப் பார்வை தொக்கி நின்றது.

“என் வீட்டுக்கு அருகிலேயே ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பள்ளிகளை இடித்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை இழுத்து மூடியிருக்கிறார்கள். பாகிஸ்தான் இராணுவம் அவர்களை ஆதரிக்கிறது என்கிற ஆணவம் அவர்களுக்கு இருக்கிறது. இராணுவம் மட்டும் இங்கே முறையாக தங்கள் பணிகளை மேற்கொண்டால், இப்படிப்பட்ட அபாயச்சூழலே ஏற்பட்டிருக்காது” என்று காட்டமாகவே மலாலா எழுதினார். அவரது அபயக்குரல் அமெரிக்கா வரை அசைத்துப் பார்த்தது. பாகிஸ்தான் இராணுவம் உடனடியாக பள்ளத்தாக்கு பகுதிக்கு விரைந்து, தாலிபான்களின் கொட்டத்தை அடக்கியது.
தாலிபான்கள் அங்கே வீழ்ந்தநிலையில் மலாலா சொன்னதுதான் ஹைலைட். “நல்லவேளையாக கடவுள் ஸ்வாட் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநிறுத்திவிட்டார். இல்லாவிட்டால் இங்கே அமெரிக்காவோ, சீனாவோ வரவேண்டியிருந்திருக்கும்”

மலாலாவின் சாதனையை பறைசாற்றும் விதமாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மலாலா குறித்த ஆவணப்படம் ஒன்றினை எடுத்தது. ஊடகங்கள் அவரை பேட்டி எடுக்க போட்டாபோட்டி நடத்தின. ஸ்வாட் மாவட்டத்தின் குழந்தைகள் பாராளுமன்றத் தலைவராக மலாலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப் பட்டது. பாகிஸ்தானின் தேசிய அமைதிக்கான இளைஞர் விருதை முதலில் வென்றவர் இவர்தான்.


“நான் பிறந்ததின் பயன் மனிதகுலத்துக்கு பயன்பட வேண்டும். எனக்கு ஒரு புதிய கனவு இருக்கிறது. நான் அரசியல்வாதியாகி என் நாட்டை காக்க வேண்டும். என் நாடு பிரச்னைகளால் சீரழிந்திருக்கிறது. இச்சீரழிவை எப்பாடு பட்டேனும் சீர்செய்யவேண்டும்” என்று தன்னைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பேசினார் மலாலா.
இதெல்லாம் வரலாறு.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று அன்று, ஒரு தேர்வினை முடித்துவிட்டு பஸ்ஸில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் மலாலா. முகத்தில் முகமூடி போட்டிருந்த மனிதன் ஒருவன் அந்த பஸ்ஸில் ஏறினான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. அங்கிருந்த பெண்களைப் பார்த்து “உங்களில் யார் மலாலா?” என்று வெறிபிடித்தாற்போல கத்தினான். மலாலாவை அடையாளம் கண்டவுடன் காட்டுத்தனமாக சுட்டான். ஒரு குண்டு தலையிலும், இன்னொரு குண்டு கழுத்திலும் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே மலாலா நினைவிழந்தார். அவருக்கு அருகிலிருந்த இரண்டு பெண்களுக்கும் லேசான காயம்.
மலாலா பெஷாவரிலிருந்த இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலையில் பாய்ந்து வலது மூளையின் பக்கத்தை பாதித்திருந்த குண்டினை மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை செய்து நீக்கி, உயிர்பிழைக்க வைத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானிய தாலிபானின் செய்தித் தொடர்பாளர் ஈஷானுல்லா ஈஷான், இந்த அடாத கொலைமுயற்சி தங்களுடையதுதான் என்று கொக்கரித்திருக்கிறார். “மலாலா என்பவர் கடவுளுக்கும், சமூக ஒழுங்குக்கும் கீழ்ப்படியாமையின் சின்னம்” என்று விமர்சித்திருக்கிறார்.


“எங்களைப் பற்றி மோசமாக எழுதவேண்டாம் என்று உன் பெண்ணிடம் சொல்லு என்று பலமுறை மலாலாவின் தந்தையை நாங்கள் எச்சரித்திருந்தோம். ஆனால் அவர் எங்கள் பேச்சை கேட்கவில்லை. அதனாலேயே இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம்” என்று தங்களது இரக்கமற்ற கொலைமுயற்சிக்கு அவர் நியாயமும் கற்பிக்கிறார்.
இன்று உலகம் முழுக்கவே மலாலா விரைவில் குணம்பெற வேண்டும் என்று பிரார்த்தனைகள் நடக்கின்றன. அதே வேளையில் தாலிபான்கள் முன்பைவிட அதிகமாக கண்டிக்கப்படுகிறார்கள். ஓரளவுக்கு தாலிபான் ஆதரவாளர்களாக இருந்தவர்களை கூட இச்செயல் அவர்களை தாலிபான்களுக்கு எதிரான நிலையை எடுக்க வைத்திருக்கிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவில் தொடங்கி, அத்தனை உலகத் தலைவர்களும் மலாலாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய வளைகுடா நாடுகள் ஒட்டுமொத்தமாக மலாலாவுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதின் மூலமாக, தாலிபானின் பெண்கள் கல்விக்கு எதிரான செயலை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றன.
மலாலாவுக்கு சிகிச்சையளிக்க பிரிட்டன் ஆர்வம் காட்டியது. எனவே அவர் இங்கிலாந்துக்கு கோமாநிலையில் கொண்டுச் செல்லப்பட்டார். கடைசியாக கிடைத்த தகவலின் படி மலாலாவுக்கு நினைவு திரும்பி, சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறார். பயப்படும்படியான பாதிப்பு ஏதுமில்லை. மிக விரைவில் முழுநலம் பெறுவார் என்று மருத்துவர்கள் உறுதியளிக்கிறார்கள். 
முன்னாள் பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய சிறப்பு கல்வித் தூதராக இருக்கிறார். அவர் “நான் மலாலா” என்கிற ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். 2015 வாக்கில் உலகில் பள்ளிக்குச் செல்லாத பெண்களே இல்லை என்கிற நிலையை எட்டவேண்டியது நம் இலட்சியம் என்று சொல்லியிருக்கிறார் பிரவுன். பாகிஸ்தானில் எது நடக்கவேண்டும், எம்மாதிரியான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று மலாலா விரும்பினாரோ, இன்று அது உலகம் முழுக்க அவர்மீது நடந்த கொலைமுயற்சியால் ஏற்பட்டிருக்கிறது.

மலாலாவின் பள்ளித்தோழி ஒரு மேற்கத்திய ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் குரலை உயர்த்திச் சொல்கிறார். “நாங்கள் ஒவ்வொருவருமே மலாலாதான். நாங்கள் எங்களுக்காக கல்வி கற்போம். நாங்கள்தான் வெல்லுவோம். அவர்களால் எங்களை எப்போதுமே தோற்கடிக்க முடியாது”
இதைவிட மலாலாவுக்கு வேறென்ன வேண்டும்?

(நன்றி : புதிய தலைமுறை)

கருத்துகள் இல்லை: