திங்கள், 21 மே, 2012

கருத்துக் கணிப்பு:காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளே முக்கிய பங்கு

டெல்லி: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ABP நியூஸ் மற்றும் சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனமான ஏ.சி.நீல்சன் ஆகியவை இணைந்து ஒரு சர்வே நடத்தியுள்ளன.
நாடு முழுவதும் 28 நகர்களில் ஏப்ரல்-மே மாதத்தில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பின்படி, இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் பாஜக 28 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் வெறும் 20 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெறும் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்தவர்களில் 69 சதவீதம் பேர் மீண்டும் அந்தக் கட்சிக்கே வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். 31 சதவீதம் பேர் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இந்த 31 சதவீதம் பேரில் 12 சதவீதத்தினர் மட்டுமே பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் 84 சதவீதம் பேர் மீண்டும் அந்தக் கட்சிக்கே வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவை மாற்றி காங்கிரசுக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.
விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் காரணமாகவே காங்கிரசுக்கு வாக்களிப்பதை தவிர்க்கப் போவதாக பெரும்பான்மையானவர்கள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள மக்கள் ஆதரவின் சரிவு பாஜகவுக்கு முழு அளவில் பலம் தரவில்லை என்பதும் இந்தக் கருத்துக் கணிப்பு தெளிவாக்குகிறது. காங்கிரஸ் 8 சதவீத மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில், அவர்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். மற்ற 7 சதவீதம் பேர் காங்கிரஸ், பாஜக தவிர்த்த வேறு கட்சிக்கு வாக்களிக்கப் போவதாகவே கூறியுள்ளனர்.

இதனால் அடுத்து அமையப் போகும் ஆட்சியை நிர்ணயிக்கப் போவதில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளே மிக முக்கிய பங்கு வகிக்கப் போவது உறுதியாகிறது.

கருத்துகள் இல்லை: