ஞாயிறு, 20 மே, 2012

கனிமொழிக்கு துணை பொதுச்செயலர் பதவி ?

அடுத்த தலைவர் யார்? என்ற போட்டா போட்டி, "ஆண் வாரிசுகள்' மத்தியில் நீடித்து வரும் நிலையில், வெளி மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி., பதவியை, கனிமொழிக்கு வழங்கக் கூடாது என்ற எதிர்ப்பு, தி.மு.க.,வில் கிளம்பியுள்ளது. இதனால், வரும் லோக்சபா தேர்தலில் கனிமொழி தேர்தல் களத்தை சந்திக்கிறார் என்றும், அவருக்கு கட்சியில் உரிய அந்தஸ்து அளிக்கும் வகையில், துணை பொதுச்செயலர் பதவியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தனது பிறந்தநாள் பரிசாக வழங்க வேண்டும் என, அவருக்கு ராஜாத்தி நெருக்கடி கொடுத்து வருகிறார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.?

கருணாநிதியின் 89வது பிறந்தநாள் விழா, வரும் 3ம் தேதி வெகு விமரிசையாக, தி.மு.க.,வினர் கொண்டாடவுள்ளனர். தலைவர் பதவியை கருணாநிதி வைத்துக் கொண்டு, "செயல்' தலைவர் பதவியை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் என, அவரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மற்றொரு பக்கம் கட்சித் தலைமை பதவியை மத்திய அமைச்சர் அழகிரிக்கு வழங்க வேண்டும் என, அவரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திடீர் குழப்பம்: "மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி' என்பது போல், இரு வாரிசுகளின் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் நெருக்கடிகளையும், கருணாநிதி சமாளித்து வருகிறார். சமீபத்தில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, சி.ஐ.டி., காலனி இல்லத்தில், கருணாநிதியை மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி சந்தித்து பேசினார். அப்போது, கனிமொழிக்கு அடுத்த ஆண்டு ஜூலையில், ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் முடிவடைகிறது. தற்போது, புதிய ராஜ்யசபா எம்.பி., தேர்வுக்குரிய போதுமான எம்.எல்.ஏ.,க்களின் பலம், தி.மு.க.,விடம் இல்லை. இதனால், கனிமொழிக்கு வெளி மாநிலத்திலிருந்து எம்.பி., பதவியை அளிக்க வேண்டும் என, அந்தோணியிடம் கருணாநிதி கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

புதுநெருக்கடி: இத்தகவல், மற்றொரு பெண் வாரிசுக்கும், அவரின் கணவர் குடும்பத்தினருக்கும் தெரியவந்ததும், கனிமொழிக்கு வெளி மாநிலத்திலிருந்து ராஜ்யசபா பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், பெண் வாரிசுகளின் மத்தியில் முட்டல், மோதல் ஆரம்பமாகியுள்ளது. "கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி தேவையில்லை. லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, வடசென்னை ஆகிய 4 தொகுதிகளிலிருந்து, ஏதாவது ஒரு தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார். எனவே, கட்சியில் உரிய அந்தஸ்து கிடைக்க அவருக்கு, துணை பொதுச்செயலர் பதவி வழங்க வேண்டும். கட்சியின் பிடி கருணாநிதி கையில் தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், உங்கள் பிறந்தநாள் பரிசாக, கனிமொழிக்கு பதவி வழங்குங்கள்' என, கருணாநிதியிடம் ராஜாத்தி புதுநெருக்கடி கொடுத்துள்ளார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க., பிரமுகர் கூறியதாவது: கனிமொழிக்கு, ராஜ்யசபா எம்.பி., பெறுவதற்காக மீண்டும், காங்கிரசுடன் கூட்டணி நீடிப்பதை, பெங்களூரு பெண் வாரிசு குடும்பத்தினர் விரும்பவில்லை. கனிமொழிக்கு பதவி வழங்கக் கூடாது என்பதில், ஸ்டாலின், அழகிரியை, "இணைந்த கைகளாக' உருவாக்க, பெங்களூரு பெண் வாரிசு கடும் முயற்சி எடுத்து வருகிறார். தி.மு.க., படுதோல்விக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலே பிரதான காரணம் என, அவர் பிரசாரம் செய்கிறார். தி.மு.க.,வில் ஸ்டாலின், அழகிரிக்கு அடுத்த தலைவராக, கனிமொழி உருவாகும் திட்டத்தை, அந்த குடும்பத்தினர் தடுத்து வருகின்றனர். அத்திட்டத்தை முறியடிக்கவும், இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், உங்கள் பிறந்தநாள் பரிசாக கனிமொழிக்கு பதவி வழங்குங்கள் என்று, கருணாநிதியிடம் ராஜாத்தி நெருக்கடி கொடுத்துள்ளார். ராஜாத்தியின் கனவு நனவாகுமா? என்பது, கருணாநிதிக்கு தான் வெளிச்சம். இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டு அதிகரிக்கும்? பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தை புறக்கணித்துவிட்டதால், அ.தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிடப்போவது யார் என்ற நிலையில், புதுக்கோட்டையில் போட்டியிடப் போவதாக, தே.மு.தி.க., அறிவித்தது. இப்போது, அ.தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும் நேரடிப் போட்டி என்ற நிலை உருவாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றின் ஆதரவோடு மட்டுமே களத்தில் நிற்கும் தே.மு.தி.க., வாங்கப்போகும் ஓட்டுகள், அக்கட்சி எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. தேர்தல் புறக்கணிப்பு என, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வேண்டுமானால், ஓட்டளிக்காமல் இருக்கலாம். அதன் அடிமட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் போன்றோர் கண்டிப்பாக ஓட்டளிப்பர். இந்த ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு விழாது, தே.மு.தி.க..வுக்கு தான் விழும் என்று, தி.மு.க., நிர்வாகிகளே கூறுகின்றனர். யாருக்கும் ஓட்டு போடுவதில்லை என, "49 ஓ' போடலாம் என, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் அறிவித்திருந்தாலும், அதற்கு பெரிய ஆதரவு இருக்காது என்றே தெரிகிறது. 2009ம் ஆண்டு நடந்த ஐந்து இடைத்தேர்தல்களை அ.தி.மு.க., புறக்கணித்தபோது, ஓட்டு சதவீதம் பெரியளவில் குறையவில்லை. "49 ஓ' போடவும், பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக, ஓட்டுப்பதிவு அதிகமாகவே இருந்தது. இதே நிலை தான், புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: