தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது அவர் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா மணல் கடத்துபவர்களை இரும்புகரம் கொண்டு அடக்குவோம். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அறிவித்துள்ளார். ஆனால் தென்பெண்ணை ஆற்றில் எம்எல்ஏ தலைமையிலான கும்பல் மணல் கடத்தலை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதிகாரிகளுக்கு இதுபற்றி தெரிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த எம்எல்ஏ மீது குண்டர் சட்டம் பாயுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் அந்த அணையில் தண்ணீர் இல்லை. தமிழக முதல்வர் கடந்த ஓராண்டு காலத்தில் காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் பாலாறு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு 100க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார்.
இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் நேரடியாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து முடிவு காண வேண்டும். இதில் சாதகமான முடிவு கிடைக்காவிட்டால் அதிமுகவினர் டெல்லி சென்று வீதியில் இறங்கி போராட வேண்டும்.
தமிழக அரசு ஓராண்டு சாதனைகள் என பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து திமுக ஆட்சியை விட அதிமுக அரசு மிஞ்சி விட்டது. திமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க வரி விதிக்கிறேன் என்று கூறும் முதல்வர் ஜெயலலிதா பல கோடி ரூபாய் ஏன் செலவு செய்து வருகிறார்?
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது என மீண்டும் ராஜபக்சே கொக்கரித்துள்ளார். அந்த பகுதியில் சிங்களர்களை குடியமர்த்தி வருகிறார். இதற்கெல்லாம் ஒரே தீர்வு தனி ஈழம்தான்.
ஐபிஎஎல் போட்டிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். மது, சினிமாவை போல் கிரிக்கெட்டும் இளைஞர்களை சீரழிக்கிறது. பெரும் வருமானத்தை ஈட்ட கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால் ஊழல், முறைகேடுகள், கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது.
தமிழகத்தில் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்தி தேசியமொழி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசின் 8-வது அட்டவணையில் 22 மொழிகள் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி அலுவல் மொழிதான்.
ஆளுங்கட்சி என்ற பாணியில் சமைக்கப்படும் சோற்றை பதம் பார்க்கும் அகப்பையாக எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும் என அண்ணா கூறியதை ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பானையை பதம் பார்க்கவோ, உடைக்கவோ அகப்பைகள் முயன்றால் அந்த அகப்பைகள் பதம் பார்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதில் இருந்து அவரது சகிப்பு தன்மை எவ்வளவு? என தெரிகிறது என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக