புதன், 23 மே, 2012

சசிகலாவை விமர்சித்த பி.எச்.பாண்டியன் நிலை? ஆப்பிழுத்த ....

சென்னை: சசிகலாவை முதல்வர் ஜெயலலிதா தனது தோழி பதவியிலிருந்து நீக்கியபோது அதை ஜெயலலிதா முன்னிலையிலேயே வரவேற்று, சசிகலாவை கடுமையாக விமர்சித்த பி.எச். பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தனது உயிர்த் தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றினார். அதன் பிறகு பி.எச்.பாண்டியனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் கொடுத்து அழகு பார்த்தார்.

அதிமுகவின் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவராக இருக்கும் பி.எச்.பாண்டியன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தார்.
பி.எச்.பாண்டியன், சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றவர். இவர் 1999ம் ஆண்டு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஆப்பிழுத்த
அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக அவரது மகன் மனோஜ் பாண்டியன் இருக்கிறார். அவர் எம்.பி.யாகவும் உள்ளார். மனோஜ் பாண்டியன் 2001ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக சேரன்மகாதேவி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பி.எச்.பாண்டியனின் மனைவி பேராசிரியை சிந்தியா பாண்டியன், தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் போயஸ் கார்டனில் அதி முக்கியத்தவம் வாய்ந்த தகவல்களையும், பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கையும் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கவனித்து வருகின்றார்.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்த போது அதை வரவேற்று ஜெயலலிதா முன்பே அவர்களை விமர்சித்தவர் பி.எச். பாண்டியன். மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் விமர்சித்தார். இந்நிலையில் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவை மன்னித்து மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

தற்போது போயஸ் கார்டனில் சசிகலா மீ்ண்டும் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் பி.எச். பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என அதிமுகவினர் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: