செவ்வாய், 22 மே, 2012

ஏழு மாதத்திலேயே பிறந்த அந்த சிசு... திரைப்பட இயக்குநர் மகேந்திரன்!


நட்சத்திர இயக்குநருக்கு உயிர் கொடுத்த பெண் ! சிலிர்க்க வைக்கும் உண்மைக் கதை கி.மணிவண்ணன் படம்: கே.ராஜசேகரன் ஓவியம்: பாரதிராஜா ''ஏழு மாசத்துல பொறந்த இது பொழைக்காது... எதுக்கு இன்னும் வீட்டுக்குள்ள வெச்சுக்கிட்டு வேடிக்கை பாக்கணும்? மூச்சு அடங்கற மாதிரி இருக்கு. நேரத்தோட பொதச்சுட்டு, மத்த வேலயப் பாருங்க.''
''வேண்டாம் அவசரப்படாதீங்க...'' - ஓடி வந்து அந்த பிஞ்சை அள்ளிக் கொண்டாள் ஒரு பெண்.
மரப்பாச்சி பொம்மைபோல, மூச்சு விடவே பலமில்லாத வகையில் பிறந்தது அந்த உயிர். அது, குறைமாதக் குழந்தைகளுக்கு 'இன்குபேட்டர்' வசதி இல்லாத காலம். அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பார்த்தபின்... மண்ணைத் தோண்டி புதைத்துவிட்டு, வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விடும் கிராமத்துப் பச்சை மனிதர்களுக்கு நடுவில், ஓர் அன்பு தெய்வம் அக்குழந்தைக்கு உயிர்ப் பிச்சை கொடுத்தது!
''வயித்துல சுமந்து பெற்ற தாயைவிட, நான் என் முதல் தாயா நினைக்கறது அவங்களதான். என் வாழ்வை துவக்கி வைத்த, என் வாழ்க்கையில மிகமுக்கியமான பெண் அவங்கதான்!''
அந்த முதல் தாய்... டாக்டர் சாரா! ஏழு மாதத்திலேயே பிறந்த அந்த சிசு... திரைப்பட இயக்குநர் மகேந்திரன்! ஓர் உயிர்ப்புமிகு பெண்ணிடம், நெருப்பு வாங்கி வந்து, தமிழ்த் திரைஉலகில் தனது திரைப்படைப்புகளின் வழியாக ஒளியேற்றிய மகேந்திரன் நெகிழ்வுடன் பேச ஆரம்பிக்கிறார்!
நாங்கள் இருந்த அறை குளிரூட்டப்பட்டிருந்தாலும், வியர்க்கிறது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அருகில் இருக்கும் அவருடைய பெற்றோரைப் பார்க்கிறேன்.
ராமநாதபுரம் மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த ஜோசப் செல்லையா - மனோன்மணி தம்பதி புகைப்படத்தில் புன்னகைக்கின்றனர்.
சாரா, டாக்டராக பணிபுரிந்த மருத்துவமனையில், மகேந்திரனின் அம்மா வுக்கு கம்பவுண்டர் வேலை. குறைமாதத்தில் பிறந்த குழந்தையை, தினமும் வாங்கிக் கொண்டு போய், பஞ்சில் சுருட்டி, தனது அடிவயிற்றில் கட்டிக் கொண்டு, நாள் முழுக்க ஆஸ்பத்திரி வேலைகளில் சாரா மும்முரமாக இருக்க, அந்த உடற்சூட்டினால் உயிர் பிழைத்திருக்கிறார் மகேந்திரன். மூன்று மாத காலம் ஒரு தவம்போல இதைச் செய்து... மகேந்திரனுக்கு உயிர் வரம் தந்திருக்கிறார் சாரா. ''ஒரு பெண், நாள் முழுக்க ஒரு குழந்தையை கொஞ்ச நேரம்கூட இறக்கி வைக்காம இடுப்புல கட்டிக்கிட்டு எப்படி இருந்திருக்க முடியும்? ஆஸ்பத்திரிக்கு வர்ற நோயாளிகளைப் பார்க் கணும்... பிரசவம் பார்க்கணும்! இத்தனைக்கும் நடுவுல அந்தத் தாயோட வெப்பத்தை வாங்கிக்க... நான் என்ன பாக்கியம் செஞ்சேன்னு புரியல. அவர், பிறப்பால் மலையாளப் பெண்... சொந்தம் கிடையாது. நான் தமிழன்... எனவே இனப்பற்றும் இல்லை. ஆனா... கனிவு இருந்திருக்கு. எதையும் எதிர்பார்க்காத அன்பு இருந்துருக்கு... அதுதான் சாரா அம்மா!''
- அன்பொழுக மகேந்திரனின் இதயத்திலிருந்து வந்து விழுகின்றன வார்த்தைகள்.
''ராத்திரியெல்லாம் ஒரு பயத்தோடயே தூங் காம தவியா தவிச்சு... காலையில ஓடி வந்து என்னை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்ட அந்த அம்மா வின் தவிப்பை, நல்லாவே உணர முடியுது.''
மகேந்திரனின் அம்மா, கருவில் சுமந்து பெற் றிருந்தாலும், உணர்வுச்சூடு தந்து உயிர் கொடுத்த தாலோ என்னவோ... சாரா அம்மாவின் உணர்வு களையே அதிகம் சுமந்து நிற் கிறார்.
''குறைமாதக் குழந்தையா பிறந்த சூழல்ல, என் வாழ்க்கை யைத் தொடங்கி வெச்ச அந்த தாயைத் தவிர, வேற யார் எனக்கு உந்துதலா இருப்பாங்கனு நினைக்கிறீங்க? நான் சினிமாவுக் குள் எழுத்தாளரா நுழைக்கப் பட்டதற்கான தகுதியை வளர்த்துக்கிட்டதுக்கு ஆரம்பப் புள்ளியே... அவங்கதான். வளர்ந்து பெரியவனான கால கட்டத்துல, மத்தவங்களோட அனுதாபப் பார்வை காரணமா எழுந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்க, லைப்ரரிக்குப் போயி படிக்க ஆரம்பிச்சேன். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன்னு தேடித் தேடிப் படிச்சேன். மத்தவங்ககிட்டேர்ந்து வித்தி யாசப்படணுங்கற நெருப்பு... எனக்குள்ளே எரிஞ் சுட்டே இருந்துச்சு. அது... சாரா அம்மா கொடுத்தது!''
- தீர்க்கமான அவரது வார்த்தைகளில்தான் எவ்வளவு சத்தியம் நிறைந்திருக்கிறது!
''என்னோட பள்ளி நாட்களை கடந்தபோது... சாரா அம்மா வேற ஊருக்கு மாற்றலாகிட்டாங்க. அவங்க வாங்கி படிச்ச மலையாள நாளிதழ்களை, நோயாளிகளுக்கு மருந்து பொட்டலம் மடிச்சி தர்றதுக்காக என் அம்மாவுக்கு கத்தரிச்சி தருவேன். அந்த பேப்பர்கள்லதான் மலையாளத் திரைப்பட விளம்பர டிசைன்களை முதன் முறையா பார்த்தேன். அதுதான் சினிமாவுக்கும் எனக்குமான முதல் உறவு. அதுகூட சாரா அம்மாவாலதான் கிடைச்சுருக்கு!''
'அழகிய கண்ணே... உறவுகள் நீயே...
நீ எங்கே... இனி நான் அங்கே...
என் சேய் அல்ல... தாய் நீ..!’

- 'உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் வரிகளைப் பாடும் அந்தத் தாய் பாத்திரம்... தனது பிள்ளைகளுக்கு அன்பை மட்டுமே அள்ளி அள்ளி வழங்குவது, சாரா அம்மா வின் சாயலோ? கடைவாயில் பால் வழிந்தோடி உயிர் விடும் நேரத்தில்கூட மலர்ந்து, வெள்ளந்தி யாய்ச் சிரிக்கும் அந்த மழலையின் முகத்தில் விட்டுச் செல்லும் அன்பு, சாரா அம்மாவுடையதோ?
''நான் வாங்கியது கேரளத்துச் சூடு. அதனால் தானோ என்னவோ... எனது உடல் மொழியில, பேச்சுல, என்னோட திரைக்கதைகள்ல கேரளத்துச் சாயல் இருக்கறதா நண்பர்கள் பல முறை சொல்லக் கேட்டிருக்கேன்.''
கல்லூரி நாட்களைக் கடந்த சமயத்தில்தான், சாரா அம்மாவைப் பற்றிய விஷயமே மகேந் திரனுக்கு புரிந்திருக்கிறது. அவரைப் பற்றி இன்னும் நிறைய உயர்வான விஷயங்களை அறிந்து கொள்ளாதது வருத்த மாகவே இருக்கிறது இவருக்கு.
''பிடிவாதமா, வைராக்கியமா என்னை சுமந்து காப்பாத்தி, இந்த நல்ல குணங்கள எனக்குக் கொடுத்த சாரா அம்மாதான், என்னை ஆட்சி செய்றாங்க... தவறை திருத்தறாங்க... கட்டளை இடுறாங்க... வழி நடத்தறாங்க. அவங்க ஞாபகமா என்கிட்ட இருக்கிறது... அவங்களோட தாய்மைச்சூடு மட்டும்தான். அவங்க முகம்கூட எனக்குத் தெரியாது. எனக்கு நினைவு தெரிஞ்சு அவங்கள பார்க்கணும்னு ஏங்கினப்போ... அவங்க ஊரைவிட்டு எங்கேயோ போயிட்டாங்க. போட்டோவையாவது பார்க்க மாட்டோமாங்கிற ஏக்கம்... எப்பவும் இருக்கு.''
என் கைகளைக் கோத்து அணைத்துக் கொள் கிறார் மகேந்திரன். சாரா அம்மாவின் உயிர்ச்சூடு... மகேந்திரன் வழியாக எனக்குள்ளும் பரவுகிறது.
அவருடைய ஏக்கம், எனக்கு மிகுந்த வலியைக் கொடுக்க... பல நாள் தேடுதலுக்குப் பிறகு, டாக்டர் சாராவின் வளர்ப்பு மகள் ஜோதி, மகன் பெஞ்சமின் செரியன் மற்றும் சாராவின் பேரன் ஜார்ஜ் செரியனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இங்கே ஓவியமாக இடம்பிடித்திருக்கும் டாக்டர் சாராவின் இளமையான முகம், தமிழ்த் திரையுலகின் திசைகளைத் திருப்பி வைத்த ஓர் உன்னதமான படைப்பாளிக்கு, 'அவள் விகடன்’ வழியாக சமர்ப்பணம் ஆகிறது!

கருத்துகள் இல்லை: