திங்கள், 21 மே, 2012

குறவர் மீதுபொய் வழக்கு போடும் போலீஸ்

மிரட்டி மிரட்டி பொய் வழக்கு போடும் போலீஸ் : நிம்மதியை இழந்துள்ள

குறவர் இனமக்கள் தஞ்சையில், அப்பாவி குறவர் இனமக்களின் வீடுகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் புகுந்து மிரட்டி வேனில் கடத்திச்சென்று, குற்றங்களை ஒப்புக்கொள்ள செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் சிறையில் அடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சையில் மாரியம்மன் கோவில், மானோஜிப்பட்டி, அம்மன்பேட்டை, ஆவாரம்பட்டி பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குறவர் இனமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கூடைமுடைதல், பன்றி மேய்த்தல், அம்மி கொத்துதல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தஞ்சை நகருக்குள் அடிக்கடி வேனில் புகுந்து, திருச்சி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மப்டி போலீஸார், வீடுகளில் தூங்கும் குறவர் இனமக்களை ஒருவர், இருவர் அல்லது ஐந்து பேர் என, பிடித்து மிரட்டி வேனில் கொண்டு செல்வதும், குற்றவழக்குகளில் கைது செய்து சிறையிலடைப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால், குறவர் இனமக்கள் தங்கள் வீடுகளில் இரவில் நிம்மதியாக தூங்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

>கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் ஆவாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் (60), இவரது மருமகன் அன்பழகன் (28) ஆகியோரை பிடித்துச்சென்ற மப்டி போலீஸார் வேனில் திருச்சி மாவட்டம் திருவெறும்வூர் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று திருட்டு வழக்கில் கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தஞ்சை மானோஜிப்பட்டிக்கு நேற்று அதிகாலையில், காக்கி யூனிபார்மில் வந்த எஸ்.ஐ., மற்றும் போலீஸார் 10 பேர் சேர்ந்து, குறவர் நாகப்பா (37) என்பவரை வேனில் ஏற்றியுள்ளனர். இதை தடுத்த அவரது மனைவி கர்ப்பிணி சின்னப்பொண்ணுவை தள்ளி விட்டு வேனில் தலைமறைவாயினர்.

நாகப்பாவை அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் போலீஸார் தான் பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.  திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கூறுகையில், ""வேண்டுமென்றே போலீஸார் திருட்டு வழக்கை குறவர்கள் மீது பதிவு செய்ய முடியாது. அச்சம்பவங்களில் அவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். பொருளுக்காக தாக்கி காயப்படுத்தி நகைகளை பறிக்கின்றனர். அதனால் தான் பெருமாள், அன்பழகனை கைது செய்தோம்'' என்றார்.

தஞ்சை மாவட்ட டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் கூறுகையில்,’’தஞ்சை மாவட்டத்தில் வெளிமாவட்ட போலீஸார் நுழைந்து குறவர்களை பிடித்துச் சென்று பொய் வழக்குப்பதிவு செய்வது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். 

தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் வீரையன், மாவட்ட செயலாளர் ரவி, துணை செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர், "குறவர்களை வீடு புகுந்து வேனில் கடத்தி மறைவிடத்தில் ஒருவாரம், 10 நாள் என ரகசியமாக வைத்து, சித்ரவதை செய்து தங்கள் மாவட்ட பகுதிகளில் நடந்த குற்றங்களை ஒப்புக்கொள்ளச்செய்து, அதுகுறித்து குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் வேறு தேதிகளில் வழக்குப்பதிந்து, பிறகு கைது செய்து "ரிமாண்ட்' செய்கின்றனர்.;

 

இதனால் குறவர் இனமக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்'' என்றனர்.இது குறித்து திருச்சி மண்டல ஐ.ஜி., அலெக்ஸாண்டர் மோகன் கூறுகையில், ""தஞ்சையில் குறவர் இனமக்கள் வீடு புகுந்து, போலீஸார் தேவையின்றி தொல்லை செய்யக்கூடாது என, போலீஸாரை அறிவுறுத்தியுள்ளேன். குறவர் நாகப்பாவை போலீஸார் பிடித்துச் சென்றது குறித்து என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக புகார் மனு கொடுத்தால் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

கருத்துகள் இல்லை: