வெள்ளி, 25 மே, 2012

அழகிரிக்கு சர்பத்தில் ஐஸ் போட்ட ஜெயலலிதா!

Viruvirupu
மதுரையில்இருந்து மக்கள் ஆதரவு பெற்ற இரண்டாவது அதிகாரியையும் இடமாற்றம் செய்து, அதிர வைத்திருக்கிறது தமிழக அரசு. மதுரைக்கு கலெக்டராக இருந்த சகாயம் திடீரென இட மாற்றம் செய்யப்பட்டார். என்ன காரணம் என்றுகூட தெரிவிக்காமல், கோ ஆப்டெக்ஸ் துறைக்கு அவர் தூக்கி அடிக்கப்பட்டார்.
அந்த அதிர்ச்சியில் இருந்தே மதுரைவாசிகள் விடுபடாத நிலையில், மதுரையில் பல வியக்கத்தக்க மாறுதல்களை கொண்டுவந்த காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கும் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் திருப்பூருக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். இதற்கும் காரணம் ஏதும் கூறப்படவில்லை.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையில் அழகிரி ஆட்சி நடைபெற்றது.
அழகிரியின் சார்பின் மதுரை நிர்வாகத்தையே தமது கைகளில் தாங்கியிருந்தவர்கள், பெருந்தகைகள் அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் போன்ற தளபதிகள்.
இவர்கள் ஐ.நா.வில் பணிபுரிந்து ஓய்வு பெற்றபின், மதுரையை வளப்படுத்த வந்த அறிவுஜீவிகள் அல்ல. அடிதடிக்காரர்கள்.
அப்படியிருந்த மதுரையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ரவுடிகளின் அட்டகாசங்களை ஒடுக்கி, நகரத்தை சீர்படுத்தியவர்கள், கலெக்டர் சகாயம் மற்றும் மதுரை காவல்துறை எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோர்தான். இவர்கள் இருவருமே, யாருக்கும், எதற்கும் வளைந்து கொடுக்காமல் பணிபுரிந்தார்கள் என்ற நல்ல பெயர் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்த இரு அதிகாரிகளையும் எப்படியாவது மதுரையை விட்டு அனுப்பி விடவேண்டும் என்று தி.மு.க.-வினர் ரூம் போட்டு ஆலோசனை செய்து கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு சிரமம் கொடுக்காமல், அரசே இடமாற்றம் செய்து மதுரையை விட்டு வெளியே அனுப்பியுள்ளது.
தி.மு.க.-வினர், அரசின் இந்த நடவடிக்கையைப் பார்த்து வாய்விட்டுச் சிரிப்பதும், தமது அதிஷ்டத்தை நினைத்து ஆனந்தப்படுவதும், அவர்கள் இஷ்டம்.

கருத்துகள் இல்லை: