சனி, 26 மே, 2012

அ.தி.மு.க. ஆடு!பெட்ரோல் விலை குறைப்புக்கு தேவை

Viruvirupu,
பெட்ரோல் விலையேற்றம் குறித்து நாட்டிலுள்ள கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் போராடக் கிளம்பியுள்ள நிலையில், பெட்ரோல் விலையை இப்போதைக்குக் குறைக்க முடியாது என நேற்று அறிவித்துள்ளது மத்திய அரசு. பெட்ரோல் விலை குறைய வேண்டும் என்றால், பல அதிசயங்கள் நடக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாடு தழுவிய எதிர்ப்பு காரணமாக மத்திய அரசே, தாம் செய்த விலையேற்றத்தை சிறிது குறைத்துக் கொள்ளும் என்று கடந்த இரு தினங்களாக மீடியாக்களில் ஊகங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தன. “அப்படியான திட்டம் எதுவும் கிடையாது” என மீடியாக்களை அழைத்து கூறியிருக்கிறார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் எஸ். ஜெய்பால் ரெட்டி.

அமைச்சர் ரெட்டி, கடந்த புதன்கிழமை விலை உயர்வு அறிவிக்கப்பட்டது முதல் வாய் திறந்து கருத்து சொல்லாமல் இருந்தார். ஒரு வழியாக நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். “விலையை குறைப்பது எமது சைடில் (மத்திய அரசு) சாத்தியமில்லை. நிலைமையை சில நாட்கள் கூர்ந்து அவதானித்தபின், ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம்.  ஆனால் இப்போதே, வேறு ஒரு வழியில் முயற்சிக்கலாம்” என்றார்.
“மத்திய அரசு விலையைக் குறைக்க வேண்டுமென்றால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைய வேண்டும். உரு தடவையல்ல, தொடர்ந்து பல நாள்களுக்குக் குறைய வேண்டும். அடுத்து, அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர வேண்டும். அப்போதுதான் விலை குறைப்பு சாத்தியம்” என்பதே சென்ட்ரலின் நிலைப்பாடு என்றார் ரெட்டி.
இன்றைய உலக பொருளாதாரத்தில் ஒரு அதிசயம் நடந்தால்தான், ரெட்டி கூறியவை நடக்கும்.
அமைச்சர் கூறும் “வேறு வழியில் முயற்சிக்கலாம்” என்பது என்ன? மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரியை குறைத்துக் கொள்ளலாம் என்கிறார் அவர். “ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலமும், மத்திய அரசுக்கு வரியாக ரூ.14.78 கிடைக்கிறது. மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருமானம், ரூ.12.20 முதல் ரூ.19.83 வரை” என விளக்கமும் சொல்கிறார் அவர்.
அதாவது, பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் விலையில் சராசரியாக 40% தொகை மத்திய, மாநில அரசுகளின் வரியாகவே செல்கிறது. இரு தரப்பும் கிட்டத்தட்ட சமமாவே வருமானம் பெறுகின்றனர்.
மத்திய அரசு வரியைக் குறைக்க ‘இன்டர்நேஷனல் அதிசயங்கள்’ நிகழவேண்டும் என்று கூறியுள்ள அமைச்சர் ரெட்டி, மாநில அரசுகள் ‘லோக்கல் அதிசயங்களை நிகழ்த்திக் காட்டலாமே’ என்கிறார்.
மாநில அரசு பட்ஜெட்டுகள் சும்மாவே ததிக்கிணத்தோம் போடுகின்றன. அதுவும் தமிழகத்தில், இலவச மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு என்று ஏகப்பட்ட செலவுகள் உள்ளன. கோழி வழங்கும் திட்டம் ஒன்றும் பரிசீலனையில் உள்ளது. தவிர, நமது ஆட்சியின் சாதனைகளை விளம்பரம் செய்யும் செலவு வேறு உள்ளது. சமீப நாட்களாக பத்திரிகைகளில் வரும் தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை ரெட்டி காணவில்லையா? அதற்கெல்லாம் மத்திய அரசா பணம் கொடுக்கிறது?
தலைக்குமேல் எவ்வளவோ செலவுகள் இருக்கையில், சென்னையில் நாங்கள், என்ன லோக்கல் அதிசயத்தை நிகழ்த்த முடியும்?
‘விலையில்லாத ஆடு’ திட்டத்தை, ‘அமைச்சரில்லாத தலைமைச் செயலகத்தில்’ (அனைவரும் புதுக்கோட்டையில்) சொல்லி நிறுத்தவா முடியும்? நீங்கதான் ஏதாச்சும் செய்யணும் ரெட்டி!

கருத்துகள் இல்லை: