பதனி டோலாவில் நடந்த படுகொலை தமிழகத்தில் கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைக்கு இணையானது. அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்படும் கூலியை முப்பது ரூபாயாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரி, சி.பி.ஐ. (எம்.எல்.) லிபரேஷன் என்ற கட்சியின் தலைமையில் அணிதிரண்டு போராடி வந்தனர். கூலி விவசாயிகள் சங்கமாக அணிதிரண்டு தமது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதையும் கூலிஉயர்வு கேட்பதையும் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிகளான ராஜ்புத் மற்றும் பூமிகார் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தாழ்த்தப்பட்ட கூலிவிவசாயிகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க நடத்திய படுகொலைதான் பதனி டோலா படுகொலை.
ரன்வீர் சேனா ஜூலை 21, 1996 அன்று நடத்திய அத்தாக்குதலின்பொழுது, நய்முதீன் என்பவரின் மூன்று மாதப் பெண் குழந்தை மேலே தூக்கியெறியப்பட்டு, கொடுவாளால் பந்தாடப்பட்டுக் கொல்லப்பட்டது. இப்பச்சிளங்குழந்தையின் மரணம் ஒன்றே அப்படுகொலை எந்தளவிற்கு காட்டுமிராண்டித்தனமான முறையில் நடத்தப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும். ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட அத்தாக்குதலில் இறந்துபோன 21 பேரில், 20 பேர் பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும்தான்.
இப்படுகொலை நாடெங்கும் அம்பலமாகி, பலத்த கண்டனங்களையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியதால், படுகொலை நடந்த மறுநாளே பாதிக்கப்பட்டோரிடமிருந்து வாக்குமூலம் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம், அப்பொழுது ஆட்சியிலிருந்த லல்லு அர”க்கு ஏற்பட்டது. ஆனாலும், கீழமை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு பதினான்கு ஆண்டுகள் கழித்துதான் வந்தது. இவ்வழக்கில் 63 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தபொழுதே, நான்கு பேர் இறந்து போனார்கள்; ஐந்து பேர் பாட்னா உயர் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மீதிப் பேரில், 30 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்த கீழமை நீதிமன்றம், 3 பேருக்குத் தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மே, 2010 இல் தீர்ப்பளித்தது. பாட்னா உயர் நீதிமன்றம் தற்பொழுது இத்தீர்ப்பை தள்ளுபடி செய்து, 23 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்துவிட்டது.
படுகொலைக்கு காரணமான ரன்வீர் சேனா, ஆதிக்க சாதியின் கொலைப்படை
‘‘ரன்வீர் சேனா பதனி டோலாவில் வசிக்கும் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்ததாகக் கூறும்பொழுது, அவர்கள் தங்களை மட்டும் எப்படி உயிரோடு தப்பவிட்டிருப்பார்கள்? நீங்கள் புதர்களுக்கு அருகே மறைந்துகொண்டு சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தபொழுதே, ரன்வீன் சேனா தங்களைத் தேடி வந்து கொன்று போட்டிருக்காதா?” எனக் குதர்க்கமாகக் கேள்விகளை எழுப்பி, சம்பவத்தைப் பார்த்த நேரடி சாட்சியங்களைப் பொய் சாட்சியங்கள் என ஒதுக்கித் தள்ளியுள்ளனர், நீதிபதிகள்.
பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக நிதிஷ்குமார் அரசு அறிவித்த மறுநிமிடமே, அவரது அமைச்சரவையைச் சேர்ந்த கிரிராஜ் சிங், “பதனி டோலாவை இதோடு கிள்ளி எறிந்துவிட வேண்டும்; இப்பிரச்சினையை மேலும் மேலும் விவாதத்திற்கு உள்ளாக்குவது, நிலைமையை மோசமடையச் செய்யும்” என எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை நிதிஷ்குமாரின் நல்லாட்சியில் ஒட்டிக்கொண்டுள்ள ஆதிக்க சாதிவெறி பிடித்த ஏதோவொரு அமைச்சரின் குரலாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.
ரன்வீர் சேனாவிற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமிர் தாஸ் விசாரணை கமிசனை, நிதிஷ்குமார், தான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடனேயே கலைத்து உத்தரவிட்டார். இத்தீர்ப்பு வெளிவருவதற்கு ஏறத்தாழ ஒரு வருடம் முன்பாக, ரன்வீர் சேனாவின் தலைவனும் பதனி டோலா படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவனுமான பிரம்மேஷ்வர் சிங்கிற்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கில், பிணையை மறுத்து வாதாடாமல், அவனை மேளதாளத்தோடு வழியனுப்பி வைத்தது, நிதிஷ்குமார் அரசு.
இந்தப் பின்னணியிலிருந்து பார்த்தோமானால், பாட்னா உயர் நீதிமன்றத் தீர்ப்பு, ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட ஏதோ இரண்டு நீதிபதிகளின் உள்ளக்கிடக்கையல்ல என்பதையும் நிதிஷ்குமாரின் நல்லாட்சி என்பது ஆதிக்க சாதிக் கும்பலின் விசுவாச ஆட்சி என்பதையும் புரிந்துகொள்ளலாம். அவரது ஆட்சியைப் புகழ்ந்து தள்ளிவரும் தேசியப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும்கூட இத்தீர்ப்பு குறித்து அடக்கியே வாசிக்கின்றன. ஜெஸிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து வானத்துக்கும் பூமிக்குமாக சாமியாடிய ஊடகங்களின் மனசாட்சி, இந்தப் பிரச்சினையில் ஊமையாக இருப்பதேன் என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள், அவைகளின் ஆதிக்க சாதிவெறிப் பாசமும் அம்பலப்பட்டுப் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக