ஞாயிறு, 20 மே, 2012

தே.மு.தி.க ரகசிய தூது தி.மு.க., ஆதரவை பெற தீவிர முயற்சி

ஆண்டவனுடன்..கூட்டணி..மக்களுடன் கூட்டணி .... இப்போ வேறு ஸ்டைல்..தேர்தல் நேரத்தில் அம்மா உடன் கூட்டணி,..இடை தேர்தல் நேரத்தில் கருணா உடன் கூட்டணி,,,இதுவும் ஒரு அரசியல் அநாதை பேசாமல் மருத்துவர் சனி தாங்கியுடன்..கூட்டணி தான் சரி இவருக்கு...
 புதுக்கோட்டை இடைத்தேர்தலில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று, பொது வேட்பாளராக போட்டியிட, தே.மு.தி.க., தலைமை ரகசிய தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.,- ம.தி.மு.க.,- பா.ம.க.,- இ.கம்யூ.,- மா.கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் ஒதுங்கியதால், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தே.மு.தி.க.,வும், நேரடியாக பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நேரடி மோதல்: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இக்கட்சிகள், உள்ளாட்சித் தேர்தல், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், மற்ற கட்சிகள் ஒதுங்கிய நிலையில் புதுக்கோட்டையில் நேரடியாக மோதவுள்ளதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலம் காலமாக, தி.மு.க.,விற்கு எதிராகவே அரசியல் நடத்தும் அ.தி.மு.க.,வினர், தற்போது தே.மு.தி.க.,வுடன் மோதலில் ஈடுபட்டு வருவது, இந்த பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சவாலை ஏற்று தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., தனது ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொண்டாலும், டெபாசிட் இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால், இம்முறை கவுரவமான ஓட்டை பெற வேண்டும் என்று, அக்கட்சி தலைமை விரும்புகிறது. அதற்கேற்ற வகையில் வேட்பாளரை அறிவித்து, காய்களை நகர்த்த துவங்கியுள்ளது. மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அக்கட்சி தொண்டர்களின் ஓட்டுகளை தனதாக்கும் வகையிலான முயற்சிகளில், தே.மு.தி.க., தலைமை ஈடுபட்டுவருகிறது. புதுக்கோட்டையில், அ.தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு தி.மு.க.,வின் ஆதரவைப் பெற வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணியால் தான் ஆட்சியை இழந்தோம் என்ற எண்ணம், தி.மு.க.,வினர் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது.

மென்மையான போக்கு: இருப்பினும், தே.மு.தி.க.,வை வளைத்துப்போட்டு, லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று, தி.மு.க., தலைமை விரும்புகிறது. ஆட்சியின் ஆரம்பத்தில், தே.மு.தி.க.,வுடன் உரசலில் இருந்த தி.மு.க., நிர்வாகிகள், தற்போது, அக்கட்சியுடன் மென்மையான போக்கை கடைபிடித்து வருகின்றனர். முதல்வராக இருந்தபோது, விஜயகாந்த் பெயரை உச்சரிக்காத தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, முதல் ஆளாக விஜயகாந்திற்கு ஆதரவான கருத்தை, அவர் தெரிவித்தார். சட்டசபை தேர்தலின் போது, விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். விஜயகாந்த், ஸ்டாலின் விமானத்தில் சந்தித்து, தங்களது பழைய நட்பை ரகசியமாக புதுப்பித்துக் கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் அழகிரி மீது பாய்ந்து வந்த விஜயகாந்தும், அவர் மீதான விமர்சனத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டுள்ளார். தற்போது நிலவும் இதுபோன்ற சுமுகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, தி.மு.க., ஆதரவைப் பெற, தே.மு.தி.க., முயற்சித்து வருகிறது. மதுரையில் உள்ள தே.மு.தி.க., மாநில நிர்வாகி மூலம், அழகிரியிடம் ஆதரவு கேட்டு தூது அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டாலினிடமும், மற்றொரு நிர்வாகி மூலம் தூது அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தே.மு.தி.க., தூதர் விஜயகாந்தை சந்திப்பார் எனத் தெரிகிறது. நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், கட்சி நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறி, மறைமுக ஆதரவையாவது தர வேண்டும் என்று, தூதர்களிடம் தே.மு.தி.க., தலைமை கூறி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அழகிரி, ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் இருவரும், ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்களா என்பது சந்தேகம் தான்.

வாய்ப்பு உள்ளது: இதேபோல் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளுக்கும், தே.மு.தி.க., தலைமை தூது அனுப்பியுள்ளது. பெரும்பாலான சமயங்களில், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வரும் இ.கம்யூ., தலைமை, தே.மு.தி.க.,விற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், தொகுதியை இழந்த துக்கத்தில், அக்கட்சி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், தே.மு.தி.க.,விற்கு ரகசியமாக ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், தே.மு.தி.க.,விற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும், பெரும் பகுதியினர், இது லோக்சபா தேர்தல் நேரத்தில் கட்சிக்கு பலவீனமாக அமையும் என்பதால், யாருக்கும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று, முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. பொது வேட்பாளருக்கு ம.தி.மு.க.,- பா.ம.க.,- வி.சி., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், அது தே.மு.தி.க.,வாக இருந்தால், ஆதரவு அளிப்பது சந்தேகம் தான். இருப்பினும், தி.மு.க., ஆதரவை பெற்றுவிட்டால், அந்த கட்சிக்கு நெருக்கமான கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என, தே.மு.தி.க., தலைமை உறுதியாக நம்புகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: