புதன், 23 மே, 2012

Next President சாங்மா??

குடியரசுத் தலைவர் பூர்ணோ சாங்மா?

பிரணாப் முகர்ஜியைக் குடியரசுத் தலைவர் ஆக்குவதே நல்லது என்று கொஞ்சம் விளையாட்டுத்தனமாக எழுதியிருந்தேன். இப்போது சீரியஸான பதிவு.
காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் யாரைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தலாம் என்பதில் ஒரே குழப்பம். தானாக யாரை நிறுத்தினாலும் அது செல்லுபடியாகாது என்று பாஜகவுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. எனவே மீண்டும் அப்துல் கலாமுக்கு ஆதரவு தரலாம் என்று நினைத்து, அது பற்றிப் பேசி, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

காங்கிரஸின் கதை வேறு. அவர்கள் பிரதிபா பாடில் போல ஜிங்சக் ஆசாமி யாராவது கிடைப்பார்களா என்று பார்க்கிறார்கள்போல. வேறு யாரையாவது குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டால் நாளை ஏதேனும் பிரச்னை வருமோ என்று பயப்படுகிறார்கள்.
இந்நிலையில் நவீன் பட்நாயக்கும் ஜெயலலிதாவும் சமயோசிதமாக யோசித்து பூர்ணோ சாங்மா பேரை முன்மொழிந்துள்ளனர். சாங்மா மக்களவை சபாநாயகராக இருந்தபோதே அனைவரையும் கவர்ந்தவர். நன்கு பேசக்கூடியவர். எனக்கு மேகாலயா அரசியல் பற்றி எதுவும் தெரியாது; ஆனால் சாங்மா பற்றி மோசமான செய்தி ஏதும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். எனவே நேர்மையானவராக இருக்கவேண்டும். குடியரசுத் தலைவர் பதவி பெரும்பாலும் ஏதோவிதத்தில் ‘டோக்கனிசம்’தான். ஒரு முஸ்லிம், ஒரு தென்னாட்டவர், ஒரு சீக்கியர், ஒரு பெண் என்றவகையில்தான் அடையாளங்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட அடையாள அரசியலில் வடகிழக்கு, டிரைபல் போன்ற அடையாளங்கள் தாமாகவே முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரதிபா பாடில் போல வெற்று அடையாளமாக இல்லாமல், சாங்மாவை தைரியமாக வெளிநாட்டுக்கு அனுப்பலாம். கலாம் போல உணர்ச்சிவசப்பட்டு ஐ.நாவில் உரை ஆற்றமாட்டார் என்றாலும் அழகாக, ஆணித்தரமாகப் பேசி உலகத் தலைவர்களைக் கவரக் கூடியவர்.

எல்லாம் சரி, இவர் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறதா? காங்கிரஸ் இவருக்கு வாக்களிக்காது. தேசியவாத காங்கிரஸ் தன் சொந்தக் கட்சிக்காரரான இவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதனால் என்ன? அதுவே இவருடைய பலமாக இருக்கலாம்.

சோனியா பிரதமர் ஆவதை வலுவாக எதிர்த்தவர் என்றவகையில் பாஜக, இறுதியில் இவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யலாம். இடதுசாரிகளின் பார்வையிலும் இவர் ஏற்கத்தக்கவராக இருப்பார். இந்த இரு கட்சிகளும் முடிவு செய்துவிட்டால், பல மாநிலக் கட்சிகள் இவருக்கு ஆதரவைத் தரும். சமாஜ்வாதி எதிர்த்தால், பகுஜன் சமாஜின் ஆதரவு இருக்கும். அப்படியானால் குறுகிய வித்தியாசத்தில் இவர் வென்றுவிடுவார். அது காங்கிரஸுக்கு நல்லதல்ல என்ற ஒரே காரணத்தாலேயே பாஜக இவருக்கு ஆதரவு தரவேண்டும். ஆனால் அக்கட்சி கொஞ்சம் வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதே நலம். முதலில் இடதுசாரிகள் தம் ஆதரவைத் தெரிவிக்கும்வரை பொறுமையாக இருந்துவிட்டு, பிறகு ஆதரவைத் தெரிவிப்பதே பாஜகவைப் பொருத்தமட்டில் சரியான கேம்பிளான்.

கருத்துகள் இல்லை: