நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தனது சகோதரர் மனோவை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரிக்கும் படம் வருவான் தலைவன். சேகர் ராஜா இயக்கும் இந்த படத்தில் தீக்ஷா சேத் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா தமிழுக்கு வருகிறார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட இயக்குனர் பி. வாசு பேசியதாவது,
தெலுங்கில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவை வைத்து படம் எடுப்பதற்காக அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் கதை சொல்லச் சென்றேன். எனக்கு ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் கதை சொல்ல வராது அதனால் தமிழிலேயே சொல்கிறேன் என்றேன்.
உடனே அவர், ஆந்திர முதல்வரிடம் வந்து தமிழில் கதை சொல்கிறேன் என்று சொல்ல என்ன தைரியம் உனக்கு என்றார். அதைக் கேட்டு நான் பயந்துவிட்டேன். ஆனால் அவரோ, நான் 40 ஆண்டுகள் தமிழ்நாட்டு தண்ணீர் குடித்து வளர்ந்தவன். எனக்கும் தமிழ் தெரியும். தமிழிலேயே கதையைச் சொல் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
மேலும் அடுத்த முறை வரும்போது தெலுங்கில் கதை சொல்ல வேண்டும் என்றார்.
ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், மம்மூட்டி ஆகிய 4 மொழி நடிகர்களும் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் தான். அவர்களின் பிள்ளைகளும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். அதனால் தான் அவர்களை எளிதில் அணுக முடிகிறது. அவர்களிடம் தமிழில் கதை சொல்லி கால்ஷீட் வாங்கி நம் தமிழ் இயக்குனர்கள் பிற மொழிகளில் வெற்றி பெற முடிகிறது என்றார்.