வியாழன், 24 மே, 2012

3 வயது சிறுவன் கடத்திக் கொலை - நரபலியா?

மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனம்

பல்லடம், மே 23- பல்லடம் அருகே 3 வயது சிறுவனை கடத்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் ரத்தக்கறை படிந்த ஒரு சாக்குப்பையும் அதற்கு அருகே  ஒரு செப்புத்தகடும் கிடந்ததை அடுத்து சிறு வனை கடத்திச் சென்றவர்கள் நரபலி கொடுத் திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைக் கட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சென்ற ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி நரபலி கொடுத்த சம்பவத்தில் ஒன்றரை ஆண்டுகள் சென்ற பின்னரே நரபலி கொடுத்த மூன்று பேர் தற்போது கைது செய்யப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன்பாளையம் பெரியகம்மாளப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). பனியன் கம்பெனி தொழிலாளி. இவருடைய மனைவி சண்முகப்பிரியா (36). இவர் கம்மாளப்பட்டி ஊராட்சியின் நான்காவது வார்டு உறுப்பினராக இருக்கிறார். இவர்களுடைய மகள் காவ்யா (5), மகன் நவீன் (3). சிறுவன் நவீன் கடந்த 20ஆம் தேதி மதியம் 3 மணியளவில் வீட்டு முன் விளையாடிக் கொண்டு இருந்தான். சண்முகப்பிரியா வீட்டுக்குள் இருந்தார். அவர் சிறிது நேரம் கழித்து தேடியபோது, அங்கு விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் நவீனை காணவில்லை. இதனால் கணவனும், மனைவியும் கம்மாளப்பட்டி சுற்றுப்புற பகுதிகளில் சிறுவன் நவீனை தேடியும் கிடைக்க வில்லை. பின்னர் இதுகுறித்து காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காணாமல் போன சிறுவனை காவல்துறையினர்  தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை கம்மாளப்பட்டியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் மதகு பகுதியில் ஒரு சிறுவனின் உடல் கிடப்பதை பார்த்து அப்பகுதியில் உள்ளவர்கள் காமநாயக்கன் பாளையம் காவல்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வாய்க்கால் மதகு பகுதியில் கிடந்த சிறுவனின் உடல்,  காவல்துறை யினரால் தேடப்பட்டு வந்த சிறுவன் நவீனின் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. சிறுவன் நவீனின் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது. பிணத்தின் அருகே ரத்தக்கறை படிந்த ஒரு சாக்குப் பையும் அதற்கு அருகே பூஜையில் வைக்கப்பட்ட ஒரு செப்புத்தகடும் கிடந்தது. இதனால் சிறுவன் நவீனை சிலர் கடத்திச் சென்று நரபலியிட்டு கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசா ரணையை மேற்கொண்டுள்ளனர். தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
மதுரை அருகே சிறுமி நரபலி இதேபோல் சென்ற ஆண்டு ஜனவரி முதல் நாள் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி  கிராமத்தைச் சார்ந்த 5 வயது  சிறுமி ராஜலட்சுமி  காணாமல் போனார். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வீரணன் என்பவரது மாட்டுத் தொழுவத்தில் ராஜலட்சுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்ததால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய விசாரணையில் தற்போது கச்சைகட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவர் அயூப்கான் மற்றும் முருகேசன், பொன்னுசாமி ஆகியோர் சிறுமியை நரபலி கொடுத்ததாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அயூப்கான்,   கட்டிவரும் கல்லூரிக்  கட்டுமானப் பணியில் தொய்வு இருந்ததால் குழந்தை ஒன்றை நரபலி கொடுக்க முடிவு செய்து கச்சைகட்டி கிராமத்தைச் சேர்ந்த மலபார், பொன்னுச்சாமி, முருகேசனைத் தொடர்பு கொண்டுள்ளார்.   இதைத் தொடர்ந்தே  சிறுமி ராஜலட்சுமி கடத்தப்பட்டு பின்னர்  சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை சில்வர் தூக்குவாளியில் பிடித்துக் கொண்டனர்.  பின்னர் சிறுமியின் உடலை கொண்டு போய், வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் போட்டனர். ரத்தத்தை அயூப் கானிடம் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுமியின் ரத்தத்தை கட்டி முடிக்கப்படாத கட்ட டத்தில் அயூப்கான் தெளித்துள்ளார். அத்துடன் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு லட்சக்கணக்கில் பணமும் கொடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து நரபலி கொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

கருத்துகள் இல்லை: