புதன், 28 டிசம்பர், 2011

மன்னார்குடி நிர்வாண சாமியாரின் சாபத்தால், சசிகலா அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாக

மன்னார்குடி நிர்வாண சாமியாரின் சாபத்தால், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாக பரவிய தகவலால், சாமியார், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இருந்து, மன்னார்குடிக்கு அழைத்து வரப்பட்டார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, மூவாநல்லூரை சேர்ந்தவர் சேகர், 37. பெயின்டர் மற்றும் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்தார். ஆறு மாதம் முன், திடீரென வீட்டை விட்டு வெளியேறி, நிர்வாணக் கோலம் கொண்டு, மன்னார்குடியில் உள்ள, சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி சித்தர் கோவிலில் தங்கிவிட்டார். "என் உடலில், சித்தர்களுக்கு உண்டான மாற்றங்கள் தோன்றியதால், நிர்வாண கோலத்துக்கு மாறிவிட்டேன்' எனக் கூறிய சேகர், யாரிடமும் பேசாமல் இருந்தாலும், தன்னை பார்க்கும் பக்தர்கள் சிலருக்கு மட்டும், அருள்வாக்கு மற்றும் குறி சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இவரை பற்றி, சில பத்திரிகைகளில் செய்தி வெளியானதால், திடீரென பிரபலமானார். இவரை பார்க்க வரும் பக்தர்கள், குறிப்பாக, அரசியல்வாதிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையறிந்த சசிகலாவின் தம்பி திவாகரன், 45 நாளுக்கு முன், நிர்வாண சாமியாரை காணச் சென்றார்.
அப்போது, நிர்வாண சாமியார், சில கொடூரமான வார்த்தைகளால் திட்டி, "இங்கேயும் நீ வந்துட்டாயா... இன்னும் மூன்று மாதத்தில், உன் பெயர், புகழ் அனைத்தும் போய்விடும்' என சாபமிட்டார்.
திகைப்படைந்த திவாகரன், ஆத்திரத்தை வெளிக் காட்டாமல் சென்றுவிட்டார். பின் விளைவாக, மன்னார்குடி போலீசார், "மனநிலை பாதிக்கப்பட்ட சேகர், நிர்வாண கோலத்தில், பக்தர்களுக்கு இடையூறு செய்கிறார்' என, வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். மன்னார்குடி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
"மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், கோர்ட் தலையிட முடியாது' என, மாஜிஸ்திரேட் ஐயப்பன் பிள்ளை, நிர்வாண சாமியாரை, "ரிமாண்ட்' செய்ய மறுத்து விட்டார்.
அதையடுத்து சாமியாரை, மன்னார்குடியில் பிரபலமான ஒருவரின் சொகுசு காரில் ஏற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், போலீசார் சேர்த்து விட்டனர்.
ஒரு மாதத்துக்கு முன் நடந்த இச்சம்பவம், மன்னார்குடி பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த, 20 நாளில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தன் தோழி சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி திவாகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலை சேர்ந்த, 18 பேரை, கட்சியில் இருந்து நீக்கினார்."சசிகலா கும்பலை ஜெயலலிதா அதிரடியாக நீக்கியதற்கும், நிர்வாண சாமியார் கொடுத்த சாபம் தான் காரணம்' என, திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் நம்பத் துவங்கி விட்டனர்.தகவலறிந்த, நிர்வாண சாமியாரின் ரெகுலர் கஸ்டமரான, மதுரையை சேர்ந்த மக்கள் முன்னேற்றக் கட்சியின் மாநிலத் தலைவர் முத்துராஜன், சென்னைக்கு சென்று நிர்வாண சாமியாரை மீட்டு, மீண்டும் மன்னார்குடிக்கு அழைத்து வந்து விட்டார்.

"டிஸ்சார்ஜ்' ஆனது எப்படி? : சென்னை மனநல காப்பகத்தில் இருந்த நிர்வாண சாமியாரை, மருத்துவமனை நிபந்தனைகளைக் காட்டி டீன் குமார், முத்துராஜனோடு அனுப்ப மறுத்து விட்டார். உடனே, "திவாகரனால் தான் சாமியார் தூக்கப்பட்டார்' என்பதற்கான ஆதாரங்களை முத்துராஜன் திரட்டி, முதல்வருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். அடுத்த ஓரிரு நாளில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், டீன் குமாரை, போனில் தொடர்பு கொண்டார். அதையடுத்து, முத்துராஜிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு,
நிர்வாண சாமியார், "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை: