ஞாயிறு, 25 டிசம்பர், 2011

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர்- கருப்புக்கொடி போராட்டத்தால் மிக பலத்த பாதுகாப்பு-100 பேர் கைது


Manmohan Singh
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை சென்னை வருகிறார். அவருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக, தேமுதிக, விவசாய அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அறிவித்துள்ளதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலும், கோவில்பட்டியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை 7 மணியளவில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்கவுள்ளனர்.

இதையடுத்து அவர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அங்கு இரவு தங்குகிறார். நாளை காலை 10 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் கணித மேதை ராமானுஜத்தின் 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் திருச்சி செல்லும் பிரதமர் அங்கிருந்து காரைக்குடி பயணமாகிறார். அங்கு டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கணிதமேதை ராமானுஜம் கணித ஆய்வு மையத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் சிவகங்கை மாவட்டம் மானகிரியில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்கிறார். அதை முடித்துக் கொண்டு காரைக்குடி திரும்பும் அவர் அங்கிருந்து திருச்சி சென்று டெல்லி திரும்புகிறார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் செயல்படாத நிலையில் இருக்கும் பிரதமரைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டுவோம் என்று மதிமுக, தேமுதிக, சிபிஐ மற்றும் விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதனால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம், ராஜ் பவன் செல்லும் பாதை, ராஜ்பவனிலிருந்து பல்கலைக்கழக நூற்றாண்டு மைய அரங்கம் செல்லும் பாதை, திருச்சி விமான நிலையம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மானகிரி என பிரதமர் செல்லும் அனைத்து இடங்களிலும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கிட்டத்தட்ட 11 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமான நிலையம், பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் ஆகிய இடங்களுக்குப் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சென்னையில் உள்ள விடுதிகள், உணவகங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடந்து வருகிறது.

கோவில்பட்டியில் 50 பேர் கைது

இதேபோல கோவில்பட்டியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: