செவ்வாய், 27 டிசம்பர், 2011

பிற சமூகத்தினரை எதிரிகளாகப் பாவிக்கும் வெறுப்பு அரசியல்

பத்ரி நாராயண் திவாரி எழுதிய Fascinating Hindutva: Saffron Politics and Dalit Mobilisation என்னும் நூலை, வலைவிரிக்கும் இந்துத்துவம் என்னும் தலைப்பில் தமிழில் வெளியிடுகிறது கிழக்கு பதிப்பகம்.

முன்னுரை
புதுமணப் பெண்ணின் தங்க மூக்குத்தியை, அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் நாசூக்காகத் திருடும் ஒரு திருடனின் கதை கிராமங்களில் அடிக்கடிச் சொல்லப்படுகின்றது. அதேபோல, அரசியல் ஆதரவு பெற்ற மதவாதச் சக்திகள், சமுதாயத்தில் உள்ள நல்லிணக்கத்தை உடைக்க, பாமர மக்களுக்கிடையே, அவர்களுக்கேத் தெரியாமல் மறைமுகமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்தச் சக்திகள், சமுதாயத்தில் உள்ள பல்வேறு சமூகங்களின் தனித்தன்மைகளைப் பெரிதுபடுத்தி, ஒவ்வொன்றுக்கும் ஒரு சாதி அடையாளத்தைப் பூசி, ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை எதிரியாகப் பார்க்கும் மனநிலையை உருவாக்கிவிடுகின்றன.
ஒரு சமூகம் தன்னுடைய தனித்தன்மையையும் அடையாளத்தையும் பெருமையாக நினைக்கும் உணர்வே பின்னர் மற்றொரு சமூகத்தின்மீதான பகை உணர்வாக மாறிவிடுகின்றது.
இந்தியச் சமுதாயத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மதவாதச் சக்திகளில் ஒன்றான இந்துத்துவத்தை ஆராய இந்தப் புத்தகம் முயல்கிறது. இப்படி ஒவ்வொரு சமூகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதன் மூலமாக, இந்தியாவை ஒரு முழுமையான இந்து கலாசார தேசியமாக மாற்றுவதே இந்துத்துவத்தின் நோக்கமாகும். இவர்கள் தொடக்கத்தில், உயர்சாதி இந்துக்களால் பெரிதும் மதிக்கப்படும் ராமாயணத்தின் கதாநாயகனான ராமனைப் பயன்படுத்தி, நாட்டில் உள்ள எல்லா இந்துக்களையும் ஒன்றுதிரட்டினர்.
தற்போது எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும், முக்கியமாக கிராமப்புறங்களில் பரவியுள்ள தலித் சமூகத்தினர் இந்திய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளதால், இந்துத்துவச் சக்திகளின் பார்வை அவர்கள்மீது பட்டுள்ளது. தமக்கென்று தனிச்சிறப்புகள், கதாநாயகர்கள், மாவீரர்கள், வரலாறுகள் போன்றவற்றைக் கொண்டுள்ள பல்வேறு தலித் சாதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான உத்திகளை இந்துத்துவச் சக்திகள் வகுக்க ஆரம்பித்துள்ளன.
இந்துத்துவ அறிஞர்கள், தலித் சமூகத்தில் உள்ள தொன்மையான கதைகளிலும் வரலாறுகளிலும் உள்ள மாவீரர்களையும் கதாநாயகர்களையும் மத்திய காலத்தில் முஸ்லிம் படையெடுப்புக்கு எதிராகப் போரிட்டு இந்து மதத்தையும் இந்து கலாசாரத்தையும் காப்பாற்றிய தைரியமான இந்திய மாவீரர்களாகவோ அல்லது தொன்ம, புராணக் கதைகளுக்குப் புதிய தொடர்புகளைக் கண்டுபிடித்து ராமரின் மறு அவதாரங்களாகவோ உருவகப்படுத்தத் தொடங்கினர்.
கிராமங்களின் கலாசாரக் கட்டமைப்பின் அங்கங்களாக இருக்கும் பல்வேறு சமூகங்களுக்கிடையே, மெதுவாக ஆனால் நிலையான சமூகச் சுவர்களை கட்டியமைப்பதில் இந்துத்துவத்தின் கீழ்நிலை உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சாதிகளின் கிராமப்புறப் பாரம்பரியங்களில், முஸ்லிம்கள் உள்பட பிற சமூகத்தினரை எதிரிகளாகப் பாவிக்கும் சமூகக் கூறுகளும் சிந்தனைகளும் நிரம்பியுள்ள நிலையிலும், முஸ்லிம்களும் தலித்துகளும் ஒருவரை ஒருவர் சார்ந்து, சுமுகமாகப் பல நூற்றாண்டுகளாக இணைந்து வாழ்ந்துவருகிறார்கள். ஆனால், இன்று, மதவாத மற்றும் சாதியப் பிளவுச் சக்திகள், ஏற்கெனவே உள்ள மதவாதச் சிந்தனைகளைப் பயன்படுத்தி, தலித் சமூகங்களை இந்து அடையாளத்துடன் ஒன்றிணைத்து, தலித் சமூகத்தினரிடையே முஸ்லிம்களுக்கு எதிரான பகைமையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மூக்குத்தித் திருடனின் கதையைப்போல, இந்தச் சக்திகள் தங்களது நோக்கத்தில் வெற்றிகண்டுவிடுமோ என்கிற அச்சம் தோன்றுகின்றது. இந்தத் தீய சக்திகளை எதிர்த்து புரட்சிகர, முற்போக்குச் சக்திகள் போராடாவிட்டால், அவற்றைத் தடுக்கவே முடியாது.
அடிமட்ட இயக்க அளவில் இந்துத்துவ வெறுப்பு அரசியல் எவ்வாறு பகைமை உணர்வை வளர்த்து, நாட்டின் சமுதாயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறது என்பதை இந்தப் புத்தகத்தின் மூலமாக வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன். இந்த முயற்சிக்கு உதவியாக இருந்த ஆஷிஸ் நந்தி, கிறிஸ்டோஃப் ஜாஃப்ரிலா, ராஜன் ஹர்ஷே, கியான் பாண்டே, சுதா பாய், சைமன் சார்ஸ்லி மற்றும் வட இந்தியாவில் அடிமட்ட அளவில் நடைபெறும் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள எனக்கு உதவிய ஜோதிர்மய் ஷர்மா ஆகியோருக்கு என் நன்றிகள். எனக்குப் பெரிதும் உதவிய ரவி ஸ்ரீவத்சவா, பாஸ்கர் மஜூம்தார், பிஸ்னு மஹோபாத்ரா, சூசன் லெஜன் ஆகியோருக்கும் நன்றி. இந்தப் புத்தகத்தின் பெரும்பகுதி நான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ஸ்மட்ஸ் ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது எழுதப்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள எண்ணற்ற அறிஞர்களைச் சந்திக்கவும், எண்ணற்ற நூலகங்களைப் பயன்படுத்தவும் முடிந்தது.
கேத்தி ஒய்ட்டுக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள உல்ஃப்சன் கல்லூரியைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இப்புத்தகத்தில் உள்ள ஓர் அத்தியாயம், எகனாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் வீக்லி (இ.பி.டபிள்யூ) இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையின் அடிப்படையிலும், மற்றொரு அத்தியாயம், சுதா பாய் எழுதிய ‘பொலிடிக்கல் பிராசஸ் இன் உத்தரப் பிரதேஷ்: ஐடெண்டடி, எகனாமிக் ரிஃபார்ம்ஸ் அண்டு கவர்னன்ஸ்’ என்கிற புத்தத்தின் ஒரு அத்தியாயத்தின் அடிப்படையிலும் எழுதப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய இ.பி.டபிள்யுவுக்கும் சுதா பாய்க்கும் என் நன்றி.
என் இந்த ஆராய்ச்சிக்குப் பக்கபலமாக இருந்த என் தந்தை, மனைவி மற்றும் எனது மகள்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பத்ரி நாராயண் திவாரி

கருத்துகள் இல்லை: