வியாழன், 29 டிசம்பர், 2011

ஆர்.சுந்தர்ராஜன்:அவங்க சொல்றதைக் கேக்கறதுக்கு ஒரு ஆள் வேணும்னு நெனைக்கிறாங்களே தவிர டைரக்டர்


ஆர்.சுந்தர்ராஜன்& எண்பதுகளில் வெள்ளி விழாப் படங்களைத் தந்த இயக்குநர். ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘ராஜாதிராஜா’, ‘குங்குமச்சிமிழ்’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘நான் பாடும் பாடல்’ என்று மென்மையான கதை மூலம் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை குடும்பத்தோடு தியேட்டருக்கு கூட்டி வந்தவர்.
அப்படிப்பட்ட தரமான படைப்பாளியாக தலை நிமிர்ந்து நின்ற இயக்குநர் சுந்தர்ராஜன், இன்று முழுநேர கேட்டரிங் கலைஞராகிப் போனதுதான் பலரை விழி உயர்த்திப் பேச வைத்திருக்கிறது. இதை அவரிடமே கேட்டோம்.
பல வெற்றிப் படங்களை தந்த நீங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா?
‘‘இப்ப சினிமா, ஹீரோக்கள் கையிலே போயிடுச்சு. அவங்க சினிமாவை வேற மாதிரி பாக்குறாங்க. அவங்களைப் பொறுத்த வரைக்கும் அவங்க சொல்றதைக் கேக்கறதுக்கு ஒரு ஆள் வேணும்னு நெனைக்கிறாங்களே தவிர டைரக்டர் வேணும்னு நெனைக்கிறதில்லே. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் பெரிய படம்ங்கறது ஒரு ‘ஆலமரம்‘, ‘நிழல்Õ கொடுக்கும். சின்ன படம் ‘நெல்லுÕ, அதுதான் ‘உயிர்’ கொடுக்கும். அந்த சின்னப் படங்களையே இன்னிக்கி அழிச்சுட்டாங்க.

எந்த ஹீரோ எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்திருந்தாலும், தோற்றுப் போகும்போது, மறுபடியும் அவங்களை தூக்கி விட கதாசிரியரும், டைரக்டராலும்தான் முடியும். இதுதான் வரலாறு. ஆனால், இப்ப கதைக்கும் கதாசிரியருக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்கறாங்க. பேசாமே ரைட்டர்ஸ் யூனியனையும் டைரக்டர் யூனியனையும் எடுத்திடலாம்.’’

இயக்குநர் சங்கப் பொறுப்பில் இருந்தீர்கள். அதிலிருந்து ஏன் விலகினீர்கள்?

‘‘நான் பொருளாளர் பொறுப்பில் இருந்தேன். திருப்பதி கோயில் உண்டியல்ல கோடி ரூபாயைக் கூட நாம காணிக்கையா போடலாம். ஆனா அதே உண்டியல்லருந்து ஒரு பைசா எடுக்கக் கூட நமக்கு உரிமை கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் இதேபோலதான் பொருளாளர் பதவியும். ஆனால், இந்த பாலிஸி பலருக்கும் பிடிக்கல. அவங்க காட்டுற இடத்துல கையெழுத்துப் போடச் சொல்றாங்க. அப்ப நான் எதுக்கு பொருளாளரா இருக்கணும். அதான் நானே ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டேன்.’’

இத்தனை வருட சினிமா உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது என்ன?

‘‘‘நான் பாடும் பாடல்’ ரிலீஸாகி ஓடிக்கிட்டிருந்த நேரம் ஏ.வி.எம்லருந்து என்னை கூப்பிட்டு கதை கேட்டாங்க. நான் ஒரு கதையைச் சொன்னேன். அவங்களுக்கு கதை பிடிச்சிருந்தது. எங்களுக்கு படம் பண்ணுங்கனு சொன்னாங்க. ஆனால், ஒரு சொந்த வீடு வாங்க யார் எனக்கு அட்வான்ஸ் கொடுக்குறாங்களோ அவங்களுக்குதான் படம் பண்றதா இருந்தேன். இதை ஏ.வி.எம்ல சொன்னேன். அவங்களும் உடனே அட்வான்ஸா 50 ஆயிரத்துக்கான செக் கொடுத்தாங்க. வீடு ரெண்டு லட்சம். நான் சொன்ன கதையை அவங்க டீம்ல ஆலோசனை செய்துட்டு மறுபடியும் என்னைக் கூப்பிட்டாங்க. இந்தக் கதைக்கு யாரை ஹீரோவா போடலாம்னு கேட்டாங்க. நான் கருப்பா இருக்கும் விஜயகாந்த்தான் ஹீரோன்னு சொன்னேன். உடனே அவங்க சிவக்குமாரை சொன்னாங்க. நான் மறுத்துட்டேன். பிறகு பஞ்சு அருணாச்சலத்தை பார்த்து அதே கதையைச் சொன்னேன். உடனே 50 ஆயிரத்துக்கு செக் கொடுத்து ‘இதை ஏ.வி.எம்.ல கொடுத்திடுங்க. நானே பண்றேன்’னு சொல்லிட்டார். அப்படி விஜயகாந்திற்காக சப்போர்ட் பண்ணி பேசின படம்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’. அந்தப் படம் அவருக்கு பெரிய பிரேக் தந்ததைத் தொடர்ந்து ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘என் ஆசை மச்சான்’ இப்படி பல ஹிட் படங்களை அவருக்குத் தந்தேன். ஆனா அதே விஜயகாந்த் என் மகன் பைக் விபத்துல இறந்து போனப்ப பக்கத்து தெருவுல இருந்துகிட்டே எட்டிக் கூட பாக்கல. இதுதான் சார் சினிமா.’’

சமையல் தொழிலக்கு எப்படி வந்தீர்கள்...

‘‘நான் அடிப்படையிலே பேக்கரி தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவன். ஊர்ல ஹோட்டல் கூட வெச்சிருக்கோம். சினிமாவில் ஒரு கட்டத்துல வாய்ப்புக் குறைந்த போது வேறு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். நமக்கு தெரிஞ்ச தொழில் ஹோட்டல் பிசினஸ். அதேயே செய்யலாம்னு முடிவு பண்ணினேன். இப்ப என் கிட்ட பல பேர் வேலை பார்க்குறாங்க. சமீபத்தில் பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார் வீட்டுக் கல்யாணத்துக்கு நான்தான் சமையல் ஏற்பாடெல்லாம் செய்தேன். அதுவுமே ஒரு தொழில்தானே. யாராவது கதை இருக்கான்னு கேட்டால் அவங்களுக்காக படம் செய்து கொடுப்பேன்’’ என்றார் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்.

- தேனி கண்ணன், படங்கள்: சித்ராமணி

thanks kumudam +rahuman HCM City

கருத்துகள் இல்லை: