திங்கள், 26 டிசம்பர், 2011

மதுரை ஆதீனம்: முல்லைப் பெரியாறு அணை பகுதி மீனாட்சியம்மனுக்கு சொந்தமானது


Madurai Aadheenam

மதுரை: முல்லைப் பெரியாறு அணை பகுதி மீனாட்சியம்மனுக்கு சொந்தமானது. எனவே, கேரள அரசு வறட்டு பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்திடம் அப்பகுதியை ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவி்த்துள்ளார்.
மதுரை நகர பண்பாட்டுக்கழகம் சார்பில் முல்லைப் பெரியாறு அணையை மீட்கும் உரிமை முழக்க விளக்க கூட்டம் மதுரை விக்டோரியா எட்வர்டு திறந்த வெளி அரங்கில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியதாவது,
முல்லைப் பெரியாறு பிரச்சனையை கேரள அரசு அவதூறாக தூண்டி விட்டு மனிதாபிமான மற்ற செயல்களில் ஈடுபடுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அலட்சியப்படுத்திவி்ட்டு, தமிழகத்துக்கு கேடு விளைவித்துக் கொண்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை பறித்துவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழினத்தின் கடைமையாகும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு கரன்சி, ராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல நதிகளையும், அணைக்கட்டுகளையும் உடனே தனது கடுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அப்போது தான் காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியும். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சரியான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் தமிழகமே அணிவகுத்துக் கொண்டிருக்கிறது.

கேரள அரசு தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு ஒருமைப்பாட்டை காக்க முன்வர வேண்டும். ஜவஹர்லால் நேரு போதித்த வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடு எங்கே? இங்கே ஒட்டுமொத்த தமிழர்கள் அனைவரும் கேரளத்துக்கு எதிராக கொந்தளித்து முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க புறப்பட்டுள்ளனர். இது தான் தமிழின உணர்வு, இது கேரளத்துக்கு நல்ல எச்சரிக்கை.

கேரள அரசு உடனே தனது பொய்ப் பிரசாரத்தை விட்டுவிட்டு தமிழக உரிமையை பறிக்காமல் 142 அடிக்கு தண்ணீரை தேக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். புதிய அணையை கட்டினால் நானே நேரடிப் போராட்டத்தில் குதிப்பேன். முல்லைப் பெரியாறுக்கு செல்வேன். எல்லை போராட்டத்தில் ஈடுபடுவேன்.

முல்லைப் பெரியாறு அணை பகுதி மீனாட்சியம்மனுக்கு சொந்தமானது. எனவே, கேரள அரசு வறட்டு பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்திடம் அப்பகுதியை ஒப்படைக்க வேண்டும். இது சிவபெருமானின் ஆணை. இந்த போராட்டத்தில் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்

கருத்துகள் இல்லை: