திங்கள், 26 டிசம்பர், 2011

அமைச்சர் வளர்மதி ராவணனுக்கு (சசிகலா) தென்னந்தோப்பு கொடுக்குமுன்

Viruvirupu 
இருக்கிறது திருவிழா 
சசிகலா வெளியேற்றத்துடன் தொடங்கிய ஆட்சி மற்றும் கட்சி ‘கிளீன்-அப்’, தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அ.தி.மு.க.-வுக்குள் கடும் இறுக்கம் நிலவுகின்றது. காரணம், கட்சியின் சகல மட்டங்களிலும் இருப்பவர்களில் பாதிக்குப் பாதி பேராவது சசிகலா சின்டிகேட்டின் யாராவது ஒரு உறவினரின் ஊடாகவே பதவி பெற்றவர்களாக உள்ளார்கள்.
இப்போது, ராமநாதபுரம், கோவை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, வேலூர் உட்பட, ஒன்பது மாவட்டங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பதவி நீக்கம் செய்து வெளியே அனுப்பியிருக்கிறார். கட்சி உள் விவகாரங்களை அறிந்த ஒருவருடன் பேசியபோது, “இதெல்லாம் ஒரு தொடக்கம்தான், வேறு யார் யாரெல்லாம் கட்டம் கட்டப்படப் போகிறார்கள் என்பதை போகப்போக பாருங்கள்” என்றார்.
ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலாடியில் பத்மநாதன், கமுதியில் மணிமுத்து, ஆலங்குளத்தில் முருகையா பாண்டியன், கடையம் அருணாசலம் என்று தொடங்கி, கோவை, புதுக்கோட்டை, வேலூர் என்று கட்டம் கட்டப்பட்டோர் மாவட்டங்கள் நீள்கின்றன. இந்த அறிவிப்போடு மாவட்டச் செயலாளர்கள் பலருக்கு ஜன்னி கண்டிருக்கிறது.
“தற்போது வெட்டு வாங்கியிருப்பவர்கள், மாவட்ட ரீதியில் அரசியல் நடத்திய ஆட்கள்தான். மாநில அளவில் அரசியல் நடத்தும் ஆட்களின் கழுத்தில் கை வைக்கப்படும் போதுதான் இருக்கிறது திருவிழா” என்று கூறிச் சிரித்தார் நமது அ.தி.மு.க. சோர்ஸ்களில் ஒருவர்.
மாநில அளவில் என்ற பட்டியலில்தான் எம்.எல்.ஏ.-க்களும், அமைச்சர்களும் வருகிறார்கள்.
இதிலுள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், கட்சிப் பதவியில் இருந்து தடாலடியாக தூக்குவது போல, எம்.எல்.ஏ.-க்களை வெளியே வீச முடியாது. அவர்கள் சட்டமன்றத்துக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். அம்மா விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், 5 வருடங்களுக்கு பதவியை விட்டு வெளியேற்ற முடியாது. வேண்டுமானால் டம்மியாக வைத்திருக்கலாம்.
அமைச்சர்களின் விவகாரமும் அதுதான். அமைச்சரவையில் இருந்து வெளியேற்றலாம். ஆனால், அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக தொடர்வார்கள்.
சசிகலா சின்டிகேட் ரெக்கமென்டேஷனில் அமைச்சரான ஆட்களை தூக்கிவிட்டு அமைச்சரவைக்குள் கொண்டு வர வேறு ஆட்கள் வேணுமே! அதற்கும் எம்.எல்.ஏ. பூலில் இருந்துதானே வடிகட்டி எடுக்க வேண்டும்! உள்ளே இருப்பவர்கள் பலர் தொடர்பாக அ.தி.மு.க.-வுக்குள்ளேயே கதை-மேல்-கதையாக உள்ளது.
உதாரணம் வேண்டுமா?
இந்த மாதம் மு.பரஞ்சோதி, செல்வி ராமஜெயம் இருவரும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டபோது, செல்வி ராமஜெயம் கவனித்து வந்த சமூக நலத் துறை அமைச்சராக பா.வளர்மதியும்,  இந்து அறசமய நலத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தனும் நியமிக்கப்பட்டனர்.
இதில் அமைச்சர் வளர்மதி, பதவிக்கு சன்மானமாக சென்னை புறநகர்ப் பகுதியிலுள்ள பெறுமதிமிக்க தென்னந்தோப்பு சொத்து ஒன்று சசிகலா உறவினர் ராவணனுக்கு கைமாற்றப்பட இருந்தது என்று ஒரு ஸ்டோரி-லைன் ஓடுகின்றது.
வளர்மதி அமைச்சராகி விட்டார். ஆனால், தோப்பு இன்னமும் கைமாறவில்லை என்கிறார்கள். அதற்குமுன், ராவணன் கட்சியில் இருந்து காலி!
இனி தோப்பு கொடுக்கத் தேவையில்லை உன்ற சந்தோஷம் அமைச்சருக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், தோப்பு விவகாரம் முதல்வர்வரை போனால், அமைச்சர் தோப்புக்கரணம் போட வேண்டியிருக்குமே!

கருத்துகள் இல்லை: