செவ்வாய், 27 டிசம்பர், 2011

உ.பி. தேர்தலுக்குப் பின் லோக்சபாவுக்கு இடைத் தேர்தல்- மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பதவி- காங். திட்ட


டெல்லி: நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு இடைத் தேர்தலை நடத்த காங்கிரஸ் ரகசியமாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உ.பி. சட்டசபைத் தேர்தல் முடிந்த பினனர், அதன் முடிவைப் பொறுத்து காங்கிரஸ் தனது காயை நகர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவராக ஆக்கவும் அது திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
உ.பி. சட்டசபையின் ஆயுள் காலம் 2012ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதிதான் முடிவடைகிறது. ஆனால் மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாகவே தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியைக் கேட்கிறார்கள் இந்த கணக்காளர்கள்.
கடந்த பொதுத் தேர்தலில் உ.பியில் காங்கிரஸுக்கு வெறும் 20 சீட்களே கிடைத்தன. இந்த முறை அதை விட குறைவாகப் பெற்றால் காங்கிரஸின் கதி அதோ கதியாகும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை விட கூடுதலாகப் பெறுவதற்காகவே ராகுல் காந்தியை வைத்து ஏகப்பட்ட வேலைகளில் இறங்கியுள்ளது காங்கிரஸ்.
முன்கூட்டியே சட்டசபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் அதன் முடிவை வைத்து இடைத் தேர்தலுக்கு தயாராவது என்ற எண்ணத்தில் காங்கிரஸ் இருப்பததாக சந்தேகிக்கப்படுகிறது.
- மேலும், இரண்டு முக்கியமான முடிவுகளை படு வேகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு என்ற ஒரு முடிவு மற்றும் உணவுப் பாதுகாப்பு சட்டம். இந்த இரண்டுமே காங்கிரஸுக்கு உதவும் என்பது அக்கட்சியின் கணக்காக கருதப்படுகிறது.- லோக்பால் மசோதா குறித்து உருப்படியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்த சோனியா காந்தி திடீரென மத்திய அரசின் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அன்னா குழுவினரையும் கடுமையாக சாடியிருப்பது கேளவிகளை எழுப்புகிறது. இந்த மசோதா நிறைவேறுகிறதோ இல்லையோ அதுகுறித்து இப்போது காங்கிரஸுக்குக் கவலை இல்லையாம். மாறாக எதிர்க்கட்சியினர் மத்தியில் வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்தி, ஒருவேளை லோக்பால் மசோதா நிறைவேறாமல் போனால் இந்தக் குழப்பத்தையே காரணமாக காட்டி, நாங்கள் சரியாகத்தான் நடந்து கொண்டோம் என்று மக்கள் மத்தியில் காட்ட காங்கிரஸ் துடிப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை நிறைவேறினால் அந்த வெற்றியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.

- மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தும் திட்டமும் காங்கிரஸிடம் உள்ளதாம். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிறது. ஒருவேளை உ.பி. தேர்தலில் காங்கிரஸால் கணிசமான இடங்களைப் பிடிக்க முடிந்தால் லோக்சபாவுக்கு இடைத் தேர்தலை நடத்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவர் பதவிக்கு அனுப்பி விடவும், ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்குக் கொண்டு வரவும் காங்கிரஸ் திட்டமிடுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் மன்மோகன் சிங்கை கெளரவமான முறையில் பிரதமர் பதவியிலிருந்து அகற்றியது போலும் ஆகும், குடியரசுத் தலைவராக காங்கிரஸுக்கு நட்பானவர் வந்தது போலவும் ஆகும் என்பது காங்கிரஸின் கணக்கு.
- சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீடு என்ற அம்பை எய்த மத்திய அரசு அதே வேகத்தில் அதை நிறுத்தி வைத்துள்ளது. உ.பி. தேர்தலையும், லோக்சபா இடைத் தேர்தலையும் மனதில் கொண்டே இந்த முடிவு என்று சந்தேகிக்கப்படுகிறது.
- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரணைகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பல உத்தரவுகளை கோர்ட்கள் வெளியிட ஆரம்பிக்கும் எனக் கருதப்படுகிறது. எனவே அதற்கு முன்பாகவே இடைத் தேர்தலை நடத்தி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் விரும்புகிறதாம்.

- அடுத்த ஆண்டு பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் என்று கூறப்படுகிறது. கடந்த பொருளாதார சீர்குலைவிலிருந்து தப்பிய இந்தியா இந்த முறை தப்ப முடியாது என்கிறார்கள். எனவே அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதை தேர்தல் கால பிரச்சினையாக்கி எதிர்க்கட்சிகள் விளையாடி விடும் என்பதாலும், மக்களும் அதிருப்தி அடைவார்கள் என்பதாலும் முன்கூட்டியே தேர்தலை நடத்த காங்கிரஸ் விரும்புவதாக தெரிகிறது.

இப்படி பல அறிகுறிகள் இப்போதே தென்படுவதாக கூறுகிறார்கள். அது போக நரேந்திர மோடியைப் பார்த்து காங்கிரஸ் சற்று கவலையுடன் பயப்படுவதாகவும் கூறப்படுகிறது.

2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பல வகைகளிலும் சீர்குலைந்துள்ளதை நரேந்திர மோடி மிகத் தெளிவாக பேசி வருகிறார், சுட்டிக் காட்டி வருகிறார். தனது மாநிலத்தைப் பார்த்தாவது, தனது நிர்வாகத்தைப் பார்த்தாவது மத்திய அரசு நிர்வாகத் திறமையை கற்றுக் கொள்ளட்டும் என்று அவர் பேசி வருவது மக்களை கவர்ந்துள்ளதாக காங்கிரஸ் அஞ்சுகிறது.

2வதாக பல மாநிலங்களிலும் மோடிக்கு ஆதரவாளர்கள் பெருகியுள்ளனர் - பாஜகவைத் தவிர்த்து. இதுவும் காங்கிரஸை கவலை கொள்ளச் செய்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் மோடி முக்கியப் பங்கு வகிப்பார் என்பதும் காங்கிரஸின் இன்னொரு கவலையாக உள்ளது. மோடி தலைமையில் பாஜக அணி திரண்டால் அது நிச்சயம் அக்கட்சிக்கு கூடுதல் வாக்குகளைப் பெற உதவும் என்றும் காங்கிரஸ் கருதுகிறது.

இப்படி பல்வேறு காரணங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்து எதற்கு ரிஸ்க் என்று உ.பி. தேர்தல் முடிவின் அடிப்படையில், லோக்சபாவுக்கு இடைத் தேர்தலை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறுகிறார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம் - யார் கணக்கு பலிக்கப் போகிறதென்று

கருத்துகள் இல்லை: