புதன், 28 டிசம்பர், 2011

தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும்

தலாய் லாமாவின் வாழ்வையும் திபெத்தின் சமகால வரலாற்றையும் ஒருங்கே அளிக்கும் ஜனனி ரமேஷ் எழுதிய தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும் எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. கிழக்கு பதிப்பகம். பக்கம் 192. விலை ரூ.115. புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.
‘தலாய் லாமா என்பதற்குப் பலரும் பல்வேறு அர்த்தங்களை வழங்குகிறார்கள். சிலருக்கு நான் புத்தரின் அவதாரம். சிலருக்கு நான் இறைவன், அரசன். 1950களில் சீன அரசு எனக்கான மரியாதையை அளித்து சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது. ஆனால், 1959ல் திபெத்தின் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து நான் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தபோது அதே சீனா என்னைப் புரட்சிக்காரன் என்று அழைத்தது.’

தலாய் லாமா தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொள்கிறார். பிறகு, அவரே தொடர்கிறார். ‘தலாய் என்பது கடல் என்று பொருள்படும் மங்கோலியச் சொல். லாமா என்றால் திபெத்திய மொழியில், குரு. சிலர் இரண்டையும் இணைத்து தலாய் லாமா என்றால் அறிவுக் கடல் என்று அர்த்தம் அளிக்கிறார்கள். ஆனால் இது சரியான அர்த்தம் இல்லை. என்னைப் பொருத்தவரை ‘தலாய் லாமா’ என்பது நான் வகிக்கும் ஒரு அலுவலகப் பதவிக்கான பெயர். நான் ஒரு சாதாரண மனிதன். திபெத்திய குடிமகன். பௌத்தத் துறவியாக வாழ முடிவெடுத்தவன். என்னை ‘வாழும் புத்தர்’ என்றும்கூட அழைக்கிறார்கள். திபெத்திய புத்த மதத்தில் இது போன்ற நம்பிக்கைகளுக்கு இடமில்லை. தலாய் லாமாவாகத் தேந்தெடுக்கப்படுபவர்கள் தங்கள் மறுபிறவியை முடிவு செய்து கொள்ளும் உரிமை பெற்றவர்கள். அவ்வளவுதான்!’
0
தலாய் லாமா குடும்பத்தினர் வசித்தது மிகவும் பின் தங்கிய பகுதியில் என்பதால் பணப்புழக்கம் அதிகம் இல்லை. பண்டம் மாற்று வியாபாரம்தான் பிரதானம். தோட்டத்தில் அதிகமாக விளைவதைக் கொடுத்து,தேவையான தேயிலை, சர்க்கரை, பருத்தித் துணி, சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொள்வார்கள். உணவுப் பொருள்களுக்கு மாற்றாக, சில சமயம், ஆடு மாடும், குதிரையும் வாங்கி வருவார்கள். மலைப் பகுதிகளில் பயணம் செய்வதற்கு குதிரை வசதியாக இருக்கும்.
வீட்டில் ஆடு, மாடு, கோழி, குதிரைகளுடன் கவரி எருமைகளையும் வளர்த்தனர். கவரி எருமை (Yak) கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடிகளுக்கு மேலும் உயிர் வாழும். பாரம் சுமக்கும், பால் கொடுக்கும் நண்பன். ‘உடலுக்குத் தேவைப்படும் சத்துப் பொருள்கள் நிரம்பிய இந்தப் பாலைக் குடித்து வளர்ந்ததால்தான் இந்த வயதிலும் இன்னும் சுறுசுறுப்புடன் என்னால் மலைப் பகுதிகளில் ஏறி இறங்க முடிகிறது’ என்று தலாய் லாமா அடிக்கடி நினைவுகூர்வது வழக்கம்.
0
அப்போது திபெத் சுதந்தரமாக இருந்தது. 1935 ஜூலை 6 அன்று டக்ஸ்டர் என்னும் கிராமத்தில் வைக்கோல் பரப்பப்பட்ட அழுக்கான தரையில் டென்சின் கியாட்சோ பிறந்தார். அவரது இயற்பெயர் லாமோ தொண்டுப். இதன் பொருள் வேண்டியதைக் கொடுக்கும் தேவதை. வேண்டியதை அவர் கொடுத்தாரா? அவர் ஆரம்ப வாழ்க்கையை ஆராய்ந்தால் ஆச்சரியங்களே காணக் கிடைக்கின்றன. டென்சின் கியாட்சோ பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்புவரை கடுமையான பஞ்சம். ஆனால், இவர் பிறந்தவுடன் பலத்த மழை பெய்து வாய்க்கால் வரப்புகள் நிரம்பி வழிந்தன. காய்ந்துபோன விளை நிலங்கள் முளைத்து எழும்பின. நீண்ட காலமாக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்த தந்தை, குழந்தை பிறந்த சில தினங்களில், எழுந்து நடமாடத் தொடங்கினார். அப்போதே குடும்பத்தினருக்குத் தெரிந்துவிட்டது. இது சாதாரண குழந்தை இல்லை.
0
நாள் முழுவதும் படிப்பு, தியானம், சிறிது நேரம் விளையாட்டு என தலாய் லாமாவின் வாழ்க்கை அமைதியாகவே கழிந்தது. வயது ஏற, ஏற விளையாட்டுகளைக் குறைத்துக்கொண்டு ஆன்மிகத்தில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார். திபெத்திய மதம் மிகுந்த கட்டுக்கோப்பானது, கண்டிப்பானது என்பதால் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கவோ, உலக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவோ வாய்ப்பு இல்லாமல் போனது. தங்கக் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் கிளிபோல் அவரது வாழ்க்கை பொடாலா மற்றும் நோர்புலிங்கா அரண்மனைகளுக்குள்ளேயே முடங்கிப் போனது. இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அரசு அவருக்கு மிரர், இல்லஸ்ட்ரேடெட் லண்டன் நியூஸ் ஆகிய பத்திரிகைகளை அனுப்பி வைத்தது. அதோடு, முதலாம் உலகப் போர் பற்றிய புத்தங்களையும் படித்து தனது ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.
0
தலாய் லாமாவுக்கு நேரு எழுதிய கடிதம்.
‘நானும் என்னுடைய நண்பர்களும் உங்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம். நீங்கள் அனைவரும் பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்ததற்கு எங்கள் அன்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குழுவில் உள்ள அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவும், இந்தியாவில் நீங்கள் அனைவரும் விரும்பும் வரை தங்கவும் இந்திய அரசு அனுமதிக்கத் தயாராக உள்ளது. உங்கள்மீது இந்திய அரசும் மக்களும் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளனர். உங்கள் பாரம்பரிய பெருமைக்குத் தொடர்ந்து நாங்கள் மதிப்பளிப்போம்.
உங்கள் வரவு நல்வரவாகுக!’
அன்புடன்
ஜவாஹர்லால் நேரு
0
இன்றுவரை, தலாய் லாமாவை உலகம் ஓய்வெடுக்கவிடவில்லை.தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 25 வயது இளம் வாலிபராக இந்தியா வந்த தலாய் லாமா இப்போது எழுபத்தி ஐந்து முதியவர். ஆனால், உடல் தளர்ந்தாலும் மனத்தளவில் இன்னும் இளமையுடனும் உற்சாகத்துடனும் வலம் வந்துகொண்டிருக்கிறார். தனது கோரிக்கைகளுக்கு என்றேனும் ஒரு நாள் சீனா செவி சாய்த்துவிடும், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள், திபெத்துக்கு சுய ஆட்சி வழங்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் தலாய் லாமா. அவர் நம்பிக்கையைச் சீனா நிறைவேற்றுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
0
ஜனனி ரமேஷ் www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: