ஞாயிறு, 25 டிசம்பர், 2011

கேரளாவில் தமிழக பஸ் மீது முகமூடி அணிந்த மலையாளிகள் தாக்குதல்: 47 பயணிகள்

செங்கோட்டை: கேரள மாநிலம் ஆலப்புழை அருகே தமிழக அரசு விரைவுப் பேருந்து தாக்கப்பட்டது. இதில் பேருந்தில் பயணித்த 47 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடங்கியதில் இருந்தே கேரளாவுக்கு செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களையும், அவர்களின் வாகனங்களையும் அம்மாநில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்கி வருகின்றனர்.
இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு எர்ணாகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி தமிழக அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்து 47 பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்தை ஓட்டுனர் ராமையா என்பவர் இயக்கினார்.
இப்பேருந்து ஆழப்புழை என்ற பகுதியைத் தாண்டி வழிச்சேரி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி மீது பாறாங்கல்லை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. டிரைவர் ராமையா பேருந்தை நிறுத்தியதால் 47 பயணிகள் உயிர் தப்பினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் முகமூடி அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ராமையா ஆழப்புழை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை தென்காசி வந்த அவர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். பேருந்தில் பயணம் செய்த பயணி மோகன் கூறுகையில், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் கேரளாவில் அதிகரித்து வருவதாகவும், பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: