சனி, 27 ஆகஸ்ட், 2011

அவசரகாலச் சட்டத்தை நீக்கும் முடிவின் எதிரொலியே கிறீஸ் பூதக் கலவரங்கள் : பஷில்


pasil அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் நீக்குவதற்கு முடிவெடுத்ததன் எதிரொலியே மர்ம மனிதன் கிறீஸ்பூதம் கலவரங்களாகும். இது சமாதானத்தை விரும்பாத அரசியல்வாதிகளின் சதி முயற்சியாகும் என்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு மாகாண அதிகாரிகள் எந்த நேரத்தில் எதைச் செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

வடக்கு மாகாண அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று யாழ். பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்,

நாட்டில் அவசர காலச்சட்டத்தை நீக்குவதற்கு எமது அரசாங்கம் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் சமாதானத்தை செயற்படுத்தும் நல்லெண்ணத்தை வெளியுலகத்திற்கு காட்டிவிடும் என்பதற்காக சில அரசியல்வாதிகளால் மர்ம மனிதன் , கிறீஸ்பூதம் கலவரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மர்ம மனிதன் கிறீஸ்பூதம் என்று ஒன்றும் இல்லை. அது வதந்தியேயாகும்.

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் அபிவிருத்திகள் மக்களிடம் சென்றடைவதில்லையெனவும் தேவையான இடத்தில் தேவையானதைச் செய்யாது தேவையற்ற செயலைச் செய்து வருவதாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

இதில் கோட்டை வீதிக்கு காப்பெற் போடப்பட்டும் அதேநேரம் ஆஸ்பத்திரி வீதி எவ்வித செப்பனிடல் இல்லாமலும் விவசாயிகளுக்கு மீன்வலையும் கடற்றொழிலாளர்களுக்கு மண்வெட்டியும் வடக்கு மாகாண அதிகாரிகள் வழங்கி வருகின்றார்கள்.

வீதி அகலமாக்கும் நடவடிக்கைகளின்போது மதிலை முன்னறிவித்தல் இன்றி இடித்து அகற்றிவிட்டு அதற்கான நஷ்டஈடுகளோ முன்னறிவிப்புக்களோ வழங்கப்படவில்லையென யாழ். மாவட்டத்தின் நீதிவான் ஒருவர் முறையிட்டுள்ளார். அவருக்கு நாம் நஷ்டஈடு வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளோம்.

மேலும் வடக்கு மாகாணம் முழுவதும் மக்களின் தேவைக்கேற்ப அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதியின் சிந்தனையாகும். இதற்கேற்ப அனைவரும் செயற்படவேண்டும். அம்பாந்தோட்டை எவ்வாறு முன்னணியிலுள்ளதோ அதேபோல் அனைத்து வடக்கு மாகாணப் பகுதியும் முன்னேற்றமடையவேண்டும். குறிப்பாக உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற்ற பிரதேச சபைகளுக்கு விசேட அபிவிருத்தி கிடைக்கும். இது மட்டும் அல்லாது அனைத்துப் பகுதிகளும் மக்களுக்கான தேவை உணர்ந்து அபிவிருத்தி கிடைக்கும். இதற்காக வடக்கு மாகாண அதிகாரிகள் மக்களின் தேவை அறிந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். _

கருத்துகள் இல்லை: