செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

றிசானா நபீக்கின் விடுதலைக்காக மரணமடைந்த குழந்தையின் பெற்றோருடன் சவுதி சமரச சபை பேச்சுவார்த்தை!


ரியாத்: நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அரப் நியூஸ் பத்திரிகைக்கு கிடைத்த தகவல்களின் படி சவுதி அரச நீதிமன்றம் றிசானா நபீக்கின் விவகாரத்தை இரு தரப்பு சமரசம் மூலம் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த வழக்கு சவுதி அரேபிய உள்துறை அமைச்சு மூலம் அரச நீதி மன்றில் இருந்து ரியாத் ஆளுநரின் கவனத்துக்கு புனித ரமழான் மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டு வரப்பட்டது. சவுதிக்கான இலங்கைத்தூதுவர் அஹ்மத் A ஜவாத் கடந்த வாரம் றிசானா நபீக் விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களை கேட்டறிந்து கொள்வதற்காக றியாத் மாநில பதில் ஆளுநர் இளவரசர் சத்தாம் அவர்களை சந்தித்திருந்தார்.

இச்சந்திப்பின் போது ஆளுநர் இந்த விவகாரம் தற்பொழுது ஆளுநர் அலுவலகத்தின் சமரச குழுவினரின் (Reconciliation Committee) கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையும் குழுவினர் தற்பொழுது குழந்தையின் பெற்றோருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதையும் உறுதி செய்துள்ளார்.

குறித்த சமரசக்குழு வழமையாக முறைப்பாட்டாளருடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மன்னிப்பு ஒன்றை பெற்று கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாகும். இவ்வாறான பேச்சுவார்த்தைகள் மூலம் தண்டப்பணத்துடனான மன்னிப்பு அல்லது தண்டப்பணமின்றிய மன்னிப்பு முறைப்பாட்டாளரிடமிருந்து குற்றம் சுமத்தப்பட்டவருக்கு கிடைக்கும் சாத்தியங்கள் உண்டு.

இவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு வரையறுக்கப்பட்ட கால எல்லை ஒன்று கிடையாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிலவேளைகளில் பேச்சுவார்த்தை ஒரு சில வாரங்களில் முடிவடையும் அதே வேளை மாதக்கணக்கிலும் பேச்சுவார்த்தை காலம் நீடிப்பதுண்டு.

கடந்த வாரம் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலைமையிலான உயர் மட்ட தூதுக்குழு றிசானாவின் விடுதலைக்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது இங்கு நினைவூட்டத்தக்கது.

இவ்விஜயத்தின் போது அமைச்சர் றிசானாவுக்கு மன்னிப்பு வழங்கும் பட்சத்தில் தண்டப்பணம் வழங்க இலங்கை அரசு தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். இதற்கு முன்னர் சவுதிக்கான முன்னாள் இலங்கை தூதுவர் இப்ராஹீம் சாஹிப் அன்சார் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா ஆகியோர் கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோரின் கோத்திர தலைவருடன் றிசானாவின் மன்னிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர்.

சட்ட வல்லுனர்களின் கருத்துகளின் படி றிசானாவின் தண்டனை நீக்கம் கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோரின் மன்னிப்பு மூலமே சாத்தியப்படும்

கருத்துகள் இல்லை: