செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

சித்திரை முதல் நாள்தான் இனி தமிழ் புத்தாண்டு! இலங்கையில் தமிழ் சிங்கள புதுவருட நாளாக

சென்னை: சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வகை செய்யும் புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து அறநிலைய துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: 'தமிழ் மாதமான தை திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும்' என்று கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்டம் கூறுகிறது.

ஆனால், இந்த சட்டம் 'சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வரும் வழக்கத்துக்கு மாறாக உள்ளது' என்று பொதுமக்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வானியல் வல்லுனர்கள், பல்வேறுபட்ட துறைகளில் உள்ள அறிஞர்கள் கூறியுள்ளனர். அவர்கள் இந்த சட்டத்தை நீக்குமாறும் சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் பழமை வாந்த வழக்கத்தை மீட்குமாறும் அரசிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். தை திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பின்பற்றுவதை பொறுத்த அளவில் பொதுமக்கள் இடையே நடைமுறை இடர்பாடுகள், தடை, எதிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும், காலத்தால் முற்பட்ட வழக்கத்தை மீட்டெடுக்கும் வகையில், தை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டத்தை புதிய சட்டம் மூலம் நீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சவுந்தரராஜன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இலங்கையில் தமிழ் சிங்கள புதுவருட நாளாக இரு இனங்களினதும் ஒற்றுமைபட்ட ஒரு வரலாற்று சாட்சியாக சித்திரை புது வருடம் கொண்டாடப்படுகிறது. திமுக அரசு இந்த விடயத்தை கணக்கில் எடுக்காமல் அவசரகோலத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றத்தை அதிமுக அரசு மாற்றி அமைத்தமை வரவேற்க்கக்கூடியதே/

கருத்துகள் இல்லை: