லிபிய அதிபர் மும்மர் கடாபியின் மாளிகை முழுவதும் சுரங்க வழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை லண்டனிலிருந்து வெளியாகும் "தி டெலிகிராப்" நாளேடு வெளியிட்டுள்ளது.
அதிபரின் பாப் அல்-அஸிஸியா அரண்மனையின் கீழே சுரங்க வழிகள் வெட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நகரின் பிரதான பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
1986ம் ஆண்டு மேற்கு பெர்லினில் உள்ள இரவு விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் லிபியாவுக்கு பங்கு உண்டு என்பதற்காக அமெரிக்க படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
அப்போதிலிருந்து இத்தகைய அதிரடி தாக்குதலைச் சமாளிக்க இதுபோன்ற சுரங்கப் பாதைகளை கடாபி அமைத்திருக்கலாம் என்று "டெலிகிராஃப்" தெரிவித்துள்ளது.
சுரங்கப் பாதை முழுவதும் கான்கிரீட் கலவையால் பூசப்பட்டுள்ளது. இதன் வழியாக கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக கார் செல்லும் அளவுக்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனது மாளிகை முழுவதும் உள்ள சுரங்கப் பாதைகளைப் பற்றிய அனைத்து விவரமும் அடங்கிய வரைபடமும் கடாபியிடம் இருக்குமாம். திரிபோலியில் உள்ள அபு சலீம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்குச் செல்லும் பாதையும் இதில் உள்ளது.
தலைநகரை முற்றுகையிட்ட எதிர்ப்புப் படையினர் கடாபியைப் பிடிக்க முயற்சித்தனர். அப்போதுதான் மாளிகையின் அடியில் சுரங்க வழிகள் இருப்பது பற்றிய தகவல் அவர்களுக்குக் கிடைத்தது. இதில் ஒரு சில வழிகள் மூலம் அவர்கள் தேடினர். ஆனால் கடாபி அவர்கள்கையில் சிக்கவில்லை.
சுரங்க வழிகளில் ஆங்காங்கே சில கோல்ப் மைதான கார்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கார்களை கடாபி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறினர். இந்த கார்கள் மூலம் எவ்வித இடையூறுமின்றி நகரை சுற்றிவர கடாபி குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த சுரங்கப் பாதைகள் இரண்டு பேர் தாராளமாக நடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததோடு வலுவான இரும்புக் கதவுகளைக் கொண்டிருந்தன. இந்த சுரங்கவழிகள் எதிர்ப்புப் படையினருக்கு மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக இருந்ததாக "டெலிகிராப்" செய்தி தெரிவிக்கிறது. சில சுரங்க வழிகள் மாளிகைக்குள்ளும், சில சுரங்க வழிகள் முதன் முதலில் கடாபி எதிர்ப்பாளர்கள் திரண்ட பகுதியை ஒட்டியும் உள்ளன.
இவை தவிர நகரின் பல பகுதிகளில் நவீன வசதிகளைக் கொண்ட பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை குண்டு வீச்சுகளை தாக்குப் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இதனுள்ளே தொலைபேசி உள்ளது. ராணுவத்துக்குக் கட்டளையிடுவதற்கு கடாபி இதைப் பயன்படுத்தியிருக்கலாம். சில பதுங்கு குழிகளில் ஆவணங்கள், பெட்டிகள் ஆகியன உள்ளன.
சிலவற்றில் விஷ வாயுவிலிருந்து தப்பிக்க உதவும் முகக் கவசங்கள் உள்ளிட்டவை இருந்தன. ரசாயன வாயு தாக்குதல் மற்றும் அணுக் கதிர்வீச்சு தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன.
எதிர்ப்பாளர்கள் சுரங்கப் பாதை வழியாக தேடுதல் நடத்திய போது சில பகுதிகள் விழுந்து பெயர்ந்தபடி இருந்தன. இதனால் அவர்களால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த சுரங்கப் பாதைகள் இடிந்திருக்கலாம் என தெரிகிறது.
சில சுரங்க வழிகள் துறைமுகத்துக்கும், சில விமான நிலையத்துக்கும் செல்லும் வகையில் வடிவமைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் ஒரு சுரங்க வழி மட்டும் அரண்மனையை ஒட்டி அமைந்துள்ள ரிக்ஸஸ் ஹொட்டலுக்குச் சென்றது.
எந்த நோக்கத்திற்காக கடாபி இந்த சுரங்க வழிகளை உருவாக்கினாரோ அது அவருக்கு உதவியாக அமைந்துள்ளது. எப்படியிருப்பினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு இந்த சுரங்க வழிகள் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோலத்தான் வியத்நாமின் சர்வாதிகாரி ஹோ சி மின்-னின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர் கட்டிய சுரங்கப் பாதை இப்போதும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதைப் போல கடாபி சுரங்க வழிகளும் எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கக்கூடும் என்று "டெலிகிராப்" செய்தி வெளியிட்டுள்ளது.
முகப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக