புதன், 24 ஆகஸ்ட், 2011

ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று தொலைத் தொடர்புத்துறைக்கு நாங்கள் பரிந்துரை ஏதும் செய்யவில்லை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விற்பனையால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.
டிராய் கூறியுள்ள இந்தத் தகவல் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு சாதகமாக அமையலாம் என்று தெரிகிறது.
ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று தனக்கு அதிகாரிகளோ அல்லது தொலைத் தொடர்பு ஆணையமோ பரிந்துரையே செய்யவில்லை என்றும், இதனால் பாஜக ஆட்சியில் பின்பற்றப்பட்ட முதலில் வருவோருக்கு முதலில் என்ற வழிமுறையையே நானும் பின்பற்றினேன் என்றும் ஆரம்பத்தில் இருந்தே ராசா கூறி வருகிறார்.

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 20ம் தேதி சிபிஐக்கு டிராய் அமைப்பின் செயலாளர் ஆர்,கே.அர்னால்ட் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சிபிஐ எழுப்பிய சில கேள்விகளுக்கு அவர் பதில் தந்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2007ம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்றோ, 2003ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைத் தொடர்புத்துறையில் நுழைந்த புதிய நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றோ தொலைத் தொடர்புத்துறைக்கு டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை.
ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதால் எவ்வளவு பணம் அரசுக்குக் கிடைக்கும் என்பதை துல்லியமாக மதிப்பிடுவது முடியவே முடியாத காரியம்,
மேலும் தொலைத் தொடர்பு சேவையையும், ஸ்பெக்ட்ரத்தையும் அரசுக்கு வருமானம் ஈட்டும் வழியாக டிராய் எந்தக் காலத்திலும் கருதியதில்லை. இதன் அடிப்படையில் தான் ஸ்பெக்டரத்தை ஏலம் விடுமாறோ அல்லது கட்டணத்தை உயர்த்துமாறோ அரசுக்கு டிராய் பரிந்துரைக்கவில்லை. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூற முடியாது.
2007ம் ஆண்டில் 6.2 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கும் எந்த விலையையும் டிராய் நிர்ணயிக்கவில்லை. எந்த விலையையும் பரிந்துரைக்கவும் இல்லை. 10 மெகாஹெர்ட்ஸ்க்கு மேல் ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்குமாறு கூறினோமே தவிர வேறு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
டிராய் அமைப்பின் இந்த விளக்கம் ராசாவின் வாதத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 15ல் 3வது குற்றப் பத்திரிக்கை-சிபிஐ தகவல்:
இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும், வரும் செப்டம்பர் 15ம் தேதி 3வது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்வதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
முதலில் ஆகஸ்ட் 31ம் தேதி இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. இந் நிலையில் சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிங்வி, கங்கூலி ஆகியோர் முன் இன்று ஆஜராகி, மேலும் 15 நாள் அவகாசம் கேட்டார்.

அதே நேரத்தில் செப்டம்பர் 1ம் தேதி சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியோர் சார்பில் விசாரணை நிலவரம் குறித்த இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: