சனி, 20 ஜூலை, 2024

மைக்ரோசாப்ட் கோளாறு 2வது நாளாக சென்னையில் விமான சேவை பாதிப்பு

 மாலை மலர் :  மைக்ரோசாப்ட்டின் 'விண்டோஸ்' மென்பொருளை எண்ணற்ற நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் 'விண்டோஸ்' மென்பொருள் இயங்குதளத்தில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது. அதனால் அந்த மென்பொருளை சார்ந்துள்ள தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் முடங்கின.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பாதிப்பு உணரப்பட்டது. இதற்கான காரணத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. எனினும் மைக்ரோசாப்ட்டிலோ அல்லது விண்டோசிலோ எந்த பாதிப்பும் இல்லை. 'கிரவுட்ஸ்டிரைக்' அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இந்த கோளாறு காரணமாக, இணைய பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான 'கிரவுட்ஸ்ட்ரைக்'கை அப்டேட் செய்தவர்களின் கணினி மற்றும் மடிக்கணினிகள் முடங்கியதாக தெரிகிறது. 'மைக்ரோசாப்ட் 365' என்ற செயலியும் முடங்கியது. அவர்களது கம்ப்யூட்டர் திரையில், 'புளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என்ற வாசகம் ஒளிர்ந்தது. இதனால் பயனாளர்கள் குழப்பம் அடைந்தனர். ஐ.டி. ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவித்தனர்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் கோளாறு உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில், யுனைடெட், அமெரிக்கன், டெல்டா ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஆகிய விமான நிறுவனங்களின் ஆன்லைன் செக்-இன், போர்டிங் ஆகிய பணிகள் முடங்கின. இதனால் அச்சேவைகள் கைகளால் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் கோளாறு காரணமாக இன்று 2-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று தற்போது வரை 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இணையதள சேவை ஒரே சீராக கிடைக்காமல் விட்டுவிட்டு வருவதால் இன்றும் பாதிப்புக்கப்பட்டுள்ளது என்றும் இன்று மதியதிற்குள் முழுமையாக சீரடைந்து விடும் என்று நம்புவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, மைக்ரோசாஃப்ட் பிரச்சனைக்கு தீர்வு காண விரைவாக பணியாற்றி வருகிறோம். நெருக்கடிகளுக்கு CrowdStrike மற்றும் தொழில்துறையினர் தீவிரமாக பணிபுரிகின்றனர். வாடிக்கையாளர்களின் கணினிகள் பாதுகாப்பாக மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யநாதெல்லா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: