வியாழன், 13 ஏப்ரல், 2023

Lingusamy – லிங்குசாமிக்கு சிறை தண்டனை.. திரையுலகில் பரபரப்பு

tamil.samayam.con  : சென்னை: Lingusamy (லிங்குசாமி) இயக்குநர் லிங்குசாமிக்கு காசோலை மோசடி வழக்கில் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனந்தம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லிங்குசாமி. மம்மூட்டி, முரளி, அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்றார்.
அதனையடுத்து அவர் இயக்கிய ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் பக்கா கமர்ஷியல் ஹிட்டாகின. குறிப்பாக ரன் படம் சாக்லேட் பாய் என்ற இமேஜிலிருந்து மாதவனை வெளியே கொண்டு வந்தது.


அதேபோல் அவர் இயக்கிய சண்டக்கோழி படம் விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
முன்னணி இயக்குநராக வலம் வந்த லிங்குசாமி சூர்யா, சமந்தா நடிப்பில் உருவான அஞ்சான் படத்தில் சறுக்கினார்.

அப்போதிலிருந்து இப்போதுவரை அவர் வெற்றிப்படமே கொடுக்கவில்லை. சமீபத்தில் அவர் இயக்கிய தி வாரியர் படமும் தோல்வியையே சந்தித்தது.

இதனால் இக்கட்டான சூழலில் இருக்கிறார் லிங்குசாமி. எண்ணி ஏழு நாள்: இதற்கிடையே எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை இயக்குவதற்காக பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் கடனாக பெற்றார் லிங்குசாமி.

கார்த்தி, சமந்தா நடிப்பில் இந்தப்படம் உருவாகவிருந்த இந்தப் படம் ஏதோ காரணங்களால் படப்பிடிப்பு தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது.

லிங்குசாமிக்கு எதிராக வழக்கு: இதனையடுத்து இந்தப் படத்திற்காக பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தக்கோரி பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் லிங்குசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையில் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்ப செலுத்த லிங்குசாமிக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.

பவுன்ஸ் ஆன செக்: இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக 35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பிவிபி நிறுவனத்துக்கு வழங்கினார் லிங்குசாமி.
ஆனால் கணக்கில் போதுமான பணம் இல்லாததன் காரணமாக அந்த காசோலை பவுன்ஸ் ஆனது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிவிபி நிறுவனம் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. லிங்குசாமிக்கு சிறை: சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இயக்கநர் லிங்குசாமி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமனறத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் லிங்குசாமி தரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சைதாபேட்டை நீதிமன்றம் பிறப்பித்த ஆறு மாத சிறை தண்டனை உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
லிங்குசாமிக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: