ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

இந்தியா வரும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்: காரணம் என்ன?

 மின்னம்பலம் -monisha  : உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமின் தபரோவா, நான்கு நாட்கள் பயணமாக இன்று (ஏப்ரல் 9) இந்தியா வருகிறார்.
அவரது இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியையும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரியையும் எமின் தபரோவா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைனுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு, ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைன் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தவறான நடவடிக்கைகள் குறித்தும் இந்திய ஊடகங்கள் மற்றும் சிந்தனையாளர்களிடம் எடுத்துரைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் உக்ரைனுக்கான ஆதரவை அவர் திரட்ட முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது.

அதோடு, உக்ரைனுக்கு இந்தியாவின் உதவியை அவர் கோருவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, போர் காரணமாக சேதமடைந்துள்ள மின் உற்பத்திக்கான உள்கட்டமைப்புகளை சரிசெய்வதிலும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வழங்குவதிலும் இந்தியாவின் உதவியை எமின் தபரோவா கோருவார் என கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும் என எமின் தபரோவா வேண்டுகோள் விடுப்பார் என தெரிகிறது.

மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வரும் ஜூலை மாதம் இந்தியா வர இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ‘அமைதிக்கான வலுவான செய்தி’யை இந்தியா நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் எமின் தபரோவா முன்வைக்க உள்ளார் என்றும் நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை: