வெள்ளி, 14 ஏப்ரல், 2023

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு! கலைஞர் நூற்றாண்டு முனையம் என பெயர் வைப்பு

tamil.oneindia.com  - Noorul Ahamed Jahaber : சென்னை: சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடைந்து இருக்கும் நிலையில், ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருக்கிறார். கலைஞர் நூற்றாண்டு முனையம் என்ற பெயரில் அது பயன்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் வீட்டு வசதித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதளித்து பேசினார். அப்போது அவர், ரூ.393.74 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் ஜூன் மாதம் திறக்கப்படும். கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைப்பார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்து இருக்கும் அயனஞ்சேரி, மீனாட்சிபுரம் சாலைகள் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ஒரு பூங்கா அமைக்கப்படும்." என்றார்
சென்னை மாநகரம் விரிவடைந்துகொண்டே இருப்பதால் சென்னை மற்றும் புறநகரில் கூடுதல் பேருந்து நிலையங்களின் தேவை அதிகரித்து உள்ளது. பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை, புத்தாண்டு போன்ற பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க புறநகரில் பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிட்டப்பட்டது.

அந்த வகையில்தான் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு என புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையன்று பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே கூறி இருந்த நிலையில், பணிகள் முழுமையாக நிறைவடையாத காரணத்தால் அது தாமதமானது. இந்த பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளித்து இருக்கிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை சுமார் 2350 பேருந்துகள் அங்கு வந்து செல்லும் வகையில் மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையமாக இது அமைக்கப்பட்டு உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது‌.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என்று கடந்த ஆண்டு அறிவித்த அமைச்சர் முத்துசாமி, பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், புறநகர் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு புதிய ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

அத்துடன் அத்துடன் சென்னை மெட்ரோ ரயில் சேவை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாகவும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு அதிவிரைவு சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எதிரே மிகப்பெரிய மால் ஒன்றை அமைக்கும் திட்டமும் உள்ளதாம்.

கருத்துகள் இல்லை: