வெள்ளி, 29 ஜூலை, 2022

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஒரு போராட்டமா? India's First Chess Olympiad In Chennai

 சுமதி விஜயகுமார்  : உலக அளவில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளை தங்கள் நாடுகளில் நடத்த அனைத்து நாடுகளும் போட்டி போடும். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை , முதலாவது காரணம் கௌரவம்.
எவ்வளவு சிறப்பாக செய்கிறோம் என்று பாருங்கள் என்று போட்டி போட்டு கொண்டு நடத்துவார்கள்.
 2020 ஒலிம்பிக்ஸ் போட்டி ஜப்பானில் நடைபெற்ற போது ,
அதற்கென விளையாட்டு மைதானங்கள், விருந்தினர்கள் தங்க விடுதிகள் என சிறப்பாக செய்யப்பட்டது. அதன் பிரமாண்டத்தை ஒரு புறம் உலகம் வியந்து பார்க்க ,
மறுபுறம் அங்கு குடியிருந்த மக்கள் தங்கள் வீடு , கடைகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து நின்றார்கள். ஒரு சில மாதங்கள் நடக்கும் ஒரு போட்டிக்கு தங்கள் வாழ்வை ஏன் அழிக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினார்கள்.


வளரும் நாடுகளுக்கு முதலாவது காரணம் சுற்றுலா. இதில் கௌரவத்திற்காக நடத்தும் வளர்ந்த நாடுகளை விட்டுவிடலாம். வளரும் நாடுகளுக்கு சுற்றுலா துறை மிக முக்கியமானது.
அதில் கிடைக்கும் வருமானம் அளப்பரியது. கட்டுமானங்கள் மட்டும் சிறப்பாக பார்த்துக்கொண்டு , அதை மேம்படுத்தி , பராமரித்தாலே போதும் . வேறு பெரிய முதலீடு தேவையில்லை. அந்த தளம் உலக பிரசித்தி பெற்றால் போதும், அதிக முதலீடு இல்லாமல் வ்ருமானம் வந்து கொண்டே இருக்கும். சமீபத்தில் ஸ்ரீலங்கா பொருளாதாரத்தில் வீழ்ந்ததற்கு முக்கிய காரணம் காரோண முடக்கத்தால் சுற்றுலா துறை முடங்கியது. ஒரு நாட்டிற்கு சுற்றுலா துறை அவ்வளவு முக்கியம்.
மூன்றாவதாக ஒரு காரணம் இருக்கிறது. உலகளவில் கிடைக்கும் அங்கீகாரம். உலகில் நீங்கள் எந்த மூலைக்கு சென்றாலும் நீங்கள் இந்தியர் தான். இந்தியாவை தெரிந்த வெளிநாட்டவர்களின் ஒரு 40% பேருக்கு சென்னை என்றால் தெரியும். தமிழ்நாடு என்றால் 1% பேருக்கு கூட தெரியாது.  இந்த ஒலிம்பியாட் சென்னையில் நடப்பதன் மூலம் , தமிழ்நாடு என்னும் பெயருக்கு சிறிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. செஸ் விளையாட்டில் ஆர்வம் இருக்கும் உலக மக்களுக்கு இப்போது தமிழ்நாடு பரிச்சியமாகி இருக்கும். மோடியின் புகைப்படத்தை விளம்பரங்களில் போடவில்லை என்ற ஒரு காரணத்தை தவிர , கண்களில் விளக்கெண்ணையை விட்டு பார்த்துக் கொண்டிருக்கும் எதிர் கட்சிகளுக்கு வேறு ஒரு காரணமும் கிடைக்கவில்லை என்பதே , இந்த போட்டியை எவ்வளவு சிறப்பாக ஸ்டாலின் அரசு செய்திருக்கிறது என்பது தெரிகிறது.

நாளையே காஷ்மீரை போல , தமிழ்நாடு ஒரு தீவிரவாத நாடு என ஒன்றிய அரசு அறிவிக்குமேயானால், உலக அளவில் எதிர்ப்பு குரல்கள் வரவேண்டுமேயானால் முதலில் தமிழ்நாடு என்ற ஒரு மாநில அரசு இருக்கிறது என்பது உலகத்திற்கு தெரிய வேண்டும். இது போன்ற உலகம் கவனிக்கும் போட்டிகளை நடத்துவது, 100 கவன ஈர்ப்பு போராட்டங்களுக்கு சமம். இந்த ஒலிம்பியாடை நடத்துவது உலகளவில் தமிழ்நாட்டிற்கு ஒரு அங்கீகாரம்.

100 கோடி இழப்பீடு என்று கதறுபவர்கள், ஒலிம்பியாட் மூலம் சுற்றுலா துறைக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு என்பதை அரசு தெரிவிக்கும் வரை அமைதி காக்கலாம். பூக்கார அக்காவிற்கும், டீ கடை அண்ணாவிற்கும் சேர்த்து தான் அந்த வருமானங்கள் போகும்.
மினசார உயர்வு உயர்த்திய வேலையில் , இந்த 100 கோடி ரூபாயை மக்களுக்கு செலவு செய்திருக்கலாமே என்றால், உண்மை தான். இன்னும் பசியால் வாடுவோர் வாடி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் பசியை தீர்ப்பதற்கு பதில், நெக்ஸால்பாரிகள் ஆயுதத்திற்கு செலவு செய்வது என்ன அரசியலோ , அது போல தான் இந்த அரசியலும். எந்த ஒரு புரட்சிக்கும் அங்கீகாரம் மிக அவசியம்.

இன்று ஸ்டாலின் அரசு நடத்திக் கொண்டிருக்கும் இந்த ஒலிம்பியாட் போட்டியையும் ஒரு போராட்டமாக தான் பார்க்க முடிகிறது. ஆயுதம் இல்லாமல் பெரியார் , அண்ணா நடத்திய போராட்டங்களை போல. உள்ளூர் வாசிகளுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தெரியும். ' Olypiad is happening in your country ?' என்று யாரவது கேட்கும் போது 'Yes , at my place , Tamilnadu' என்று சொல்லும் போது என் நாட்டின் பெருமையோடு சேர்த்து அதன் அரசியலையும் நான் விதைக்கிறேன்.

பிகு : 100  கோடி ருபாய் வீண் செலவு என்ற விமர்சனத்திற்கு மட்டுமே இந்த பதிவு. Bishop நகராமல் ராணி எப்படி வெளியே வந்தார், மனித உடலுக்கு குதிரை தலை பொருத்துவது பகுத்தறிவா என விமர்சிப்பவர்களுக்கு ஒரு பதில் இருக்கிறது.
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம் - தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை: