சனி, 11 ஜூன், 2022

கடன் ஒரு லட்சம் கந்து வட்டி 5 லட்சம் .. மிரட்டிய குடுமத்தை சேர்ந்த 5 பேர் கைது

 நக்கீரன் -இளையராஜா  : சேலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் வெவ்வேறு புகார்களின்பேரில் ஒரே நாளில் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
சேலம் கருப்பூர் அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கனகா (வயது 56). கருப்பூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர், கருப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ''கருப்பூர் இந்திரா நகரைச் சேர்ந்த ரத்தினம் (வயது 70) என்பவரிடம் கடந்த 2021- ஆம் ஆண்டு, ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு மாதம் 5 ரூபாய் வட்டி வீதம் தொடர்ந்து வசூலித்து வந்தார்.


அசல் மற்றும் வட்டியை மாதந்தோறும் கொடுத்து வந்த நிலையில், இரண்டு மாதமாக கொடுக்க முடியவில்லை. இதையடுத்து ரத்தினம் என் வீட்டிற்கு வந்து வட்டி, அசல் செலுத்தாத காலத்திற்கும் தனியாக வட்டி கணக்கிட்டு அதையும் செலுத்த வேண்டும் என மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியிருந்தார்.

 
இதுகுறித்து காவல் ஆய்வாளர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், ரத்தினம் கந்து வட்டி கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது கந்து வட்டி தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 அதேபோல் சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சுகன்யா ஜோசப் (வயது 39) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது 40), அவருடைய மனைவி கீதா (வயது 38) ஆகியோரிடம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அசல், வட்டி முழுவதும் செலுத்திய பிறகும் கூட மேலும் 6 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து சுகன்யா ஜோசப், கந்துவட்டி தம்பதி மீது கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக பாலாஜி, கீதா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்து வட்டி கேட்டு மிரட்டும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கடந்த சில நாள்களுக்கு முன்பு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில், சேலத்தில் கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒரே நாளில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: