சனி, 11 ஜூன், 2022

சுயமரியாதை..யாழ்ப்பாணத்தில் 1927 ஆண்டு வெளிவந்த திராவிடன் பத்திரிகையின் தலையங்கம் சுயமரியாதை!

 ராதா மனோகர் :    1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து திராவிடன் என்ற பத்திரிகை நான்கு ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது.. வெளியிட்டவர் சுன்னாகம் திராவிட வித்தியா சாலையின் நிறுவனரும் யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்க தலைவருமான வழக்கறிஞர் திரு சு ராசரத்தினம்  அவர்கள்!. திராவிடன் பத்திரிகையில் சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான தொடர் கட்டுரையின் ஒரு பகுதிதான் இப்பதிவு.

இதில் உள்ள விடயங்களை  எல்லாம் அந்த கால சூழ்நிலை அந்த காலத்து தமிழ் நடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பின்னணியில்தான் நோக்க வேண்டும்.
சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான இக்கட்டுரை எனக்கு மிகவும் ஆச்சரியமான ஒரு விடயம்   இப்பத்திரிகையின் ஆசிரிய தலையங்கமாகவே இது வெளிவந்திருக்கிறது   
இலங்கை தமிழரிடையே சுயமரியாதை என்ற சொல்லே ஒலிப்பதில்லை
ஆனால் 1927 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை என்ற தலைப்பில் சில ஆண்டுகள் ஆசிரியர் தலையங்கம் திராவிடன் பத்திரிகையில் வந்திருக்கிறது .. அந்த காலங்களில் சுயமரியாதை என்ற கருத்து ஒலித்திருக்கிறது.
பின்பு சுயமரியாதை கருத்தை மட்டுமல்லாமல் சுயமரியாதை என்ற சொல்லையே ஒழித்து வைத்துவிட்டார்கள் நம்நாட்டு  பெரியவர்கள்   எப்பேர்ப்பட்ட திறமைசாலிகள்!
ஒரு சமூகத்தின் வாழ்வியலில் இருந்து சுயமரியாதையை அடியோடு துடைத்து எறிந்து விட்டார்கள்?
இக்கட்டுரை வெளியானது..  
 திராவிடன்  1927  ஆடி மாதம் 1 ஆம் தேதி
சுயமரியாதை
ஒரு தேசம் முன்னேற்றமடைவதற்கு அநேக விதமான  காரணங்கள் உண்டு
அவைகளில் முக்கியமானது சுயமரியாதை (self respect)
சுயமரியாதையானது பிறரிடம் காசு பணத்தை கொடுத்து வாங்கும் மரியாதையை போன்றதன்று. அது குணத்தையும் நடக்கை வழக்கங்களையும் தொடர்ந்தே வரக்கூடியது.
மற்றவிதமான மரியாதைகள் பெரும்பாலும் படிப்பினாலும்.
படியாவிட்டாலும் அரைகுறையாக ஆங்கிலம் பேசுவதாலும் வரும் மரியாதை என்று கருதப்படும் போலி மரியாதையே.
ஒருவர் தனக்கு காசு வந்தவுடன் பெற்றோரையும் உறவினரையும் பாலிய சிநேகிதர்களையும் இன்னுமுள்ள மற்ற சனங்களையும் கருதாது நடந்து பிறர் தனக்கு மரியாதை செய்கிறார்கள் என்று கருதி இறுமாப்புடன் நடப்பது மரியாதை பெருகிறதுமல்ல,
பிறர் மரியாதையுடன் நடப்பதுமல்ல.

எங்களில் ஒவ்வொருவரும் தான் தான்மனிதன்  மற்றவனுக்கு மனிதன் மிருகமல்ல,
தன்னுடைய கதைக்கும் அவனுடைய கதைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை   
தன்னுடைய ரத்தம் சிவப்பு அவனுடைய இரத்தம் சிவப்பு ....

பிற ஜீவன்களில் அன்பு வைக்கவேண்டும்  பிரத்தியான் கேட்டாலும் தான் நல்லாயிருந்தால் போதுமென கருதப்படாது,

இவ்விதமாய் பிறத்தியானுக்கு நட்டமில்லாமலும் மன வருத்தமில்லாமலும்  மானக்கேட்டை வருவிக்காமலும்,
யாவராலும் கொண்டாடப்படத்தக்க குணத்தைதான் சுயமரியாதை எனலாம்
அதை பெறுவதற்கு முக்கியமாக கல்வி வேண்டும்.

கல்வி என்பது  10 , 20,  30 உழைக்கும் பொருட்டு பள்ளி சென்று மனப்பாடம் செய்யும் பாடங்கள் அன்று.
 எக்கல்வியினால் பகுத்தறிவு ஏற்படுகிறதோ அதே கல்வி.
இக்கல்வியை கொண்டு நல்லொழுக்க முயல வேண்டும் .

கல்வியின்றி சுகாதாரமின்றி இருக்க வீடின்றி தண்ணீரையோ கள்ளுத்தண்ணீரைல்ல.. கடன் வாய்ப்பட்டு  மதியின்றி. குடித்து வெறித்து  கத்தி பொல் கொண்டு அடித்தோ மண்டை உடைத்தோ, பேச்சுக்கு முன் வில்லு கத்தியை கொண்டு குத்தியோ? கோட்டோடு வாய்ப்பட்டு. பிடிபடுமுன் கொட்டுப்புலிகளோடு வாய்ப்பட்டொ *(touts) உள்ளதையும் இழந்து  மிருகத்தனமான சீவியம் இன்றி,

முயற்சி செய்து ஊக்கத்துடனுழைத்து குடியை விட்டு தேகம் வீடு முதலியவற்றிற் துப்பரவோடு வைத்து பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து ....
பிறர்க்கு அன்பு வரும் விதமாக நடப்பதுவும் .. எல்லோரும் பிரதானமாக கையாளவேண்டிய முதல் கொள்கையாம் ..

மேற்கண்ட பதிவில் பல இடங்களில் தெளிவற்று உள்ளது . சுமார் நூற்றாண்டு நிரம்பிய இந்த கட்டுரையின் மூல பிரதியில் இருந்து போட்டோ பிரதி பி டி எப் பதிவுதான் என் பார்வைக்கு கிட்டியது
கூடுமானவரை கவனமாக பதிவு செய்துள்ளேன்

கருத்துகள் இல்லை: