செவ்வாய், 7 ஜூன், 2022

இலங்கையில் யூரியா உரம் ரூ.1,500 விலையில் இருந்து ரூ 42,500 ஆக எகிறியது! : நெல் விளைச்சல் என்ன ஆகும்?

 BBC Tamil : இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வருடம் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவானதே - தற்போதைய சிறுபோகத்தில் கிடைக்கும் என, விவசாய திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதனால் மக்களின் பிரதான உணவுப் பொருளான அரிசிக்கு - அடுத்து வரும் மாதங்களில் பாரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, நெற் செய்கைக்கான செலவுகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன. முன்னர் சாதாரணமாக ஒரு ஏக்கரில் - நெற் செய்கை மேற்கொள்வதற்கு 40 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் செலவானதாகவும், தற்போது அந்தத் தொகை 01 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகவும் - ஓய்வுபெற்ற ஆசிரியரும் நெற் காணி உரிமையாளருமான எஸ்.ஏ. றமீஸ் தெரிவிக்கின்றார்.

காணியை உழுவதிலிருந்து, விதைப்பு, களை நாசினி, பசளை, கிருமி நாசினி ஆகியவற்றுக்கான செலவுகள், அறுவடைச் செலவுகள் மற்றும் கூலியாட்களுக்கான கொடுப்பனவுகள் அனைத்தையும் உள்ளிடக்கியதாக மேற்படி செலவுத் தொகை அமையும் எனவும் அவர் கூறுகிறார்.

ரசாயனப் பசளை தடை செய்யப்பட்டமையினால், கடந்த வருடம் பெரும்போகத்தில் - நெல் உற்பத்தி பாரிய அளவு வீழ்ச்சியடைந்தது. இதனையடுத்து, மீண்டும் ரசாயனப் பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளபோதும், அவற்றுக்கான விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக கடந்த காலத்தில் 1500 ரூபாய்க்கு கிடைத்த ஓர் அந்தர் (50 கிலோ) யூரியா பசளையினை, இம்முறை 42,500 ரூபாவுக்கு தான் கொள்வனவு செய்ததாக நெற்காணி உரிமையாளர் றமீஸ் குறிப்பிட்டார்.


அதேபோன்று டீசல் ஒரு லிட்டர் விலை 400 ரூபா வரையில் அதிகரித்துள்ளமையினால் உழவு, அறுவடை மற்றும் விவசாயப் பொருட்களை ஏற்றியிறக்குவதற்கான போக்குவரத்துச் செலவுகளும் பாரியளவில் அதிகரித்துள்ளன எனவும் றமீஸ் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே, கடந்த காலத்தில் ஒரு ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்வதற்காக செலவிடப்பட்ட தொகை, தற்போது 3 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது இவ்வாறிருக்க, இம்முறை சிறுபோக நெற் செய்கையினை 5 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும், இதுவரையில் 3 லட்சத்து 65 ஆயிரம் ஹெக்டரில் மாத்திரமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. இதேவேளை இம்முறை சிறுபோகத்தில் 6 லட்சத்து 43 ஆயிரம் மெற்றிக் டன் நெல்லை விளைச்சலாகப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் கூறுகின்றது.

இந்த விவரங்களின் அடிப்படையில், கடந்த சிறுபோக நெல் விளைச்சலுடன் ஒப்பிடும் போது, இம்முறை 14 லட்சம் மெட்ரிக் டன் குறைவாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டு சிறுபோகத்தில் - நாடு முழுவதும் 501,467 ஹெக்டேரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 20 லட்சத்து 88 ஆயிரத்து 202 மெட்ரிக் டன் நெல் விளைச்சலாகக் கிடைத்தது. இதில் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவு விளைச்சல் பெறப்பட்டது. அது 3,13,708 மெட்ரிக் டன் ஆகும். மொத்த உற்பத்தியில் 15 சதவீத விளைச்சல் - அம்பாறை மாவட்டத்தில் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், இம்முறை அம்பாறை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லினையே விளைச்சலாகக் பெறுவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவிக்கின்றார். ரசாயன உரங்களுக்கான விலையேற்றம் மற்றும் அவற்றுக்கான தட்டுப்பாடு காரணமாக இம்முறை நெல் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் 68,500 ஹெக்டேரில் இம்முறை நெற் செய்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தபோதும், 63,000 ஹெக்டேரில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தகவலளித்தார்.

விளைச்சல் குறைவுக்கான மற்றொரு காரணம்

கடந்த காலங்களில் யூரியா ஓர் அந்தர் (50 கிலோ) 1500 ரூபாவுக்குக் கிடைத்தமையினால், ஒரு ஏக்கர் நெற் பயிருக்கு மூன்று தடவைகளில் மூன்று அந்தர் பசளையினை தாம் இட்டு வந்ததாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தஸ்லீம் கூறுகின்றார். ஆனால், இப்போது மூன்று தடவைகளுக்கும் 1 அந்தர் பசளையினையே இடவேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ரசாயன உரத்துக்கான பாரிய விலையேற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு குறைந்தளவு பசளை - பயிர்களுக்கு வழங்கப்படுகின்றமை காரணமாகவும், இம்முறை நெல் விளைச்சலில் வீழ்ச்சியேற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நெல் விளைச்சல் குறைவடையும் போது, அதன் விலை சந்தையில் அதிகரிக்கும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அரிசிக்கான விலையும் - பல மடங்கு அதிகரிக்கும் நிலை உருவாகும்.

கடந்த போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல், உலர்த்தி சேமிக்கப்பட்ட நிலையில் 66 கிலோகிராம் எடை கொண்ட ஒரு மூட்டை தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகிறது. இதேவேளை தற்போதைய சிறுபோகத்தில் அறுவடை செய்யப்படும் நெல் 7000 ரூபாவுக்கும் அதிகமான தொகைக்கு விலைபோவதாக - நெல் கொள்வனவாளர்கள் கூறுகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சினைகளுக்கு முந்தைய காலங்களில், நெல் ஒரு மூடை 04 ஆயிரம் ரூபாவுக்கு மேல் விற்பனையானதில்லை.

இந்த சூழ்நிலையில் சாதாரண அரிசி ஒரு கிலோ 224 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள அரிசி ஆலையொன்றின் உரிமையாளர் ஏ.எல். பதுறுதீன் கூறுகின்றார். தற்போதைய நெருக்கடிக்கு முன்னர் ஒரு கிலோ அரிசியை 90 ரூபாய்க்குத் தாம் விற்பனை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

"நாட்டில் பஞ்சம் ஏற்படப் போகிறது என்றும் அரிசியின் விலை கடுமையாக உயரும் என்றும் முக்கியமான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பகிரங்கமாக கூறுகிறார்கள். இதனால் அச்சமடையும் மக்கள், நெல்லினையும் அரிசியையும் அதிகளவில் கொள்வனவு செய்து சேமிக்கத் தொடங்குகின்றனர். இந்த நிலைமையினாலும் நெல் மற்றும் அரிசியின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன" என்கிறார் பதுருதீன்.

கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, நாட்டில் நெல் உற்பத்தி மூன்றில் இரண்டு மடங்கு இம்முறை வீழ்ச்சியடையும் என விவசாயத் திணைக்களமே எதிர்வு கூறியுள்ள நிலையில், அரிசிக்கான தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் கடுமையாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையைக் கட்டுப்படுத்துவதென்றால் வெளிநாடுகளிலிருந்து அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்து, அதனை குறைந்த விலையில் சந்தைக்கு விட வேண்டும் என்கின்றார் அரிசி ஆலை உரியைாளர் பதுருதீன்.

அதனைச் செய்வதற்கு பெருமளவில் டாலர் தேவைப்படும். அரசு கஜானா கிட்டத்தட்டட காலியாகியுள்ள நிலையில், டாலருக்கு அரசாங்கம் எங்கே போகும் என்பதுதான் சுற்றிச் சுற்றி வரும் கேள்வியாக உள்ளது.

கருத்துகள் இல்லை: