புதன், 8 ஜூன், 2022

இலங்கையின் உண்மை நிலை பற்றி பிரதமர் ரணில் ஆற்றிய விசேட உரை!

 எழுகதிர்  : இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் உரையில் வெளியான முக்கியமான 20 விடயங்களை சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது
01.எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகமானது, எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு மிக சிரமமானது.
02. இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு மாத்திரம் 500 மில்லியன் டாலர்கள் எரிபொருளுக்காக செலவிட வேண்டியுள்ளது.
03.எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளமையினால், இந்த ஆண்டு இறுதிக்குள் 40 வீத விலை உயர்வு ஏற்படக்கூடும். அதனால், எரிபொருளுக்கு கூப்பன்களை வழங்கும் யோசனையை நிராகரிக்க முடியாது.


04.எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் 3,300 மில்லியன் டாலர்களை தேடிக் கொள்ள வேண்டியது கட்டாயம்.
05.எரிவாயு இறக்குமதிக்காக ஒரு மாதத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட வேண்டியுள்ளது. அடுத்த 6 மாத காலத்திற்கு எரிவாயு இறக்குமதிக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றது.

06.எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

07.அத்தியாவசியமற்ற பயணங்களை இயலுமான வரை மட்டுப்படுத்திக் கொள்ளவும்.

08. கடினமாக மூன்று வாரங்களின் பின்னர், எரிபொருள், எரிவாயு மற்றும் உணவை சிரமமின்றி வழங்க முயற்சிக்கின்றோம்.

09.அடுத்த பெரும் போகத்தை வெற்றியடையச் செய்வதற்கு இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் அந்த அறுவடை பிப்ரவரி 2023 இறுதியில் கிடைக்கும். அரிசியைப் பற்றி பார்த்தால், நம் நாட்டின் வருடம் ஒன்றிற்கான அரிசியின் தேவை 2.5 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். ஆனால் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி மட்டுமே கையிருப்பில் உள்ளது. இந்த நிலை நெல் மற்றும் பல பயிர்களுக்கும் பொதுவானது. அதனால், சில மாதங்களில் உணவு விடயத்தில் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். நமது அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்ய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்கு 150 மில்லியன் டாலர் அளவில் செலவாகும்.

10. மருத்துவம் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு அந்த குழுக்களும் நாடுகளும் கணிசமான ஆதரவை வழங்குவதால், அடுத்த ஆறு மாதங்களுக்கு சுகாதாரத்திற்காக பெரிய அளவிலான அந்நியச் செலாவணி இலங்கைக்கு தேவையில்லை.

11.அடுத்த ஆறு மாதங்களில் வாழ்க்கையை சாதாரணமாக வைத்திருக்க 5 பில்லியன் டாலர்கள் தேவை.

12.மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இணையாக ரூபாயை பலப்படுத்த வேண்டும். ரூபாயை வலுப்படுத்த இன்னும் 5 பில்லியன் டாலர் தேவை.

13.ஆறு மாதங்களுக்கு நாட்டை நிர்வகிக்க 6 பில்லியன் டாலர்களை தேட வேண்டும்.

14. 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய வரி முறை ஒழிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் 6.6 பில்லியன் ரூபா வருமானத்தை இழந்துள்ளது. அதுதான் இலங்கை பொருளாதாரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம். எனவே, உடனடியாக 2019 வரி முறைக்கு திரும்ப வேண்டும். நாம் விழுந்த இடத்திலிருந்து நம் உயிர்த்தெழுதலைத் தொடங்க வேண்டும்.

15.சமீப காலமாக காலவரையின்றி பணம் அச்சடிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த உண்மை. 2020 முதல் 2022 மே 20ம் திகதி வரை 2.5 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.

16.2023ஆம் ஆண்டு சவாலை எதிர்நோக்க வேண்டும். 2024ம் ஆண்டு நிதி ஊக்குவிப்பு மூலம் பொருளாதார ஊக்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை பெற வேண்டும்;. 2025ம் ஆண்டிற்குள் வரவு செலவுத்திட்டத்தை சமநிலைப்படுத்துவது தமது இலக்கு.

17. எதிர்வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பகிரங்க வேண்டுகோள் விடுக்க ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவி கோருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம், உணவு, விவசாயம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு நான்கு மாத காலத்திற்கு 48 மில்லியன் டாலர்களை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

18. இலங்கைக்கு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இறுதி இலக்கு. சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவான 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே இலக்காகும்.

19. சில அரசு ஊழியர்களுக்கு செய்ய வேண்டிய கடமை இல்லை. எனவே, பொதுப்பணித்துறை முழுமையாக சீரமைக்கப்பட்டு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். எங்கள் நோக்கம் ஒரு குடிமகன் அவர்களின் வாழ்நாள் முழுவதும் உடனடி மற்றும் திறமையான சேவைகளை தொந்தரவு இல்லாமல் பெற உதவும் ஒரு பொது சேவையை உருவாக்குவதாகும்.

20. அவநம்பிக்கையாளர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிரமத்தைப் பார்க்கிறார்;. நம்பிக்கையாளர் ஒவ்வொரு சிரமத்திலும் வாய்ப்பைப் பார்க்கிறார்." இக்கட்டான நேரத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நம்பிக்கையுடன் நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் முழு மனதுடன் பொறுப்பேற்போம். இவையே ரணில் தனது உரையில் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை: