செவ்வாய், 22 ஜூன், 2021

"எல்லா மாவட்டங்களிலும் மகளிர் விடுதி அமைக்கப்படும்" பாய்ச்சல் வேக முன்னேற்றத்தை நோக்கிய அறிவிப்பு

May be a cartoon

Karthikeyan Fastura  : தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு எடுக்கும்போது ஒரு டூத் பேஸ்ட் கதை சொல்வேன்.
அதாவது ஒரு டூத் பேஸ்ட் கம்பெனி தங்களது வியாபாரத்தை கூட்டுவதற்கு சரியான யுத்திகள் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு பரிசு என்று அந்நிறுவன ஊழியர்களிடம் அறிவித்தார்கள்.
அதில் பலரும் பலவிதமான யோசனைகளைக் தெரிவித்திருந்தார்கள்.
பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.
நடிகை நடிகர்களை அல்லது கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் அல்லது ஐந்து வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போன்ற இலவச இணைப்புகள் கொடுக்க வேண்டும்.
விலை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கவர்ச்சிகரமான பேக்கிங் செய்ய வேண்டும்.
இப்படி எண்ணற்ற யோசனைகள் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் பரிசு கிடைத்தது ஒரு பெண்ணிற்கு. அவர் கொடுத்த யோசனை வேறு யாரும் கொஞ்சமும் சிந்தித்து பார்த்திராத ஒன்று.


டூத்பேஸ்ட்டின் வாய்ப்பகுதியை சற்று அகலப்படுத்தினால் தினந்தோறும் பயன்படுத்துபவர்கள் அதை அதிகமாக பயன்படுத்தும் போது டூத் பேஸ்ட் விரைவில் காலியாகி மீண்டும் வாங்குவார்கள்.
மிக எளிதான, செலவே இல்லாத ஆனால் அற்புதமான யோசனை. நிறுவனத்தின் வருவாயில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.
மாநில நிதி வருவாய் திட்டங்களுக்கு எண்ணற்ற யோசனைகளை அரசு வைத்திருக்கலாம். கடந்த காலத்தில் பெண்களுக்கு நாப்கின் இலவசமாக பள்ளி கல்லூரிகளில் கொடுத்தது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. நேற்று ஆளுநர் அறிக்கையில் ஆளும் திமுக அரசின் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வந்தபோது அதில் "எல்லா மாவட்டங்களின் தலைநகரங்களிலும் பெண்களுக்கென்று தனியாக மகளிர் விடுதி அமைக்கப்படும்" என்று அறிவித்திருந்தது மிக மிக அற்புதமான திட்டமாக பார்க்கிறேன்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது கிராமத்தில் படித்து வளர்ந்த பெண்கள் வேலைக்கு செல்ல தடையாக இருந்த நகரங்களில் உள்ள சர்வைவல் சிக்கல் பாதியாக குறைக்கப்படுகிறது. நிறைய படித்த ஊரகப்  பெண்கள் வேலைக்கு சென்று குடும்பப் பொருளாதாரம் வளர்வதற்கு பெற்றோர்களுக்கு பெரும் உதவியாக இருப்பார்கள்.
எனது வேண்டுகோள் எல்லாம் இவை தனியார் மகளிர் விடுதிகளை விட சிறப்பாகவும் சுத்தமாகவும் செயல்பட வேண்டும். இதில் எந்த வகையிலும் ஊழல் நடந்து விடக்கூடாது. கட்டடங்கள் உறுதியாக அமைக்கப்பட வேண்டும் நல்ல கான்ட்ராக்டர் இடம் இந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும். அது சரியாக கண்காணிக்கப்பட வேண்டும்.
பல சமயம் பல நல்ல திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டாலும் அங்கு ஊழல் நடைபெறும்போது அவை மோசமான அடையாளமாக மாறி விடும்.
அரசு மருத்துவமனைகள் கட்டவும், பள்ளிக்கூடங்கள் கட்டவும் போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கி செயல் படுத்தினாலும் திட்டத்தை செயல்படுத்தும் இடத்தில் உள்ள  கான்ட்ராக்டர்கள் அதை உறுதியாக கட்டாமல் அந்தக் கட்டிடங்கள் மிக விரைவில் பொலிவிழந்து ஏனோ தானோ என்று இருக்கும். அதனால் தான் அரசு மருத்துவமனைகளையும் அரசு பள்ளிகளையும் மக்கள் விரும்பாமல் பணத்தைச் செலவழித்து தனியாரிடம் செல்கிறார்கள்.
இந்தத் திட்டம் அது போல நடந்து விடக்கூடாது என்று  கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் மிகப்பெரிய அளவில் எதிர்காலத்தில் மறைமுக வரிவருவாயை மாநில அரசுக்கு கொண்டுவரும் திட்டமாக இது செயல்படும். இதனுடன் பெண்களுக்கான மகளிர் பேருந்து வசதியும் இணையும்போது பெண்களின் கையில் பொருளாதாரம் நன்றாக சேரும். அதன் விளைவாக மக்களின் சேமிப்பு உயரும். மாநிலத்தின் ஜிடிபி உயர்வதற்கு காரணமாக இருக்கும்.
இது போன்ற மிக நுணுக்கமான எளிமையான அரசு திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் அரசு அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதுவும் மாநில வருவாயை எதிர்காலத்தில் கூட்டும் என்பது உறுதி.

கருத்துகள் இல்லை: